விஜய் ஆண்டனிக்கு கெடு விதித்த தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு
- 0
- 160
Vijay Antony about Jesus: இயேசு குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி பேசியதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னை: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியவர். தற்போது இவரது நடிப்பில் ரோமியோ என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ள இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, மது பழக்கம் பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “ஆண், பெண் என்ற வேறுபாடு வேண்டாம், மது என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான்.
நமக்கு என்ன என்னலாம் இருக்கோ, அது பெண்களுக்கும் உரித்தானது தான். நான் மதுவை ஆதரிக்கவில்லை. மது நம்ம ஊரில் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது. சாராயம் என்று இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் ஜீசஸ் கூட திராட்சை ரசம் குடித்திருக்கிறார்” என்று பேசியிருந்தார். விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம். உலகமெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும், சாதி மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து.
கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆதாரம் இல்லாமல், திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொதுவெளியில் பேசி, மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஊடக செயலாளர் சமரனிடம் பேசியபோது, “விஜய் ஆண்டனி பேசியது தவறு. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க 24 மணிநேரம் கால அவகாசம் கொடுத்துள்ளோம். அதன்பிறகும் அவர் மன்னிப்பு கேட்காத பட்சத்தில், அவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.