• Wednesday 22 January, 2025 12:30 AM
  • Advertize
  • Aarudhal FM
வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே – சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ

வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே – சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ

காட்சி 1

(மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் )

மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா ? எல்லோரும் வந்திருக்கிறார்களா ?

அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே.

மன்னர் : அவர்கள் தயாரா ? அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும்.

அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள் அரசே. தாங்கள் அழைத்ததும் இங்கே வருவார்கள்.

மன்னர் : நல்லது. நல்லது.

மன்னர் : என் முன்னால் கூடியிருக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு அதிசயத்தைக் காட்ட விரும்புகிறேன். அதற்காகத் தான் எல்லோரையும் இங்கே கூடி வரச் செய்திருக்கிறேன். நம்ப முடியாத, ஆனால் நம்பியே ஆகவேண்டிய நிகழ்ச்சி இது.

அமைச்சரே.. அவர்களை வரச் சொல்லுங்கள்.

( அவர்கள் மூவரும் வருகின்றனர் )

மன்னர் : இவர்கள் தான் அந்த அதிசயப் பிறவிகள். நேற்று இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி இவர்கள் கூறுவார்கள்.

விருந்தினர் ஒருவர் : இவர்கள் அதிசயப் பிறவிகளா ? இவர்களைத் தான் நமக்குத் தெரியுமே ? யூதா நாட்டிலிருந்து அடிமைகளாய் கொண்டு வரப்பட்டவர்கள். உமது கருணையினால் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.

மன்னர் : யூதா நாட்டு மக்கள் தான். ஆனால் ரொம்ப வித்தியாசமானவர்கள்.

விருந் : ஆம். அதனால் தானே நீங்கள் அவர்களுக்கு உயர் பதவிகள் கொடுத்து கௌரவித்திருக்கிறீர்கள். பாபிலோனில் பிற பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாய் ஆக்கியிருக்கிறீர். இவர்கள் பெயர்கள் கூட சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோ தானே ? அப்படி என்ன அதிசயப் பிறவிகள் இவர்கள் ?

மன்னர் : நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். நேற்று இவர்கள் நெருப்பில் எறியப்பட்டார்கள் என்பது தெரியுமா ?

விருந் : என்னது நெருப்பில் எறியப்பட்டார்களா ? அப்படியானால் இவர்கள் ஆவிகளா ( அய்யோ.. ஆனா கால் இருக்கே )

மன்னர் : ஹா..ஹா.. அவர்களே பேசட்டும்…( அவர்களைப் பார்த்து ) . நீங்களே சொல்லுங்கள்.

சாத்ராக் : மன்னரே வணக்கம். உமக்கே தெரியும், எங்களுடைய வேலையில் நாங்கள் குறை வைத்ததில்லை. கடமைகளிலிருந்து தவறியதில்லை. உமக்குரிய மரியாதையை உமக்குத் தர தவறியதே இல்லை.

மேஷாக் : ஆனால்.. கடவுளைப் பொறுத்தமட்டில், எங்களுடைய வாழும் கடவுளை எங்கும் விட்டுக் கொடுப்பதும் இல்லை. யாவே யைத் தவிர எந்தக் கடவுளையும் நாங்கள் வணங்குவதில்லை. இதை நாங்கள் சிறு வயது முதலே கடைபிடித்து வருகிறோம்.

ஆபெத் : அப்போது தான் பொற்சிலை ஒன்றை நீங்கள் நிறுவினீர்கள். அறுபது முழ உயரம், ஆறு முழ அகலம் என அது பிரமாண்டமாய் இருந்தது. தூரா சமவெளியில் அதை நிறுவினீர்.

சாத்ராக் : உண்மையிலேயே அது பிரமிப்பூட்டும் அளவிலான சிலை தான். ஆனால் அது தெய்வமில்லையே ! கைகளால் செய்யப்படும் எதுவும் தெய்வங்களல்லவே. ஆனால் மன்னரே, நீரோ அதை வணங்கச் சொன்னீர்.

மேஷாக் : அதுவும் எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் போன்ற கருவிகளெல்லாம் இசைக்கத் துவங்கும் பொழுதில் தாழ விழுந்து வணங்கச் சொன்னீர். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

ஆபெத் : மன்னருடைய கட்டளையா ? கடவுளுடைய கட்டளையா எனும் கேள்வி எழும்போது கடவுளுடைய கட்டளை என முடிவெடுப்பது தானே நல்லது. அதனால்தான் அரசே நாங்கள் அதை வணங்கவில்லை.

சாத்ராக் : இது மன்னரை அவமானப்படுத்தும் நோக்கமல்ல. எங்கள் கடவுளை மகிமைப்படுத்தும் நோக்கம் மட்டுமே. மன்னர் எங்கள் பெருமதிப்புக்குரியவர், ஆனால் கடவுள் எங்கள் வணக்கத்துக்கும், மகிமைக்கும், தொழுதலுக்கும் உரியவர்.

விருந்தினர் : நில்லுங்க..நில்லுங்க..நில்லுங்க… இந்த சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னர் ! படைகளுக்கு அஞ்சாதவர், பகைவரை துயில விடாதவர் அவருடைய கட்டளையை மீறினீர்களா ? என்ன தைரியம் உங்களுக்கு ! உங்களை கொலை செய்வது தான் சரியானது.

சாத்ராக் : ஐயா.. மன்னிக்க வேண்டும். வாழும் கடவுளை வழிபடாமல் எப்படி வெறும் சிலையை நாங்கள் வழிபட முடியும் ? அந்தச் சிலைகளால் எதுவும் செய்ய முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

விருந்தினர் : என்ன தெரியும் உங்களுக்கு ? மன்னரின் கடவுளை அவமானப்படுத்துவது உங்கள் நோக்கமா ?

சாத்ராக் : அவமானப்படுத்துவதல்ல, விலகி நிற்பதே எங்கள் விருப்பம். உங்கள் சிலைகளின் நாக்குகள் மனிதர்களால் உருவானவை, அவற்றால் பேச முடியுமா ? பொய் வெள்ளியால் புனையப்பட்டாலும் அவை போலியானவை தானே.

மேஷாக் : நீங்கள் என்னதான் புனிதமாய் ஒரு சிலையைச் செய்தாலும், அதை பூச்சி அரித்தாலோ, துரு பிடித்தாலோ அந்தத் தெய்வங்களால் அதைத் தட்டி விட முடியுமா ?

ஆபெத் : பட்டாடைகளை அவை அணிந்திருந்தாலும், புழுதி படிந்த முகத்தை அவற்றால் துடைத்து விட முடியுமா ? மனிதர்கள் தானே துடைத்து விட வேண்டும் ?

சாத்ராக் : அந்தச் சிலை மனிதர்களைக் காப்பது இருக்கட்டும், தங்களையே காத்துக் கொள்ள அவற்றால் முடியுமா ? யாரேனும் கவர்ந்து சென்றால் சண்டையிட்டு தன்னை மீட்டுக் கொள்ளுமா ?

மேஷாக் : நூற்றுக்கணக்கான விளக்குகளை அவற்றின் முன்னால் ஏற்றி வைத்தாலும், ஒன்றையேனும் அவற்றால் காண முடியுமா ?

ஆபெத் : பலியிலால் எழுகின்ற புகை அவற்றின் மேனியில் படிகிறதே, பறந்து திரிகின்ற வவ்வால் கூட அதன் தோளில் அமர்ந்து எச்சமிடுகிறதே, புழுக்கள் கூட உள்ளே புகுந்து அரித்து அழிக்கிறதே.. எதையேனும் அந்தச் சிலையினால் தடுக்க முடியுமா ?

சாத்ராக் : எதையுமே அவற்றால் செய்ய முடியாது. படைப்புக்கும், படைத்தவருக்கும் உள்ள வித்தியாசம் இது தான். காலில்லாத சிலைகளை மனிதர்களே தூக்கிச் சுமக்க வேண்டும். கீழே விழுந்தால் கூட அவற்றால் எழுந்து நிற்க முடியாது, மனிதர்களே அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டும். அந்த சிலையின் மேலுள்ள அணிகலன்களை யாரேனும் திருடிச் சென்றால் கூட அதற்குத் தெரியாது. எனவே தான் அவற்றை நாங்கள் வழிபடவில்லை.

மேஷாக் : வார்க்கப்படும் போதும் உணர்வின்றிக் கிடந்தவை அவை. வழிபடும் போதும் உணர்வின்றிக் கிடப்பவை அவை. அவற்றை நாங்கள் ஏன் வழிபடவேண்டும். எனவே தான் அதை நிராகரித்தோம்.

ஆபெத் : இறப்பிலிருந்து ஒருவரை விடுவிக்கவோ, நோயிலிருந்து ஒருவரை மீட்கவோ, கைம்பெண் ஒருத்திக்கு இரக்கம் காட்டவோ அவற்றால் முடியாது. எனவே தான் அவற்றை வழிபடவில்லை.

விருந்தினர் : இவ்வளவு பேசும் உங்களை கொல்லாமல் எப்படி விட்டு வைத்திருக்கிறார் மன்னர் ? மன்னரும் யூதராக மாறிப் போனாரோ ?

மன்னர் : அவர்கள் சிலையை வழிபடவில்லை என்பதால் கடும் கோபம் கொண்டேன். அவர்களை அழைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அவர்கள் வளைந்து கொடுக்கவில்லை, அவர்களுடைய இறைவனை விட்டுக் கொடுக்கவில்லை. எங்கள் கடவுள் எங்களைக் காப்பார். அவர் ஒருவேளை காப்பாற்றாமல் போனால் கூட அவரையே வழிபடுவோம். என்று தீர்க்கமாய்ச் சொன்னார்கள். அதனால் தான் வெகுண்டெழுந்து அவர்களை நெருப்பில் எறிந்தேன்.

விருந்தினர் : இது தான் எனக்குப் புரியவில்லை. நெருப்பில் எறிந்தபின் எப்படி அவர்கள் வெளியே வந்தனர் ? கட்டிப் போடவில்லையா ?

சாத்ராக் : எங்களைக் கட்டினார்கள். உடைகளோடு சேர்ந்து கட்டினார்கள். சட்டென தீப்பிடிக்கும் என்றே நாங்களும் நினைத்தோம். அதிர்ச்சியடைந்தோம். கடவுளை வேண்டினோம்.

மேஷாக் : தீச்சூளையை வழக்கத்தை விட ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடேற்றினார்கள். எங்களை நெருப்புக்குள் எறியச் சென்ற கல்தேயரை நெருப்பு சுட்டுப் பொசுக்கியது. அவர்கள் இறந்தே போனார்கள்.

ஆபெத் : நாங்கள் நெருப்புக்குள் எறியப்பட்டதும் பதறினோம், கதறினோம். ஆனால் சட்டென அதிசயத்துப் போனோம். எங்களுக்கு எதுவும் நேரவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. பயந்தோம், வியந்தோம்.

அமைச்சர்: நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். எங்களால் நம்ப முடியவில்லை. சட்டென கருகி விடுவார்கள் என நினைத்தால், இவர்கள் உள்ளே அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். உடனே வீரர்களுக்குக் கட்டளையிட்டேன். அவர்கள் சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் போன்றவற்றை அதிகமாய் சூளையில் போட்டு தீயை அதிகரித்தார்கள்.

விருந்தினர் : அப்புறம் என்னாச்சு ? அப்படியும் இவர்கள் சாகவில்லையா ?

அமைச்சர் : செத்திருந்தால் இங்கே நின்றிருப்பார்களா என்ன ? நெருப்பு வானளாவ உயர்ந்தது. சுமார் நாற்பத்தொன்பது முழம் அளவுக்கு நெருப்பு வானில் எழுந்தது. இருந்தாலும் இவர்கள் சாகவில்லை. திடீரென பாடல் சத்தம் கேட்டது.

விருந்தினரா : பாடலா ? நெருப்பின் நடுவே பாடலா ?

சாத்ராக் : மோசேயின் முன்னால் எரிந்த பச்சை மரம் கருகவில்லை. அதே போல எங்களைச் சுற்றி எரிந்த நெருப்பு எங்களைப் பொசுக்கவில்லை. நாங்கள் அமைதியாக நின்றோம். எங்களைச் சுற்றி குளிந்த காற்று வீசத் தொடங்கியது. காண்பது கனவா என நினைத்தோம். அப்போது தான் அது நிகழ்ந்தது.

மேஷாக் : ஆம்.. எங்களோடு கூட இன்னொருவரும் உள்ளே வந்தார். அவர் தான் கடவுளின் தூதர். தெய்வ மகனாய் கூட இருக்கலாம். அவர் எங்கள் நடுவே வந்ததும் எங்களுக்கு எல்லாமே மறந்து போய்விட்டது. துதிக்க ஆரம்பித்தோம்.

ஆபெத்நெகோ : “ஆண்டவரின் அனைத்துச் செயல்களே.. கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்” என பாடல் பாடினோம். ஒவ்வொன்றாய் அழைத்து இறைவனைத் துதித்தோம். நேரம் போனதே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் தெரியவில்லை.

மன்னர் : உண்மை தான்.. நெருப்புக்குள் மூன்று பேரைப் போட்டோம், ஆனால் நான்காவதாக ஒருவர் இருப்பதை நாங்கள் எங்கள் கண்காலேயே கண்டோம். யாருக்கும் எந்தத் தீங்கும் நேரவில்லை. நான்காவது நபர் கடவுளின் மகனைப் போல தோற்றமளித்தார்.

சாத்ராக் : அப்போது மன்னனில் குரல் வெளியிலிருந்து கேட்டது. “உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு, ஆபேத்நெகோ வெளியே வாருங்கள்” என்றது மன்னனின் குரல். நாங்கள் தூதரைப் பார்த்தோம். அவர் புன்னகையுடன், செல்லுங்கள். உங்களால் நாட்டில் மாற்றம் உருவாகும். உங்கள் பெயர் காலம் காலமாய் நிலைக்கும் என்றார்.

மேஷாக் : நாங்களோ, எங்கள் பெயரல்ல கடவுளே உமது பெயரே போற்றப்படுக என்றோம். பிறகு வெளியே வந்தோம்.

ஆபெத்நெகோ : எந்தக் காயமும் இல்லாமல் வெளியே வந்தோம். எங்களாலேயே நம்ப முடியவில்லை.

விருந்தினர் : நீங்கள் சொல்லும் எதுவுமே நம்ப முடியவில்லையே. உங்கள் முடி கூட கருகினது போல தெரியவில்லை. ஒரு தீக்காயமும் காண முடியவில்லை. பளிச் என இருக்கிறீர்கள்.

மன்னர் : ஆம்.. நம்ப முடியாத அதிசயம் தான் அது. அதனால் தான் அவர்களை உங்கள் முன்னால் நிற்க வைத்து பேசவைத்தேன். நேற்றைக்கே நான் சட்டம் இயற்றிவிட்டேன்.

விருந்தினர் : என்னவென்று ?

மன்னர் : இவர்களுடைய கடவுளுக்கு எதிராக யாரும் பழிச்சொல் கூறக் கூடாதென்று. அப்படிக் கூறினால் அவன் கண்டந் துண்டமாய் வெட்டப்படுவான் என்று. அதுமட்டுமல்ல அவனுடைய வீடே அழிக்கப்படும் என்றும் சொன்னேன்.

விருந்தினர் : அப்படி என்ன இவர்களோட கடவுள்…

மன்னர் : அந்தச் சட்டம் உமக்கும் பொருந்தும்..

விருந்தினர் ( சட்டென வாயை மூடிக் கொள்கிறார் ) இல்லை.. நான் பேசவில்லை. அவர்களுடைய கடவுள் வாழ்த்தப்பெறுவாராக.

மன்னர் : சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோ.. உங்களுடைய பெயர்களை நான் மாற்றினேன். ஆனால் உங்களுடைய மனதை என்னால் மாற்ற முடியவில்லை. உங்களை யூதாவிலிருந்து இடம் மாற்றினேன். ஆனால் உங்கள் தடத்தை மாற்ற முடியவில்லை. செடியை, நிலம் மாற்றி நட்டாலும் பூவின் நிறம் மாறுவதில்லையே. நீங்கள் இறைவனோடு தொடர்ந்து நடக்கிறீர்கள். அதனால் தான் வேறு எந்த தவறான சிந்தனைகளும் உங்களை அணுகவில்லை.

சாத்ராக் : இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். அவர் நாமம் மட்டுமே வாழ்த்தப்பெறட்டும்.

மன்னர் : உங்களுடைய விசுவாசத்தைக் கண்டு நான் வியக்கிறேன். உயிரை துச்சமென மதித்த உங்களுடைய செயல் பிரமிப்பூட்டுகிறது. எந்தச் சூழலிலும் இறைவனை விட்டு விடாத உறுதி என்னை வியப்பிலாழ்த்துகிறது. உங்களுக்கு மாநிலங்களில் பெரிய பதவிகளை அளிக்கிறேன்.

மேஷாக் : நன்றி அரசே. இறைவன் உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியதும், அதன் மூலம் மக்கள் உண்மை தெய்வத்தை அறிந்து கொண்டதும் மகிழ்ச்சியான விஷயங்கள். உயர் பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல, உயரத்தில் இருக்கின்ற விண்ணக பதவியே முக்கியம்.

மன்னர் : உங்கள் கடவுள் வாழ்த்தப்பெறுவாராக. சென்று வாருங்கள்.

( மூவரும் வணங்கி விடைபெறுகின்றனர் )

பின் குறிப்பு

சாத்ராக் மேஷாக் ஆபெத்நெகோ மூவரும் கடினமான சூழலில் கூட இறைவனை விட்டு விடாமல் பற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை இறைவன் கனம் பண்ணினார். இறைவனோடு தொடர்ந்து நடப்பவர்களை இறைவன் கைவிடுவதில்லை.

Thanks to Bro Xavior