தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ – நமது மனமும் குணமும் சுத்தமாவது உறுதி

Share this page with friends

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. புதிய கல்வியாண்டுக்குள்ள அடியெடுத்து வைக்கும் காலத்தில் இப்படி முடங்கி போய் கிடக்குறோமேனு ரொம்ப கவலை படுகிறீங்களா? கவலப்படாதிருங்க. சீக்கிரத்தில் இந்த நிலை மாறும். வீட்டில் இருக்கும் இந்த நாட்களை பிரயோஜனப்படுத்தி நல்லா பைபிள் வாசிங்க.. இன்றைக்கு அது பற்றி தான் இன்றைக்கு சூப்பரான ஒரு கதை சொல்ல போறேன். கவனமா கேட்குறீங்களா..?

ஒரு வயதான முதியவர் தன் மகனுடைய குடும்பத்தோடும் பேர பிள்ளையோடும் வாழ்ந்து வந்தார் தினமும் காலையில் அவர் எழுந்து வேதாகமத்தை வாசிப்பது வழக்கம். அவருடைய பேரன் அவர் செய்வதுப் போல அவனும் தன் வேதாகமத்தை எடுத்து வாசிக்க முயற்சி செய்வது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் பேரன் தன் தாத்தாவிடம், ‘தாத்தா நீங்கள் செய்வதுப் போல நானும் வேதத்தை எடுத்து வாசித்துப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு அதில் ஒன்றும் புரியவில்லையே? அதுவும் நான் வேதத்தை மூடியவுடன் என்ன படித்தோம் என்பதையே மறந்து போகிறேனே ஆகையால் வேதத்தை வாசிப்பதால் என்ன பயன்? ‘ என்று கேட்டான்.

அப்போது அவனுடைய தாத்தா, தன் அருகில் இருந்த கரிகள் நிறைந்த கூடையிலிருந்து கரியை அனல் மூட்டும்படியாக அடுப்பில் போட்டு விட்டு, வெறும் கூடையை அவனுடைய கையில் கொடுத்து, ‘நீ அருகில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீரை இந்த கூடை நிறைய எடுத்துக் கொண்டு வா’ என்று அனுப்பினார். அதன்படி பேரன் அந்த கூடையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போய் தண்ணீர் கொண்டு வரும்போது, அவன் வீட்டிற்கு வருவதற்குள் தண்ணீர் எல்லாம் சிந்திவிட்டிருந்தது. தாத்தா அதை பார்த்து சிரித்தபடி, ‘நீ இன்னும் கொஞ்சம் வேகமாக வரவேண்டியதாக்கும்’ என்று கூறி, மீண்டும் அவனை தண்ணீர் கொண்டு வரும்படி சொன்னார். பேரன் திரும்பவும் வேகமாய் ஓடி, தண்ணீர் கொண்டு வந்தாலும், அவன் வீடு வருவதற்குள் அதிலிருந்து தண்ணீர் ஒழுகியிருந்தது. அதைப் பார்த்து பேரன், ‘இந்த கூடையில் தண்ணீர் கொண்டு வருவது மிகவும் கஷடம், நான் ஒரு பக்கெட்டில் கொண்டு வருகிறேன்’ என்றான். தாத்தா, ‘எனக்கு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வர வேண்டாம், எனக்கு இந்த கூடையில்தான் தண்ணீர் வேண்டும்’ என்றுக் கூறினார். பேரன் மீண்டும் தண்ணீர் எடுத்து வரப்போனான். தாத்தா வெளியே நின்று அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்தார். பேரன் தன் தாத்தாவிற்கு முன்பாக வேகமாக ஓடி, தண்ணீரை மொண்டு வீட்டிற்கு ஓடி வருவதற்குள் தண்ணீர் எல்லாம் சிந்திப் போனதை கண்டு, தன் தாத்தாவிடம், ‘பார்த்தீர்களா? நான் எத்தனை வேகத்துடன் போய் தண்ணீர் கொண்டு வந்தேன், ஆனால் எல்லாம் வீண், நான் வருவதற்குள் தண்ணீர் சிந்திப் போய் விடுகிறது’ என்றுக் கூறினான்.

தாத்தா அவனை பார்த்து, ‘நீ நினைக்கிறாயா இப்படி நீ கொண்டு வந்தது வீண் என்று? இந்தக் கூடையைப் பார்’ என்றார். அப்போதுதான் அந்த பேரன் அந்தக் கூடையைப் பார்த்தான். அழுக்கு நிறைந்திருந்த, கரிகளால் கறுப்பாயிருந்த அந்தக் கூடை இப்போது பளீரென்று அதன் உட்புறமும் வெளிப்புறமும் சுத்தமாகி இருந்தது. தாத்தா சொன்னார், ‘இதைப்போலத்தான் நீ வேதம் வாசிக்கும்போது, ஒன்றும் புரியாமலிருக்கலாம், அல்லது மறந்துப் போகலாம், ஆனால் நீ வாசிக்க வாசிக்க அது உன்னை உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சுத்தமாக்குகிறது. ஏனென்றால் பரிசுத்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் புடமிடப்பட்ட, ஜீவனுள்ள வார்த்தைகள், ஆகையால் நீ தொடர்ந்து வேதத்தை தினமும் வாசி’ என்றுக் கூறினார்.

அன்பு தம்பி தங்கச்சி.. தேவனுடைய வார்த்தைகள் ஜீவனுள்ளது. அது இன்றும் ஒவ்வொருவருடனும் இடைபடுகிறது, பேசுகிறது, கண்டித்து உணர்த்துகிறது, ஆசீர்வதிக்கிறது, ஆறுதல்படுத்துகிறது. அப்படிப்பட்ட .அற்புதமான இந்த வேத புத்தகம் இன்று நம் தாய் மொழியில் நமக்கு கிடைத்திருப்பது பாக்கியமே! ஆகவே இந்த அன்பின் வேதபுத்தகத்தை நமக்கு தேவன் தந்திருக்கிறபடியினால் தேவனை ஸ்தோத்தரிப்போம். ஒவ்வொரு நாளும் வாசிப்போம், நமது மனமும் குணமும் சுத்தமாவது உறுதி.

மனன வசனம்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுவதினால்தானே.” (சங்கீதம் 119:9)

இந்த மாத சிறுவர் பகுதி நிச்சயம் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை தீர்மானங்களை 9750381784 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்க மறவாதிருங்கள். அடுத்த இதழில் வேறொரு சுவாரசியமான கதையோடு உங்களை மறுபடியும் சந்திக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

பாஸ்டர். பெவிஸ்டன்


Share this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662