- 21
- 20250120
- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால்
ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில்
மேன்மை பாராட்டுகிறது
( சாலமோனின் ஞானம் : 8:3 , இணை திருமறை )
எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் மனிதரிடையே புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப் பிறப்பு, கீழ் குடிப் பிறப்பு எனும் மறைமுக யுத்தம் திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில இடங்களில் வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறை முகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.
இந்த சமத்துவமற்ற சூழலில் யார் உயர்குடிப் பிறப்பு என்பதை விவிலியம் நமக்குக் கற்றுத் தருகிறது. “கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு” என்கிறது சாலமோனின் ஞானம் நூல். இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு கீழ்குடிப் பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.
உயர்குடியும், தாழ் குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியைத் தேர்வு செய்து அழியலாம். இதையே விவிலியம் நமக்கு விளக்குகிறது.
கடவுளோடு ஒன்று பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மையிழக்கிறது.
பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்குப் பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலைச் செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பதே முக்கியம்.
ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு “செடி நிலைத்திருக்கும் கிளைகள்” என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிட்டால் கிளையானது விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்கு தன்னை அர்ப்பணித்து விடும்.
நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது முதல் பிறப்பு முடிவு செய்வதில்லை, இரண்டாம் பிறப்பு முடிவு செய்கிறது. இறைவனோடு வாழப் போகிறேன் எனும் தீர்மானம் முடிவு செய்கிறது. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் அது முழுமையடைகிறது.
அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.*
Thanks to Bro. சேவியர்