• Monday 16 September, 2024 08:22 PM
  • Advertize
  • Aarudhal FM
நாகையில் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டச்சு தேவாலயம் மீண்டும் திறப்பு

நாகையில் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டச்சு தேவாலயம் மீண்டும் திறப்பு

நாகப்பட்டினம்: நாகையில் பழைய பேருந்து நிலையம் எதிரே 1774ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் தூய பேதுரு தேவாலயம் கட்டப்பட்டது. இறை வழிபாடு, கல்வி, மருத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த தேவாலயம், நாளடைவில் சிதிலமடைந்தது. இதையடுத்து, இந்த தேவாலயத்தைப் புனரமைக்க ஓராண்டுக்கு முன் முடிவெடுக்கப்பட்டு, அதன்படி 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசின் பங்களிப்புடன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்ததைத் தொடர்ந்து, டச்சுக்காரர்களால் எழுப்பப்பட்ட 250 ஆண்டு கால சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேவாலயத்தை திருச்சி தென்னிந்திய திருச்சபையின் பேராயர் சந்திரசேகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை, பாமாலையுடன் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கரூர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பேராயர், ஆயர்கள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.