தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ – சிறுவர் கதைகள்

Share this page with friends

ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. நீண்ட லாக்டவுண்க்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. வித்தியாசமான சூழல், புதுமையான அனுபவம், நீண்ட நாட்களுக்கு பின் சக நண்பர்களை பார்க்கிற வாய்ப்பு நல்லா என்ஜாய் பண்ணுங்க. அதே நேரம் ரொம்ப கவனமாகவும் இருக்கனும். இன்னும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு தான் இருக்கிறது. மாஸ்க் கட்டாயம் போடுங்க, அடிக்கடி கை, கால், முகம் கழுவுங்க, யாரையும் தொட்டு பேச விரும்பாதிருங்க.. ஓக்கே வா.. உங்களுக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறோம். நீங்களும் உங்களைபோன்ற சிறுவர்களுக்காக ஜெபிக்க மறவாதிருங்க.. ஓக்கே ரொம்ப பேசி உங்க நேரத்தை வீணாக்காம நேரடியா கதைக்குள்ள வருகிறேன். எல்லாரும் கதை கேட்க ரெடியா?

இங்கிலாந்தில் ஒரு கடவுள் பக்தி உள்ள ஒரு பணக்கார முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அந்த முதலாளி தனது வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் தனது பிறந்தநாள் அன்று ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என நினைத்தார். பின்னர் அதின்படியே பிறந்தநாள் அன்று காலையிலேயே ஒரு மேஜையில் பரிசு பொருட்களை அடுக்கி வைத்து தனது வேலைக்காரர்கள் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.

வேலைக்காரர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்து தங்கள் முதலாளிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் முதலாளி அவர்களை ஏற்றுக்கொண்டு, மேஜையை காட்டி இதிலே பல பரிசு பொருட்களை வைத்திருக்கிறேன். விருப்பமானதை எடுத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

குதிரைகாரர் வந்து எனக்கு பணம் தான் தேவை என்று பண முடிச்சை எடுத்தார். தோட்டக்காரர் எனக்கு வாசிக்க தெரியாது நானும் பண முடிச்சையே எடுத்துக்கொள்கிறேன் என்றார். பின்னர் காவல்காரர் வந்து எனக்கு பார்வை குறைவு ஏற்பட்டிருக்கிறது. ஆப்ரேஷன் செய்ய பணமில்லாமல் இருக்கிறேன். ஆகவே நானும் பண முடிச்சையே எடுத்துக்கொள்கிறேன் என கூறி எடுத்தான். அவரை தொடர்ந்து சமையற்காரி அக்கா வந்து என் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க பணமில்லாமல் இருந்தேன். கோடி நன்றி ஐயா என கூறிக்கொண்டே ஒரு பண முடிச்சை எடுத்தாள். இப்படியாக ஒவ்வெருவரும் பண முடிச்சுகளையும் பல்வேறு உயர்தரமான பொருட்களையும் வரிசையில் வந்து எடுத்தார்கள்.

கடைசியாக பத்திரிக்கை போடும் சிறுவன் வந்தான். மேஜையை சுறிலும் பார்க்கிறான். ஏராளமான பண முடிச்சுகளும் விலையுயர்ந்த பொருட்களும் இருப்பதை பார்த்து திகைத்தான். மேஜையின் ஓரத்தில் ஒரு பைபிள் இருப்பதையும் கண்டான். இந்த ஏழை சிறுவன் பல நாட்களாக தனக்கு ஒரு பைபிள் வேண்டுமென்று ஜெபித்துக்கொண்டிருப்பதால் அவனது கண்கள் பைபிளையே உற்றுப்பார்த்தது. முதலாளி அவனை பார்த்து உனக்கு பைபிள் வேண்டுமா? அல்லது 100 பவுன் பண முடிச்சு வேண்டுமா? எது வேண்டும்மானாலும் எடு என்றார். உடனே சிறுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் எனக்கு பணம் வேண்டாம். மேஜையின் ஓரத்தில் இருந்த அந்த பைபிள் போதும் என்று கூறி சந்தோஷமாய் எடுத்தான்.

அனைவரும் அவனை பிழைக்க தெரியாதவன் என கூறி ஏளனம் செய்தனர். அவனோ ஆயிரம் ஆயிரம் பொன் வெள்ளியை பார்கிலும் வேதமே சிறந்தது (சங்கீதம்:19:10) என்று கூறிக்கொண்டே வேதாகமத்தை திறந்தான். சிறிது நேரத்தில் ஏளனம் செய்தவர்களெல்லாரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆம் வேதாகமத்தின் ஒவ்வெரு பக்கத்திலும் விலையேறபெற்ற பவுன் நோட்டுகள் இருந்தன. நல்ல பங்கை தெரிந்தெடுத்த சிறுவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரே கொண்டாட்டம் தான்.

அன்பு தம்பி தங்கச்சி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக்கொள்ள போகிறீர்கள். இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையா? அல்லது நித்தியத்துக்குறியவைகளா? தேவனுக்கு பிரியமானதை தெரிந்து கொண்டால் நம் சூழ்நிலைகளை அவர் பார்த்துக்கொள்வார். சிறு வயதிலிருந்தே ஜெபம், வேத தியானம், ஆலய ஆராதனை இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாருங்களேன். உங்கள் தேவைகளை, குடும்பத்தின் சூழ்நிலைகளை அவர் பார்த்துக்கொள்ளுவார். ஆகவே உங்கள் தெரிந்தெடுப்பு மிக முக்கியமானது.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். (மத் 6:33)

இந்த மாத சிறுவர் பகுதி நிச்சயம் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை தீர்மானங்களை 9750381784 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்க மறவாதிருங்கள். அடுத்த இதழில் வேறொரு சுவாரசியமான கதையோடு உங்களை மறுபடியும் சந்திக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.


Share this page with friends