• Sunday 22 December, 2024 11:57 AM
  • Advertize
  • Aarudhal FM
உடல் ஆரோக்கியத்திற்காக கிழங்கு சாப்பிட்ட இளைஞர் முகம் வீங்கி துடிதுடித்து பலி

உடல் ஆரோக்கியத்திற்காக கிழங்கு சாப்பிட்ட இளைஞர் முகம் வீங்கி துடிதுடித்து பலி

Aug 3, 2024, 1:50 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியில் வசித்து வருகிறார். விவசாய பணிகளுக்கு டிராக்டர் ஓட்டி வரும் மணிகண்டனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே மாச்சம்பட்டு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மணிகண்டன் தேங்காய் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளைந்திருந்த காட்டு கருணைக் கிழங்கை மணிகண்டன் சாப்பிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அதனை சமைக்காமல் சாப்பிட வேண்டாம் என்று கூறியதற்கு, பச்சையாக சாப்பிட்டால் தான் கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த கிழங்கை சாப்பிட்டுள்ளார்.

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை ஏற்பட்டு அவரது முகம், உடலின் சில பகுதிகள் வீங்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எந்தவித முன்னேற்றமும் தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

thanks to asianet news tamil