கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம்

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம்
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்
(சங்கீதம் 31:24)
கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர்.
அவருடைய நேர அட்டவணையில் சீக்கிரம் என்றோ, தாமதமென்றோ அகராதி கிடையாது.
குறித்த நேரத்தில் செய்ய வேண்டியதை அவர் நிச்சயமாக செய்வார்.
அதை நாம் அநேக நேரங்களில் உணர்வதில்லை. நம்முடைய கால அட்டவணையின்படி தாமதமாகிறதே, நான் விரும்பினது இன்னும் நடக்கவில்லையே என்று வருந்துகிறோம். சோர்ந்து போகிறோம்.
வேதத்தில் தேவன் தாமதித்து செய்த அநேக சம்பவங்களில் அவருடைய மகிமையை அவர் வெளிப்படுத்தினார்.
சாத்ராக், மேஷாக்,ஆபெத்நேகோ இவர்கள் ஏழு மடங்கு எரியும் சூளைக்கும் வீசப்பட்டபோது, தேவன் அவர்கள் நெருப்பில் விழுந்து விடாதபடி தடுக்கவில்லை. அவர்கள் அக்கினியில் வீசப்பட்டார்கள். ஆனால் அவகளின் தலைமுடியிலிருந்து கருகின வாடை கூட இல்லாமல், தேவன் அவர்களை உயிரோடு காத்து, வெளிப்பட பண்ணினார். பெரிய அற்புதத்தை செய்தார்.
தானியேல் கர்த்தரை நோக்கி ஜெபிக்க கூடாது என்கிற இராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல், தேவனுக்கு பயந்து தொடர்ந்து ஜெபித்தபடியினால், சிங்க கெபியில் தூக்கி வீசப்பட்டார். பிரியமான புருஷனாயிருந்தாலும், தேவன் அவரை சிங்க கெபியில் விழாதபடி காக்கவில்லை. விழுந்த பிறகே சிங்கங்களின் வாய்களை கட்டி போட்டு, ஒரு இரவு முழுவதும் சிங்க கெபியில் தங்க வைத்து, உயிரோடு வெளிவர செய்தார்.
கண்டவர்கள் ஆச்சரியப்படும்படி இங்கும் பெரிய அற்புதம் நடந்தது.
லாசரு மரித்து நான்கு நாட்கள் ஆனப்பிறகே இயேசுகிறிஸ்து சீஷர்களோடு, பெத்தானியா சென்றார். சுகவீனமாக இருக்கும்போதே அவர் சென்றிருந்தால், அவருடைய அங்கியை தொட்டே லாசரு குணமடைந்திருக்க முடியும். ஆனால் மரித்து, நாற்றம் வீசி, அழுகும் நிலையில் இருந்த உயிரற்ற சடலத்தை உயிர் பெற செய்து, பெரிய அற்புதத்தை செய்தார். குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி வர செய்தார்.
தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியாய் அதினதின் நேரத்தில் செய்பவர். அவருடைய நாமத்திற்கு மகிமையை கொண்டுவரும்படியாக பெரிய அற்புதங்களை செய்து, மகிமைப்படுபவர்.
அவர் சொல்ல ஆகும், கட்டளையிட நிற்குமே, அபோது நாம் ஜெபித்த உடனே அவர் பதில் கொடுக்க முடியாமற் போகவே முடியாது. அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் நம் வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாறிவிடும். ஆனால் அவர் தாமதித்து கொடுக்கும் ஆசீர்வாதம் நித்திய மகிமையையும், பெரிய அற்புதத்தையும் செய்யும்.
நாம் தான் பதில் வர தாமதம் ஆனவுடன் குழம்பி போய், கர்த்தர் நம்மை மறந்து விட்டாரா? எனக்கு நன்மை செய்ய மாட்டாரா என்று சந்தேகப்படுகிறோம்.
ஆனால் அவருடைய நேரத்திற்காக நாம் பொறுமையுடன் காத்திருக்கும்போது, நிச்சயமாக அற்புதமான, நன்மையான, அதிசயமான காரியத்தை நாம் பெற்று கொள்வோம்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள் என்ற வசனத்தின்படி நாம் சோர்ந்து போகாமல் அவர் மேல் திட நம்பிக்கை உள்ளவர்களாக இருந்து, நன்மைகளை பெற்று கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தேவன் தாமதிக்கிறார் என்று நாங்கள் சோர்ந்து போய் விடாதபடி, நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை உணர்ந்து, உம்முடைய நேரத்திற்காக காத்திருக்க கிருபை செய்யும்.
நீர் உம்முடைய சித்தத்தின்படி செய்யும்போது அது மற்றவர்கள் கண்களுக்கு முன்பாக பெரிய அதிசயமாக, அற்புதமாக விளங்கும் என்பதையும், உமக்கு மகிமையை கொண்டு வரும் என்பதையும் உணர கிருபை செய்யும்.
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.