சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா – பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது

Share this page with friends

சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பிப்ரவரி 26, 11:36 AM

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரே புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம் அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த ஆலயம் பிப்ரவரி 25-ந் தேதி அர்ச்சிக்கப்பட்டது.

ஆலயம் கட்டப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அங்கு ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆலய உறுப்பினர்கள் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியோடு விழாவில் கலந்து கொண்டனர். விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த தேவாலயத்தின் ‘பிரஸ்பைட்டர்’ ஐசக் ஜான்சன், செயலாளர் துலிப் தங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-
இந்த ஆலயம் ஒரு கட்டிடமாக மட்டுமே திகழ்ந்து இருக்கவில்லை. உயிரோட்டமுள்ள ஒரு திருச்சபையாக இது திகழ்கிறது. இந்த சமுதாயத்தில் வாழும் மக்களிடையே மாற்றத்தை இந்த ஆலயம் உருவாக்கியதை நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறோம்.
500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த ஆலயத்தில் உறுப்பினர்களாக இருந்து இறை பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி ஆதரவு வழங்கி வருகின்றனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கு இந்த தேவாலயம் சேவையாற்றி இருக்கும் காலகட்ட சூழலை கருத்தில் கொண்டால் மட்டுமே இதன் வரலாறும், செயல்பாடும், அதன் உயிரோட்டமான சேவையும் சரியாக புரிந்து கொள்ளப்படும்.

சென்னையின் வரலாற்றை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாக இந்த தேவாலயத்தை நாம் பார்க்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினதந்தி


Share this page with friends