• Sunday 22 December, 2024 08:28 AM
  • Advertize
  • Aarudhal FM
நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் நடந்து சென்று பார்க்கும் வகையில் உள்ளது.

Nandi Statue, Christian Church - A historical wonder buried in Mettur Dam நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

நந்தி சிலை

மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆன நிலையில், அணை கட்டப்பட்ட போது 60 சதுர மைல் பரப்பளவு, நீர்த்தேக்கப் பகுதியாக அளவீடு செய்யப்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வந்த மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறும்போது, வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டுச் சென்றனர். இவ்வாறு நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில் மற்றும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தை மக்கள் இடிக்காமல் விட்டுச் சென்றனர். சுண்ணாம்பு கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வழிபாட்டு தலங்கள், ஆண்டுக்கணக்கில் தண்ணீரில் மூழ்கி கிடந்தாலும் சிதிலமடையாமல் காணப்படுகிறது.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

புகழ்பெற்ற நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியும் சமயங்களில், வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை சிலர் பரிசலில் அருகில் சென்று பார்த்து வருவது வழக்கம். அப்போது, சமூக விரோதிகள் சிலர் நாச வேலையில் ஈடுபட்டதால், கிறிஸ்தவ இரட்டை கோபுரத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. நந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஆனால், அணைக்கான நீர்வரத்து திருப்திகரமாக இல்லாததால், நீர் மட்டம் படிப்படியாக சரிந்தது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் மேட்டூர் அணையில் உள்ள நீர் அதிரடியாக சரிந்து வருகிறது. எனவே, தற்போது மேட்டூர் செல்லும் சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் இல்லத்தில் இருந்து பரிசல் மூலம் மேட்டூர் அணை அடியில் இருந்த ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் தற்போது காண முடிகிறது.

இதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் மேட்டூர் பண்ணவாடிக்கு சென்று ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நந்தி சிலையை வழிபட்டு வருகின்றனர்.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

செல்லும் வழி: 

சேலத்தில் இருந்து மேட்டூர் சென்று அங்கிருந்து மூலக்கடை, சின்ன மேட்டூர், கொளத்தூர் வழியாக 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணவாடி பரிசல் இல்லம் சென்றடைந்தால் கரையில் இருந்து பார்க்கும் தொலைவில் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் தெரியும்.

மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் பண்ணவாடி பரிசல் துறைக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற பின் கட்டணம் செலுத்தி பரிசல் மூலமாக ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தை அருகில் சென்று காண முடியும். ஆனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் நடந்துசென்று பார்க்கும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை:

மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து பண்ணவாடி பரிசல் துறைக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகம் இதற்கு தீர்வு காணும் விதமாக விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அதிக அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.