• Friday 14 March, 2025 05:10 PM
  • Advertize
  • Aarudhal FM
வேலையில் ஜாக்கிரதையாய் நில்,  ராஜாக்களுக்கு முன்பாக நில்

வேலையில் ஜாக்கிரதையாய் நில், ராஜாக்களுக்கு முன்பாக நில்

  • by Bishop. கென்னடி
  • திருச்சி
  • 20250314
  • 0
  • 31

பேராசிரியையாகிய நான் என்னுடைய வழக்கமான வகுப்பை முடித்துவிட்டு என் இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுது பின்னால் இருந்து ஓர் அன்புக் குரல். “மேடம், மேடம் கொஞ்சம் நில்லுங்க. நான் உங்களிடம் பேசணும். நில்லுங்க மேடம்” என்று கூறிக்கொண்டே ஏஞ்சல் ஓடி வந்தாள். “என்னை பார்ப்பதற்காகவா வருகின்றாய் நீ?” என கேட்ட மாத்திரத்தில், “எஸ் மேம்”, என்று கூறிக்கொண்டு என் அருகில் வந்தாள்.

“மேம் உங்களுக்கு மிகவும் நன்றி மேம். எனக்கு ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு நீங்கள் தான் காரணம். இந்த சந்தோஷமான செய்தியை உங்களிடம் சொல்லிவிட்டு போகலாமே என்று தான் ஓடி வந்தேன் மேடம்” என்று ஏஞ்சல் கூறியதைக் கேட்டு நின்றேன். “வாழ்த்துகள் ஏஞ்சல். ஆனா உனக்கு நான் எந்தப் பருவத்திலேயும் வகுப்புகள் எடுத்தது இல்லையே? எந்த வகையில் நான் தான் காரணமென எனக்கு நன்றி சொல்லுகிறாய் ஏஞ்சல்?” என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

“மேம் எங்களுக்கு நீங்கள் வகுப்புகள் எடுத்தது இல்லை. ஆனால் ஒருமுறை நீங்கள் எங்கள் வகுப்பை தாண்டிச் செல்லும் பொழுது நாங்கள் கூச்சலிட்டு சத்தமாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து, எங்கள் வகுப்பிற்குள் வந்தீர்கள். நாங்களும் நீங்கள் ஏதோ மொக்கையாக அறிவுரை சொல்லப் போகிறீர்கள் என்று முதலில் நினைத்தோம். ஆனால் நீங்கள் எங்கள் வகுப்பில் கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு உண்மை நிகழ்வை முன்வைத்துக் கூறினீர்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னாட்டு ஐடி நிறுவனத்தின் வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் நான் கலந்து கொண்டேன். முதல் 2,3 சுற்றுகள் தேர்வு நடைபெற்று அதில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டோம். கடைசியாக குழு விவாத சுற்று நடந்தது. அதில் ஏதாவது ஒரு தலைப்பில் எல்லோரையும் பேசச் சொன்னார்கள்.

யார் எதைப் பேசுவது, எப்படி பேசுவது என்று தெரியாமல் தடுமாறிய பொழுது, எனக்கு நீங்கள் கூறிய கதை நினைவில் இருந்தபடியால், நான் நிறுவனத்தாரிடம், ‘என்னை மிகவும் உத்வேக படுத்திய ஒருவரைப் பற்றி பேசலாமா?’ என்று கேட்டு, நீங்கள் சொன்ன கதையை அப்படியே சொல்லி முடித்தேன். அங்கு இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டியதுடன், ‘யூ ஆர் அப்பாயின்டட்’ என்று சொல்லி முடித்தார்கள்” எனக் கூறினாள்.

யாருடைய கதையைக் கேட்டு அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள் என்பது தானே உங்கள் கேள்வி? வாருங்கள் கதைக்குள் பயணிப்போம்.

ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க கருப்பினத்தை சார்ந்த ஒரு சிறுவன், படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவன். தன் அம்மாவிடம் சென்று “அம்மா நான் படிக்கணும், அம்மா நான் படிக்கணும்..’ என்று அடம் பிடிக்கிறான். கருப்பு இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட காலம் அது, ஆகையால் சிறுவனை அம்மாவால் பள்ளியில் சேர்க்க இயலவில்லை. ஒரு நாள் அம்மா தன் குட்டி பையனை கையோடு கூட்டிக்கொண்டு தான் பணிபுரியும் இடத்திற்குச் சென்றார்.

அங்கு அம்மாவின் தோழி ஒருவர், “உனக்கு ஒண்ணு தெரியுமா? சற்று தொலைவில் உள்ள நகரில் நம்மை போன்ற கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்களை ஒரு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரை நாள் படிக்க வேண்டும் அரை நாள் அந்தப் பள்ளியில் வேலை செய்ய வேண்டும்”, என்றார். இதைக் கேட்டவுடன் என்னவோ தனக்காகவே இதைச் சொன்னதாக நினைத்துக் கொண்டு வேகவேகமாக அம்மாவிடம் ஓடி வந்து, “அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டு, அம்மாவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான் சிறுவன்..

அந்த காலகட்டத்தில் இப்பொழுது இருப்பது போல் போக்குவரத்து வசதிகள் இல்லை, வழி தெரியாது. அவ்வளவு ஏன் கையில் ஒரு டாலர் கூட இல்லை. ஆனாலும் பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சிறுவன் . அந்த பள்ளி அவன் இருக்கும் இடத்திலிருந்து 500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பதை அவன் அறியவில்லை. அவன் நடந்து போக போக, வரும் வழியில் காணும் வண்டிகளில் வருபவர்களிடம் உதவி கேட்டு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.

இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு சாப்பிடாமல் இருந்ததாலும், பயணக் களைப்பாலும் மிகவும் சோர்வாக உணர்ந்தான். தூரத்தில் ஒரு கட்டடத்தில் வெளிச்சம் வருவதைக் கண்டு, அங்கே சென்று உறங்கலாம் என்று அங்கு சென்று, இரவெல்லாம் உறங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கும் பொழுதுதான் அது ஒரு கப்பல் துறைமுகம் என்று தெரியவந்தது. அங்கு ஒரு கப்பல் வந்து நின்றது. அதில் நிறைய மனிதர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

உயர் அதிகாரி போல் மிடுக்காக இருந்த ஒரு மனிதரிடம் சென்று, “நானும் இந்த வேலையைச் செய்யலாமா?” என‌க் கேட்டான். அவரோ, “நீ இவ்வளவு சின்னப் பையனாக இருக்கிறாய். நீ எப்படி இந்த வேலையை செய்வாய்?” என்றார். “இந்த வேலையை என்னிடம் கொடுத்துப் பாருங்கள் நான் எப்படி செய்கிறேன் என்று பாருங்கள்” என்ற அவனது ஆர்வத்தைக் கண்டு வியந்து, வேலையைச் செய்யுமாறு கூறினார்..

அந்தக் குட்டிப் பையனும் சுறுசுறுப்பாக மற்றவர்கள் செய்யும் வேலைகளை விட ஒரு மடங்கு அதிகமாகவே செய்தான். ஆதலால் அவனுக்குக் கொடுக்க நினைத்த ஊதியத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அனுப்பினார். அந்த குட்டிப் பையன் அந்த டாலர்களை எடுத்துக் கொண்டு நேராக ஒரு உணவு விடுதிக்குச் சென்று வயிறார உண்டான்..

பிற்காலத்தில் தன்னுடைய சுயசரிதையில், ‘நான் எவ்வளவோ சத்தான உணவுகளையும், ருசியான உணவுகளையும் என்னுடைய அம்மா செய்து கொடுத்து உண்டு உள்ளேன். ஆனால் நானே சம்பாதித்து அதில் சாப்பிட்ட சுகம் வேற மாதிரி சந்தோஷத்தை கொடுத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்..

சிறுவன் அப்படியே நடந்து செல்கிறான். பள்ளியை அடைந்தவுடன் எல்லோரும் அங்கு சேர்க்கைக்காக வரிசையில் நின்று கொண்டே இருக்கிறார்கள். அவனும் கடைசியாக சென்று நின்று கொள்கிறான். எல்லா குழந்தைகளும் அம்மா அல்லது அப்பாவுடன், இல்லையென்றால் இருவருடனும் சேர்ந்து வந்திருந்தனர். ஆனால் நம் ஹீரோ தனியாக, பழைய துணியுடன், பரட்டை தலையுடன் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஜந்துவைப் போல் அந்த வரிசையில் நின்றிருந்தான்.

அவனது முறை வரும் போது தலைமை ஆசிரியர் மேலும் கீழுமாக அவனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். “நான் படிக்க வேண்டும். என்னையும் இந்த பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள்” என்றான். “நிஜமாகவே நீ இந்த பள்ளியில் படிக்க வேண்டுமா? சரி அப்படியென்றால் இந்த அறையை சுத்தம் செய்து காட்டு” எனக் கூறினார்.

சிறுவன் குடுகுடுவென ஓடிச்சென்று தனக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் எல்லோரிடமும் கேட்டு கேட்டுப் பெற்று, அந்த அறையை முழுவதுமாக சுத்தம் செய்தான். எடுத்த பொருட்களை எல்லாம் மீண்டும் அதே இடத்தில் சரியாக வைத்தான். பின்பு தலைமை ஆசிரியரிடம் சென்று “நான் வேலையை முடித்து விட்டேன்” என்றான்.

“அப்படியா! வா சென்று பார்க்கலாம்”, என சிறுவனை அழைத்துச் சென்றார் ஆசிரியர். தன் கையில் வைத்திருந்த வெண்ணிற கைக்குட்டையை எடுத்து மேசையின் அடிப்புறமாக துடைத்துப் பார்த்தார். வெண்ணிறம், வெண்ணிறமாகவே இருந்தது. சிறு அழுக்குகூட இல்லை. சுற்றிலும் பார்த்த ஆசிரியர் ஆச்சரியமடைந்து, “உன்னை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார்.

தன்னுடைய சுயசரிதையில் ‘என் வாழ்க்கையில் நான் நூற்றுக்கணக்கான நேர்காணல்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இருந்ததிலேயே மிகவும் கடுமையான நேர்காணல் என்பது என் பள்ளி சேர்க்கைக்காக என்னுடைய தலைமை ஆசிரியர் கொடுத்த தேர்வு’ என்று பின்னாளில் அவர் குறிப்பிட்டுள்ளார்..

தலைமையாசிரியர், “இவ்வளவு நன்றாக இந்த அறையை எப்படி சுத்தம் செய்தாய்?” என்று கேட்டார். அவனும் “நான் 3 முறை இந்த அறையை சுத்தம் செய்தேன். முதல் முறை நீங்கள் சுத்தம் செய்யச் சொன்னீர்களே என்பதற்காக சுத்தம் செய்தேன். இரண்டாவது முறை நான் இந்தப் பள்ளியில் படிக்கப் போகின்றேன். எனக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் இந்த அறையில் வந்து கல்வி கற்றுக் கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்காக இரண்டாவது முறை சுத்தம் செய்தேன்.

மூன்றாவது முறை ‘நான் Booker T Washington’. நான் எதைச் செய்தாலும் என்னால் இயன்ற வரை சிறப்பாகத்தான் செய்து கொடுப்பேன். அவ்வாறே இந்த அறையையும் சுத்தம் செய்தேன்” என்று கூறி முடித்தான். இந்த ஒரு குணம்தான் சிறுவன் புக்கர் வாஷிங்டனை பிற்காலத்தில் அமெரிக்காவின் மிகச்சிறந்த கல்வியாளராக மாற்றியது..

எந்தப் பள்ளியில் நீ சேருவதற்கு தகுதி இல்லை, உன்னை போன்றவர்கள் படிப்பதற்கே தகுதி இல்லை என்று உதைத்து தள்ளினார்களோ, எந்த பள்ளியில் எங்களுக்கு சரி நிகராக உட்காருவதற்கு உனக்கு தகுதி இல்லை என்று சொன்னார்களோ, அதுபோன்ற பள்ளிகளுக்கு எல்லாம் மேலாக அவரை போன்றவர்களுக்காக கல்வியாளர் புக்கர் டி. வாஷிங்டன் 1881 இல் பள்ளியை நிறுவினார்; படிப்படியாக உயர்ந்த இந்தப் பள்ளி 1985இல் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் உரிமைகள் அமைப்பின் தலைவராகவும் வாஷிங்டன் இருந்தார்..

=> வளர்ச்சி என்பது இதுதான். யாரெல்லாம் எனக்கு நிகராக நீ இருக்க முடியாது என்று ஓரம் கட்டினார்களோ, உனக்கு நிகராக இருக்க என்னால் முடியாது; ஆனால் உன்னை விடவும் மேலே உயர என்னால் முடியும் என்று ஆணித்தரமாக உயர்ந்து காண்பித்த மேதையின் கதை.

இந்தக் கதையைத்தான் குழு விவாதத்தில் ஏஞ்சல் தான் விரும்பிய தலைப்பில் பேசினார். வேலைக்கான ஆணையையும் பெற்றாள். கடவுளின் ஒத்தாசையுடன் எந்த வேலையைச் செய்தாலும் அதில் அர்ப்பணிப்போடு செயலாற்றினால், நாம் எந்த உயரத்தையும் தொடலாம்..

-> தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். நீதிமொழிகள் 22 : 29

Summary

Be careful at work, stand before kings.

Post Tags: