ஓடிக்கொண்டிருந்தவனுக்குள்ளே ஓர் சத்தம்! வித்யா’வின் பார்வை

Share this page with friends

அன்று மாலை
அந்த இளஞ்சிவப்பு சூரியனுக்கு
மறைய மனமில்லை.


தனக்குக் கீழே நடக்கிற
அநியாயத்தைக் கண்டு
முடிவைப் பார்க்க
முனைப்புடன் இருந்தாலும்
 
கட்டாயத்தின் பேரில்
அஸ்தமனமாகிவிட்டது.

அந்த கெத்செமனே தோட்டத்தை
இருள் கொஞ்சம் கொஞ்சமாக தனது
ஆதிக்கத்திற்குள்
கொண்டுவந்துகொண்டிருந்தது.

இயேசுவானவர்
தனது ஊழியப் பயணத்தின்  
இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டார்.

சர்வலோகத்தின் பாவங்களுக்காக
சிலுவையில் குருதி சிந்த
ஆயத்தமாகிவிட்டார். 
பாடுகளின் பாதைகளில் பவனியை
கெத்செமனே தோட்டத்தில்
ஆரம்பித்துவிட்டார்.

மனுஷகுமாரன்
பாவிகளுடைய கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படுகிற
வேளை வந்தது
(மத்தேயு 26:45)

காட்டிக்கொடுக்கிறவன்
முப்பது வெள்ளிக்காசுக்காக
தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு,
தனது ஒத்திகையை முடித்துக்கொண்டு,
குற்றமில்லாத இரத்தத்தைக்
காட்டிக்கொடுக்க,
ஏதோ வேட்பு மனு தாக்கல்
செய்யப்போகிறவனைப்போல
புடைசூழ புறப்பட்டு வந்துவிட்டான்.


பத்து வருஷமா பக்குவமா பார்த்துகிட்ட
நகோமியைப் பார்த்து
சத்தமிட்டு அழுது
முத்தமிட்டுப்
போய்விட்ட
ஒர்பாளை அறிவோம்.

மூன்றரை வருஷமா
பணப்பையைக் கையில் கொடுத்து
கணக்குக் கேட்காமல்,
ஊழியத்தில் பயன்படுத்திய 
இயேசுவைப் பார்த்து,
ரபீ வாழ்க என்ற
வஞ்சக வார்த்தைகளை
அள்ளிவீசி  
உன்னதரை கட்டியணைத்து
முத்தமிட்டு
காட்டிக்கொடுத்துவிட்டு 
தனக்குத் தானே முடிவுரையை
எழுதிவிட்ட யூதாஸைத் தெரியுமா?.

சத்தமிட்டு வாழ்த்தி
முத்தமிட்டு காட்டிக் கொடுத்தவனை
முற்றிலும் அழித்துவிட்டு

தப்பிச்செல்லாமல்
சினேகிதனே

என்னத்திற்க்காக வந்திருக்கிறாய்?
என்று கேட்டு இயேசு சரித்திரம்

படைத்துவிட்டார்.

சத்துருக்களைச் சிநேகியுங்கள் என்று
மலைப் பிரசங்கத்தில் சொன்னவர்
(மத்தேயு 5:44)
கெத்சமனே தோட்டத்தில் 
மறந்துவிடவில்லை.


உடனே அவர்கள் கிட்ட வந்து
இயேசுவின் மேல் கைபோட்டு
அவரைப் பிடித்தார்கள்
( மத்தேயு 26:50)

உடனே பேதுரு ஆத்திரமடைந்து
தனது பட்டயத்தை உருவி
பிரதான ஆசாரியனுடைய
வேலைக்காரனை
கதறக் கதற,
காதற வெட்டினான்.

தன் செவிகளில் ஒன்றை
பறிகொடுத்த மல்குஸ்
செய்வதறியாது நின்றபோது,
கீழே கிடந்த காதை எடுத்து
மறுபடியும் அதை ஒட்டவைத்து
இயேசு உடனே
அற்புதம் செய்துவிட்டார்.

மல்குஸ் உணர்ச்சிவசப்பட்டு
இயேசுவின் பாதங்களில் விழுந்து
முத்தமிட்டு அழுது
நன்றியைக் காணிக்கையாக்க
நினைத்தாலும்
சூழ்நிலை அவனைத்
தூரப்படுத்திவிட்டது.


இந்த நிலையில்
இயேசுவைப் பிடித்தவர்கள்
அவரை பிரதான ஆசாரியனாகிய
காய்பாவிடம் அழைத்துச்
செல்லவிருந்த சமயம் வந்துவிட்டது.

அப்பொழுது சீஷர்களெல்லாரும்  
அவரைவிட்டு ஓடிப்போனார்கள்

(மத்தேயு 26:56)

பேதுரு தூரத்திலே
அவருக்குப் பின்சென்று

பிரதான ஆசாரியனுடைய
அரண்மனைவரைக்கும் வந்து,
உள்ளே பிரவேசித்து
முடிவைப் பார்க்கும்படி
சேவகரோடே உட்கார்ந்தான்

( மத்தேயு 26:58)

மூன்றரை ஆண்டு ஊழியத்தில்  
இப்படிப்பட்ட முற்றத்தில்
ஒருபோதும் அவன் உட்கார்ந்ததில்லை!   

அத்தனை அற்புதங்களையும்
கண்ணாரக் கண்டவர்கள்
பலமுறை அற்புதத்தின்
அப்பங்களையும் மீன்களையும்
இயேசுவின் கரங்களிலிருந்து
வாங்கிப் புசித்தவர்கள்
கர்த்தருடைய பந்தியில்
பங்கெடுத்தவர்கள்
இப்போது புறமுதுகு காட்டி
தலைதெறிக்க

ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

இவர்களை
காட்டு யானையோ,
ரோம சேனையோ

துரத்தவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.    

இன்றைக்கும் இதுபோல
சூழ்நிலைகளைக் கண்டு
ஒருவரும் துரத்தாமலேயே
சரீரமாகிய சபையைவிட்டு
ஒருகூட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இயேசுவை விட்டு ஓடி,
மறுதலித்து பின்பு பேதலித்து
வாழத்தெரியாமல் வாழும் ஒரு கூட்டம்
இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறது.

ஓடின சீஷர்களோடு
அழைக்கப்பட்டவனும்
( மத்தேயு 4:19)  
அவரைப் போல  வலிமையான
சமுத்திரத்தின் அலைகள் மீது
நடந்து சென்றவனுமாகிய
பேதுருவும் ஓடிக்கொண்டிருந்தான்.

பத்தோடு பதினொன்றாக
கூட்டத்திற்குள்ளே
ஓடிக்கொண்டிருந்தபோது,
அவனது மனசாட்சி
விழித்துக்கொண்டது.


இயேசுவின் இதயத் துடிப்பின் சத்தம்
அவனுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது. 
பேதுருவால் அந்த சத்தத்தைத்
தவிர்க்க முடியவில்லை.

இதோ,
இயேசுவின் இதயம்
பேசுகிறது


எல்லாரும் இடறலடைந்தாலும்
நான் ஒருக்காலும்

இடறலடையேன் என்று
சவால்விட்ட பேதுருவே,
இந்த மாலை மயங்கும் நேரத்தில்
என்னைக் விட்டு
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்? 

திரளான தண்ணீர்களைப்
பார்த்துப் பயப்படாமல்
அலைகளைக் கண்டு அஞ்சாமல்
தண்ணீர்கள்மேல் நடந்து வா
( மத்தேயு 14: 29)  
என்றபோது
உடனே படவை விட்டு இறங்கி
என்னை நோக்கி நடந்து வந்தாயே! 

தண்ணீர்கள்மேல் நடந்தவன்
இப்போது தரையில்

பின்னோக்கி ஓடுகிறாயே?
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்?

நீங்களும் போய்விட
மனதாயிருக்கிறீர்களா? என்றபோது
ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்
நித்திய ஜீவவசனங்கள்
உம்மிடத்தில் உண்டே என்று
மார்தட்டிப் பேசின பேதுருவே,
இப்போது யாரைநோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறாய்?

என்னை யார்
என்று சொல்லுகிறார்கள்?
(மத்தேயு 16:13 ) என்று நான் கேட்டபோது
முந்திக்கொண்டு முன்னறிவித்து
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய
கிறிஸ்து என்று முழங்கினாயே!

இப்போது  வெளிப்பாடுகளை இழந்து
ஏன் வெளியே ஓடிக்கொண்டிருக்கிறாய்?

நான் சீஷர்களின்
கால்களைக் கழுவினபோது
முதலில் தடைசெய்து
பின்பு என்னிடம் உனக்கு
பங்குமில்லை பாகமுமில்லை என்று
சொன்னமாத்திரத்தில்
என் கால்களை மட்டுமல்ல
என் கைகளையும் என் தலையையும்
கழுவவேண்டும் என்றாயே
(யோவான் 13:6-9)
இப்போது எந்த பங்கை நோக்கி,
எந்த பாகத்தை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறாய்?

சாத்தான் உங்களைப்
புடைக்கிறதுக்கு
உத்தரவு கேட்டுக்கொண்டபோது

நான் உன் விசுவாசம்
ஒழிந்து போகாதபடிக்கு
உனக்காக வேண்டிக்கொண்டேனே
(லூக்கா 22:32)
இப்போது எனக்காக
வேண்டிக்கொள்ளத்தான்
ஓடிக்கொண்டிருக்கிறாயோ?

காவலிலும் சாவிலும்
உம்மைப் பின்பற்றிவர
ஆயத்தமாயிருக்கிறேன் என்று
சவால்விட்ட நீ
(லூக்கா 22:33)
இப்போது எனது பாடுகளின்
துவக்கத்திலேயே
என்னைவிட்டு தூரம் போனதென்ன?

இயேசுவின் இதயத்துடிப்பு
பேதுருவின் ஓட்டத்தை
தடுத்து நிறுத்தியது.

தடையேதும் இல்லாமலேயே
தடுமாறிக்கொண்டிருந்தான்.


யாரும் இழுத்துப் பிடிக்காமலேயே
நின்றுவிட்டான்.
அவனது உள்ளம்
திரும்பிப் போகக் கட்டளையிட்டது
.

ஓடிவந்த பாதையிலேயே
திரும்பிச் செல்லத்
தீர்மானித்துவிட்டான்.
மெல்ல நடந்தான்.


ஒருவழியாய்
அரண்மனைவரைக்கும் வந்து
முடிவைப் பார்க்கும்படி
அங்கே சேவகரோடே உட்கார்ந்தான். 

போதகரோடு இருந்தவன் இப்போது
பாதகரோடு உட்கார்ந்திருக்கிறான். 

மற்ற சீஷரைப் பார்க்கிலும்
பேதுருவை கொஞ்சம்
பாராட்டலாம்.
முடிவைப்  பார்க்க
முற்றத்திற்காவது
வந்துசேர்ந்தானே!

இன்றைக்கும்
அந்த மற்ற பத்து சீஷரைப் போல
சூழ்நிலைகளைக் கண்டு
இயேசுவோடு நெருங்கி ஜீவிக்க பயந்து
விசுவாசத்தை இழந்து
இயேசுவை விட்டு தூரம்போக துணிந்து
இறுதியில் சாத்தானின்
வஞ்சக வலையில் விழுந்து
அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து
வேதவாசிப்பு ஜெபம் 
என்கிற சிறகுகள் ஒடிந்து
ஏறிவந்த ஆசீர்வாத ஏணியிலிருந்து சரிந்து
இரண்டாம் மரணமாகிய அக்கினியும்
கந்தகமும் எரிகிற கடலில் விழுந்து
போகிறார்களே?

இது பிசாசின்
தந்திரமேயன்றி
வேறென்ன?

பேதுரு முற்றிலும் தூரம்போகாமல்
முற்றத்திற்காவது வந்தானே!

எல்லாரும் ஓடிவிட்டபோது
தூரத்திலிருந்தாவது
என்னைப் பார்க்க பேதுரு
வந்திருக்கிறானே என்று
இயேசு நினைத்திருப்பார்.

இயேசுவை விட்டுவிட்டு
சிலுவையை மாத்திரம் 
கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்?

பேதுருவைப் போல
சூழ்நிலை இருந்தாலும்
உயிர்த்தெழுந்த இயேசு
உன்னோடிருக்கிறாரே!

கூடுதலாக பரிசுத்த ஆவியானவர்
உனக்குள் வாசமாயிருக்கிறாரே
.

இயேசுவை விட்டு தூரம் போக
நீங்கள் நினைத்தால்
சோரம் போவதும்
சாரமிழந்து தனிமையில்
தவிக்கப்போவதும் நீங்களே!

யுத்தக் குதிரையைப் போல
ஓடவேண்டிய நீங்கள்
தொத்த குதிரையைப் போல
இயேசுவை விட்டுவிட்டு
எதிர்திசையில் ஓடினால்
உங்கள் எதிராளியாகிய பிசாசானவன்
கெர்ச்சிக்கிற சிங்கம்போல ஓடிவந்து
விழுங்கி விடுவானே!
அப்போது என்ன செய்வீர்கள்?

சொன்னபடியே மூன்றுதரம்
மறுதலித்த பேதுருவை
திரும்பிப் பார்த்த அன்பரின் கண்கள்
இன்றைக்கு உங்களையும் என்னையும்
திரும்பிப் பார்க்கிறது.

இயேசுவின் கனிவான
பார்வையைக்
கவனித்துப் பாருங்கள்

அப்பொழுது கர்த்தர் திரும்பி,
பேதுருவை நோக்கிப்பார்த்தார்.
சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை
மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று
கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை
உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
வெளியே போய்,
மனங்கசந்து அழுதான்
( லூக்கா 22:61,52)

இயேசு உங்களுக்காக
சிலுவையில் சம்பாதித்துக் கொடுத்த
இவ்வளவு பெரிய இரட்சிப்பைக் குறித்து
கவலையற்று உலகத்தின்பின்னே
ஓடிக்கொண்டிருந்தால்
தண்டனைக்கு எப்படித்
தப்பிக்கொள்வீர்கள் (எபிரெயர் 2:4)

உங்கள் வாழ்க்கைப் பயண ஓட்டத்தின் முடிவில்
யாரைச் சந்திக்கப் போகிறீர்கள்?

லாசரு ஐசுவரியவான் பற்றி
இயேசு சொன்னதை

நினைத்துக்கொள்ளுங்கள்
(லூக்கா 16:19-31)

இயேசுவை விட்டு
எதிர்திசையில் ஓடினால்
முப்பது வெள்ளிக்காசை
மட்டுமே சம்பாதிக்கலாம்.

அதுவும் கொஞ்ச நேரத்தில்
கையை விட்டு போய்விடும்.
முடிவு பரிதாபமாய் மாறிவிடும்.

உங்கள் ஓட்டம்
இயேசுவோடிருக்கட்டும்.

இயேசுவின் பின்னே நான் செல்வேன்
திரும்பிப்பார்க்கமாட்டேன்
என்று
தீர்மானம் எடுத்துவிடுங்கள்.

உயிர்த்தெழுந்த இயேசுவோடு
நீங்கள் ஓடினால் உங்கள் ஓட்டம்
இலகுவாயிருக்கும்
இனிமையாயிருக்கும் அங்கே
தனிமை என்பதற்கே இடமில்லை.
மேகம்போன்ற இத்தனைத் திரளான
சாட்சிகள் நமக்கு உண்டு.

உங்கள் வாழ்க்கைப்  பயணம்
சுமையாக அல்ல,
சுவையாக
இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
மதுரை -14


Share this page with friends