- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
மாபெரும் விலை
- 0
- 152
தேவனுடைய பிரமாணத்தை மீறி சாத்தானுடைய தூண்டுதலினாலே, தாவீது ஜனங்களை தொகையிட்டார் (1 நாளாகமம் 21). தாவீது செய்த இந்த புத்தியீனமான காரியம், கர்த்தரின் பார்வைக்கு ஆகாதபடியினாலே அவர் இஸ்ரவேலை வாதித்தார். தேசத்தின் மேலே நியாயத்தீர்ப்பு வந்தது.
கர்த்தர் மூன்று காரியங்களை தாவீதுக்கு முன்பாக வைத்தார். மூன்று வருஷ பஞ்சமோ? பகைஞரின் பட்டயம் பின்தொடர சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடும் மூன்று மாத சங்காரமோ? அல்லது கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலெங்கும் சங்காரமுண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றை தெரிந்துகொள்ளும்படி தாவீதிடமே விடப்பட்டது. மூன்றும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. கொடிய இடுக்கண்ணில் அகப்பட்ட தாவீது கர்த்தருடைய கரத்தில் விழுந்தார். கர்த்தர் தேசத்தின் மீது கொள்ளை நோயை வரப்பண்ணினதினால் இஸ்ரவேலிலே 70,000 பேர் மடிந்து போனார்கள் (1 நாளாகமம் 21:1,7-14). பாவத்திற்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேறியது.
தேவனுடைய பிரமாணம் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நீட்டப்படுகிறது. முதல் மனிதனும் தேவனுடைய கட்டளைய மீறி பாவம் செய்தபோது, ஏதேனிலே சுடரொளிப்பட்டயம் வைக்கப்பட்டு, மனுகுலமும் தேவ கோபாக்கினைக்கு என்று நியமிக்கப்பட்டது (ஆதியாக. 3:24), அவ்விதம் ஒரு மனிதனுடைய மீறுதலினாலே, பாவமும், பாவத்தின் சம்பளமாகிய மரணமும் நம் எல்லோரையும் ஆண்டுகொண்டது (ரோமர் 5:17).
எருசலேமுக்கு வந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்ட கர்த்தர், கர்த்தருடைய தூதன் நின்ற ஓர்னானின் களத்திலே பலிசெலுத்தும்படி தாவீதுக்கு கட்டளையிட்டார் (1 நாளா. 21:15,18). தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறுத்தப்பட பலி செலுத்த வேண்டும், இதுவே பிரமாணம். தாவீது போய், ஓர்னானிடத்திலே அந்த களத்தை கேட்டார், இலவசமாக அல்ல, அதுபெறும் விலையை (அதற்குரிய சரியான விலையை) தருவேன் என்றார். 600 சேக்கல் பொன்னை நிலத்திற்குரிய பெறும் விலையாக கொடுத்து, நிலத்தை வாங்கி அங்கே கர்த்தருக்கு பலியிட்டார், வாதை நிறுத்தப்பட்டது (1நாளா 21:24-28). வாதை நிறுத்தப்பட விலை கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தது (1நாளா. 21:22).
பாவத்தினிமித்தம் நாமும் கோபாக்கினைக் கென்று நியமிக்கப்பட்டிருந்தோம், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நமக்கு விரோதமாக நீட்டப்பட்டதாக இருந்தது. ஆனால் எருசலேமுக்கு வந்த தீங்கை கண்டு மனஸ்தாபப்பட்ட கர்த்தர் (1 நாளாகமம் 21:15) நமக்காகவும் மனமிறங்கினார்.
அன்றைக்கு கோபாக்கினை மாற்றப்பட பலிசெலுத்தும்படி எருசலேமிலே ஓர்னானின் களம் தெரிந்துகொள்ளப்பட்டது. நமக்கோ கொல்கொதாவின் கொலைக்களம் தெரிந்து கொள்ளப்பட்டது. அன்றைக்கு நிலத்திற்கு பெறும்விலை கொடுக்கப்பட்டது. நமக்கோ “மாபெரும் விலை” கொடுக்கப்பட்டது. அது 600 சேக்கல் பொன்னல்ல, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே!
“அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:18,19).
மாபெரும் விலையாக, நம்மை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனையே இயேசு கிறிஸ்து நமக்காக கொடுத்தார் (மாற். 10:45). இஸ்ரவேலிலே வாதை நிறுத்தப்பட விலைகொடுக்க வேண்டியதாயிருந்தது. நம்மேலிருந்த கோபாக்கினை மாற்றப்பட தேவகுமாரன் தன்னையே பதில் விலையாக கொடுத்தார்.
நாம் பெற்ற இரட்சிப்பு இலவசமானாலும் அதை நமக்கு சம்பாதித்து கொடுக்கும்படி மாபெரும் விலை சிலுவையில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
நம்மை மீட்க தன்னையே பலியாக கொடுத்த கிறிஸ்து இயேசுவை நினைவுகூர்ந்து பிதாவாகிய தேவனை தொழுதுகொள்வோம்! ஆமென்.
Thanks to Bro.Vivekananth