• Sunday 22 December, 2024 12:07 PM
  • Advertize
  • Aarudhal FM
விவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா

விவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா

இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் பின்பற்றுமாறு சொன்ன மாபெரும் விழாக்கள் ஏழு. அந்த ஏழு விழாக்களின் கடைசி விழா இந்த கூடாரப்பெருவிழா. இது இஸ்ரயேலர்களின் ஏழாம் மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாளில் தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படும் .

“விழாவின் முதல் நாள் ‘திருப்பேரவை கூடும் நாள்’. அந்த நாளில் எந்த வேலையும் செய்யாமல் எல்லோரும் ஓய்வாய் இருக்கவேண்டும். எட்டாம் நாள் மீண்டும் திருப்பேரவை கூடும் நாள் ! அது நிறைவு நாள். அந்த எட்டு நாட்களும் தவறாமல் கடவுளுக்குநெருப்புப் பலி செலுத்த வேண்டும். அந்த ஏழு நாட்களும் இஸ்ரவேல் மக்கள் கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். “ என்பதே இறைவன் கொடுத்த கட்டளையின் சுருக்கம்.

எகிப்தில் அடிமையாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டை விட்டு கடவுளின் அருளால், மோசேயின் தலைமையில்வெளியேறியபின் கூடாரங்களில் குடியிருந்தார்கள். அந்த நினைவை புதுப்பித்துக் கொள்ளும் விதமாக இந்த விழாநாட்களில் இஸ்ரயேலர்கள் அனைவரும் கூடாரங்களில் குடியிருந்தார்கள்.

சாலமோன் மன்னனும் இந்த பண்டிகையைத் தவறாமல் கொண்டாடினார் என்கிறது 2 குறிப்பேடு 8:13. “ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்றுவிழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்” என விவிலியம் விளக்குகிறது.

இறைவன் காட்டிய பேரன்பை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியை இத்தகையவிழாக்கள் செய்கின்றன. குறிப்பாக தகவல்தொழில்நுட்பங்கள் வலுவாக இல்லாத பண்டைய காலங்களில் இத்தகைய செய்திகளைநினைவுகூர விழாக்களே அடிப்படைக் காரணிகளாக இருந்தன.

பாலை நிலத்தில் அலைந்து திரிந்த நாற்பது வருடங்களும் இறைவன் அவர்களை பல அதிசயங்கள் மூலம் ஆசீர்வதித்துவழிநடத்தினார். அவர்கள் உண்ண தினமும் வானிலிருந்து மன்னா எனும் உணவு வழங்கினார். இஸ்ரயேலர் கூட்டம் , பெண்கள்குழந்தைகள் உட்பட, மொத்தமாக 20 இலட்சம் பேர் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்படிப்பார்த்தால் தினமும் மூன்று வேளை சாப்பிட அவர்களுக்குத் தேவையான பல இ லட்சம் மன்னா தேவைப்பட்டிருக்கும். அப்படியே நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக சாப்பிட எவ்வளவு தேவைப்பட்டிருக்கும் ? இவை கடவுளின் மிகப்பெரிய அற்புதமன்றிவேறு எந்த விதமாகவும் நடந்திருக்க சாத்தியமே இல்லாத ஒன்று !

அதே போல அவர்கள் இறைச்சி வேண்டும் என கேட்டபோது இறைவன் பறவைகளை அவர்களுடைய கூடாரங்கள் அருகேவிழவைத்தார். அத்தனை கூட்டம் கூட்டமான பறவைகள் வந்து விழுவது இறைவனின் அதிசயச் செயல் அன்றி வேறில்லை. தாகம்எடுத்த போது மோசே பாறையில் அடித்தார். தண்ணீர் பாய்ந்தோடியது. இத்தனை இலட்சம் பேர் குடிக்க வேண்டுமெனில் தண்ணீர்ஒரு ஆறு போல பாய்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தனை மக்கள் பேரணியாகச் சென்றாலே பலப் பல கிலோமீட்டர் நீளமாய்அந்த பேரணி இருந்திருக்கும்

இப்படி இறைவன் செய்த அதிசயங்களை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடப்படுவது தான் கூடாரப் பெருவிழா. இந்தநாட்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது இறைவன் இவர்களுக்குக் கொடுத்த ஒரு கட்டளை ! இந்த விழாவைக்கொண்டாடாதவர்கள் அழிவுக்குள்ளாவார்கள் என செக்கரியா 14ம் அதிகாரம், அன்றைய மக்களை எச்சரித்தது.

புதிய ஏற்பாட்டில் இந்த விழா இயேசுவின் இரண்டாம் வருகை தரப்போகும் ஆயிரம் ஆண்டைய அரசாட்சியை குறிப்பால்உணர்த்துகிறது. பாவம் எனும் பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகள் அலைந்து திரிந்த நாம், இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுஅவரது அன்பில் இணைகிறோம். இதுவே புதிய ஏற்பாட்டு சிந்தனை.

இறைமகன் இயேசுவும் தான் மனிதனாக வாழ்ந்த காலத்தில் இந்த விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில் வெளிச்சமும், தண்ணீரும் குறியீடுகளாக உள்ளன. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் இயேசு, விழாக்காலத்தில் ஆலய பகுதியில் நின்றுகொண்டு, ““யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என அறைகூவல் விடுத்தார்.

இந்த காலத்தில் கூடாரவிழாவானது புதிய அர்த்தத்தை நமக்குத் தருகிறது. முதலில் இது இயேசுவின் இரண்டாம் வருகையையும், அவர் நம்மோடு ஆளப்போகின்ற ஆயிரம் ஆண்டு ஆட்சியையும் குறிப்பிடுகிறது. அவர் நம்மோடு கூடாரமடித்து தங்குவார் எனும்நம்பிக்கை விழாவாக இது அமைகிறது. இன்னொன்று, ‘வார்த்தையான இறைவன் நம்மிடையே குடிகொண்டார்” எனும் முதல்வருகையின் நினைவு கூர்தலாகவும் அமைகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக, நமது பாவங்களை விட்டு விலகி அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரால் நிராகரிக்கப்படுபவர்களாக இல்லாமல், வரவேற்கப்படுபவர்களாக இருக்க முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும். இதையே இந்த விழா நமக்கு எடுத்துச் சொல்கிறது

Thanks to Bro.Xavior