அந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன? வித்யா’வின் பார்வை!

அப்போஸ்தலனாகிய பேதுருவிடம்
பேசிக்கொண்டிருக்கும்போதே
விழுந்து
ஜீவனை விட்டவன் அனனியா
(அப்போஸ்தலர் 5:5)
சபைக்குள்ளிருக்கும் போது
சடுதியில் சகாயத்தை
இழந்தவனை,
எழுந்து
அடக்கம்பண்ணியது
பேதுருவல்ல,
சபையில் இருந்த வாலிபர்கள்!
துரித வேளையில் அனனியாவின்
அடக்கத்தை முடித்துவிட்டு
அடக்கமாய் சபையின் வாசலில்
காத்திருந்த வாலிபர்களுக்கு
அடுத்த ஊழியம் காத்திருந்தது!
மூன்றுமணி நேர
இடைவெளிக்குப் பின்
இரண்டாவது…. ஆராதனை
(அப்போஸ்தலர் 5:7)
இல்லை இல்லை..
இரண்டாவது அடக்கம்!
புருஷனைப் போலவே
சபை நடுவே
விழுந்து
ஜீவனை விட்டாள்,
சத்தியம் கேட்ட சப்பீராள்!
சப்பீராள் என்றால்
அழகானவள்,
இனிமையானவள் என்று அர்த்தம்
இப்போதும்
அப்போஸ்தலர் அல்ல,
வாலிபர் குழு
அடக்கத்தை
செய்து முடித்தது!
அவர்தான் அடக்கம்பண்ணனும்
இவர்தான் வரணும் என்ற
பேச்சுக்கே இடமில்லை
பரிசுத்தாவியினிடத்தில் பொய்
சொல்லும்படி,
தங்கள் இருதயத்தை
நிரப்பினவர்களுக்கு
கிடைத்தது ஒரு
சோலைவனம் அல்ல!
ஒரு சீலை மாத்திரமே!
அந்தச் சீலையை வைத்துச் சுற்றி
கொரோனா நோயாளியைப் போல
ஒருசில நிமிடத்திற்குள்
காரியத்தை முடித்துவிட்டார்கள்
காணியாட்சியை விற்றுவிட்டு
காணிக்கையில்
கை’வைத்துவிட்டு
காலாவதியாகிப்
போனவர்கள் நிமித்தம்
சபையாருக்கு
மன நடுக்கம் உண்டானது
இதை ரிக்டர் அளவில்
கணக்கிட முடியாது
சபைக்கு கிடைத்தது
அதிர்ச்சி வைத்தியம்
விசுவாசிகளுக்கு கிடைத்தது
மின்சார வைத்தியம்
இது Master Health checkup அல்ல,
MASTER உடைய Health checkup
இதனால் பயந்துபோய்
சபையை விட்டு விட்டு
யாரும் அடுத்த தெருவில்
இருந்த சபைக்குப்
போய்விடவில்லை
காரணம்,
அடுத்த தெருவில்
சபை ஏதுமில்லை!
இந்நாட்களில்
தெருவுக்கு
நாலு சபை இருப்பதால்
இந்த மடம்
இல்லாவிட்டால்
இன்னொரு சந்தை மடம்
என்ற மனோ(பாவத்தில்)
விசுவாசிகளின் மனம்
அலைபாய்கிறது
போதாக்குறைக்கு
இந்த ஊரடங்கு நாட்களில்
போதகர்களின் அதிரடி வரவால்
விசுவாசிகள்,
விலை பேசப்பட்டு
பணய கைதிகளைப் போல
கொண்டுபோகப்படுகிற
அவல நிலை ஏற்பட்டுள்ளது
அந்த அலங்கார வாசலில்
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக
அமர்ந்திருந்தவன்
ஆலயத்தை (அப்போஸ்தலர் 3)
மாற்றிக்கொள்ளவில்லை!
ஆலயத்தின் கதவு
திறக்கப்படும்போதும்
பூட்டப்படும்போதும்
தனது இருப்பிடத்தை
மாற்றிக்கொள்ளாதவன்!
தினந்தோறும் ஆலயத்திற்கு
முதலாவது ஆளாக வருவான்
கடைசியாகச் செல்லுவான்
Such a Staunch Beggar
அவன்
விசுவாசியுமல்ல,
சுகவாசியும் அல்ல
அவன்
சப்பாணிகளின் சகவாசி!
அவனது ஆலய உண்மை
நடந்துகொண்ட தன்மை
அற்புதத்திற்கு அகல ரயில் பாதையை
அமைத்துக் கொடுத்துவிட்டது
ஆலயத்திற்கு எத்தனைபேர்
வருகிறார்கள்? என்று
ரபீ ‘க்கு கூட தெரியாது!
ஆனால் இவனுக்கு
அத்தனைபேரின் முகமும் அத்துப்படி
பேதுருவும் யோவானும்
அந்த அலங்கார வாசலுக்குள்ளே
பிரவேசிக்கிற அன்றையதினம்
அலங்கோலமாய் இருந்த அவனுக்கு
அற்புத விடுதலை கிடைத்ததுவிட்டது
இது அந்த அலங்கார வாசலில் நடந்த
அற்புதத் திருவிழா
குதித்தெழுந்து நின்று,
நடந்தான்; நடந்து, குதித்து,
தேவனைத் துதித்துக்கொண்டு,
தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்
நிலத்தை விற்றதில்
ஒரு பங்கை
ஒளித்துவைத்துவிட்டு,
ஒய்யாரமாய் நடந்து
வேதத்தைச் சுமந்து
வீதிகள் பல கடந்து
சபைக்குள் நுழைந்து
சடுதியில் சங்காரமானதற்கு
சபை எந்த விதத்திலும்
பொறுப்பாகாது!
சத்தமில்லாமல்,
சந்தடி பண்ணாமல்,
பரலோகமே என்
சொந்தமே என்று
பாடாமல்,
சபைக்கு
உண்மையாய் இருந்தார் என்று
பொய் சாட்சி ஏதும் சொல்லாமல்,
நல்ல போராட்டத்தைப்
போராடினார் என்று
போதகர் தனது பங்குக்கு ஒரு
பொய்யைச் சொல்லாமல்,
இளம் தீமோத்தேயுக்கள்
நல்ல போர்சேவகர்களாய் எழும்பி
போர்க்கால அடிப்படையில்
வஞ்சிக்கப்பட ஒருமனப்பட்ட,
சாத்தானுக்கு இடமளித்த
இருவரையும்,
அருகருகே
ஆறடி ஆழத்திற்குள்
அமிழ்த்திவிட்ட
அந்த சம்பவத்தை
இன்றைக்கு நினைத்தால்கூட
ஈரக்குலையே நடுங்குகிறது!
இந்தக் கடைசிக்காலத்தில்
குறிப்பாக
இந்தத் தவக்காலத்தில்
இதைச் சிந்தனைக்கு
எடுத்துக் கொண்டால்
நலமாயிருக்கும்
கர்த்தருடைய சரீரத்தையும்,
அதாவது சபையையும்,
கர்த்தருடைய இரத்தத்தையும் குறித்து
குற்றமற்றவர்களாய் இருக்க
ஒப்புக்கொடுப்போம்
(1 கொரிந்தியர் 11:27)
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக
ஆலயத்தின் வாசலில் கிடந்தவன்
அன்றைய தினம் ஆலயத்திற்குள்
பிரவேசித்துவிட்டான்
(அப்போஸ்தலர்4:22)
ஆலயத்திற்குள்ளிருந்து
சத்தியம் கேட்டவர்கள்
கர்த்தர் நிலத்தைத் தந்தார்,
கர்த்தர் வீட்டைத் தந்தார்,
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்
என்று சாட்சி சொன்னவர்கள்
அன்றைய தினம்
கிப்ரோத் அத்தாவா’ வில்
(எண்ணாகமம் 11:34)
அடக்கம்பண்ணப்பட்டார்கள்
கொஞ்சத்திலும்
பஞ்சத்திலும்
உண்மையாய் இருந்த
பிறவிச் சப்பாணி
குதித்தெழுந்து
எஜமானுடய சந்தோஷத்திற்குள்
பிரவேசித்துவிட்டான்
மாம்ச சிந்தை மரணம்;
ஆவியின் சிந்தையோ ஜீவனும்
சமாதானமுமாம் (ரோமர் 8:6) |
இப்படியிருக்க, தன்னை
நிற்கிறவனென்று எண்ணுகிறவன்
விழாதபடிக்கு
எச்சரிக்கையாயிருக்கக்கடவன்
(1 கொரிந்தியர் 10:12)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
ஐயர் பங்களா, மதுரை -14