அப்சலோமின் ஆரவாரங்கள்…இது வித்யா’வின் பதிவு

Share this page with friends

இன்றைய உலகில்
இப்படிப் பேசுகிறவர்களும் உண்டு;


அதாவது, இப்போதைய
உலகிற்கு ஏற்ற ஆளாக
நீங்கள் இருப்பதில்லை
என்று!

ஏமாற்றுகிறவர்கள் ஏராளமாய்
பெருத்துவிட்டார்கள்.
ஒருவரை ஒருவர் ஏமாற்றித்தான்
வாழவேண்டியிருக்கிறது
என்றும்
பேசிக் கொள்ளுகிறார்கள்.

கவர்ச்சியும் புத்திசாலித்தனமும்
சேர்ந்துவிட்டால், உலகையே அடித்து
உலையில் போட்டுவிடலாம்
என்று
அறிஞர் பெர்னாட்ஷா சொன்னது
நினைவிருக்கலாம்.

ஒரு கவர்ச்சிப் பெண்,
ஒரு புத்திசாலி அறிஞரைப் பார்த்து
இப்படி கேட்டாளாம்;


நாம் திருமணம் செய்துகொள்வோம்.
என்னுடைய அழகும்
உங்களுடைய அறிவும் சேர்ந்து
நமக்கு ஒரு குழந்தை பிறந்தால்
எவ்வளவு சிறப்பாக இருக்கும்?


அந்த அறிஞரின் பதில்;
என் அழகும் உன் அறிவும் சேர்ந்து
குழந்தை பிறந்துவிட்டால்
என்னசெய்வது?


அந்த அழகி வெட்கபட்டுப் போனாள்.  
(இன்னொரு முறை வாசியுங்கள்.
பின்னர் சிரியுங்கள்).

ஏமாற்றுவதைக்
கலையாகக் கற்று

பயன்படுத்தும் அளவிற்கு
காரியங்கள்
நடந்துகொண்டிருக்கின்றன.

சுயநலமே
இதற்கு காரணம்.

மக்கள் மனதை
தன் பக்கமாக ஈர்க்க
அவர்கள்மேல் தாங்கள்
ஆதிக்கம் செலுத்த,
பேரும் புகழும் பெற்று
தலைவர்களாக மாறி
உலகை வலம்வர

அவர்கள் படும் பாடு
எடுத்துக்கொள்ளும்  பிரயாசை,
மந்திர, தந்திர, எந்திர மாயங்கள்,
இவைகளெல்லாம்
மக்கள் வியக்கும்வண்ணம்
வளர்ந்துகொண்டிருக்கிறது.

உண்மைக்கும் நேர்மைக்கும்
புறம்பாக மக்களை இரட்டை
வாழ்க்கை முறைக்கு
கொண்டு சேர்க்க,
தன் உள்ளத்தால் ஒரு வாழ்க்கை,
புறத்தில் மக்கள் மத்தியில்  
காண்பிக்க ஒரு வாழ்க்கை! 

இவை இறுதியில்
வெற்றிபெறுவதுமில்லை,
நிலைநிற்பதுமில்லை.

இவற்றை சத்தியம்
ஏற்றுக்கொள்வதுமில்லை.

சத்தியத்திற்குச்
சாட்சியாக வந்த ஆண்டவர்
இயேசுகிறிஸ்துவும்
இதை ஏற்றுக்கொள்வதில்லை.

மதம் என்ற போர்வையில்,
போட்டிபோட்டு நாளொரு மேனியும்
பொழுதொருவண்ணமுமாக
தங்களை முன்னேற்றிக்
கொண்டிருக்கும் மக்களை,

கிறிஸ்து எவ்வாறு சாடுகிறார் என்பதை
சுவிஷேசப் புத்தகங்களில் காணலாம்.

என் சத்தம் கேட்கவேண்டுமென்றால்,
நீ சத்தியவானாக இரு
என்றுதான் கூறுகிறார்.

தாவீதின் மகன் சாலொமோனை
எல்லாரும் அறிவார்கள்.

தாவீதின் மூன்றாவது மகன்
அப்சலோமை
எத்தனைபேருக்குத் தெரியும்?.


அவனைப் பற்றி நாம்
ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

இப்போதைய சூழ்நிலையில்
அப்சலோமின் ஆவி
அநேகரை ஆட்கொண்டுவருகிறது.

கடைசிக் காலம்
இன்னும் சொல்லப்போனால்
கொடிய காலம்

கொடிய காலம்
கொடிகட்டிப்

பறந்துகொண்டிருக்கிறது
(2 தீமோத்தேயு 3:1)

தப்பிக்கொள்ளவேண்டாமா?

உலகில் அப்சராஸ் என்ற பெயர்
பிரபலமாகி கொண்டுவருகிறது.
அதாவது உலக மேன்மை,
இன்பம், புகழ், மயக்கம் என்று
அதற்குப் பொருள்.

அப்சலோம் என்றால்
பிதா சமாதானம் உள்ளவர்

என்று அர்த்தம்.

ஆனால் பெயருக்கும்
அவன் வாழ்க்கைக்கும்

எந்தவித சம்பந்தமும் இல்லை.
Absalom (Hebrew: “father of peace”),

அவன் உருவம் அழகுடையது.
அவன் உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
பழுதொன்றுமில்லை.
அவனுடைய கவர்ச்சி நிறைந்த 
வசீகரமான அழகு
அன்றைய இஸ்ரவேலரில்
எவருக்கும் இல்லை.  

தகப்பன் தாவீதை வீழ்த்திவிட்டு
அரியணையில் ஏறி
நாட்டை ஆளவேண்டும்

என்ற தீராத ஆவல். 

மக்களுக்காக தலைவன் என்ற
தத்துவம் தகர்ந்துபோய்
தலைவனுக்காக மக்கள் என்ற நிலை
தலை தூக்கியிருக்கிறது.

அவனைப் பற்றி வேதம் சொல்லுகிறது;
அலங்கத்தின் வாசலில் அவன்
அலங்காரமாய் நிற்பான்.
எவனாகிலும் ஒருவன் வணங்க வந்தால்
தன் கையை நீட்டி அவனைத் தழுவி
முத்தம் செய்வான்.


காலைதோறும் எழுந்திருந்து
பட்டணத்து வாசலுக்குப் போகிற
வழியோரத்தில் நின்றுகொண்டு
தன் தகப்பனான தாவீது ராஜாவிடம்
போகவிடாமல் வழிமறிப்பான்.
எல்லா நியாயமும்
என்னிடத்தில் உண்டு என்று
பறைசாற்றிக்கொண்டிருப்பான்.

தன் பதவிப் பசியைப் போக்க
ஆள் பிடித்தான்.
மந்திரியும் தந்திரியும்
தன் கைக்குள்ளே,
காலம் கனியும்வரை
கட்டம் கட்டமாக

திட்டம் தீட்டி ,
இரண்டு வருடம், மூன்று வருடம்
என பதுங்கியிருந்து செயல்பட்டவன்.

அண்ணன் வாழ்க,
வருங்கால மன்னன் வாழ்க
என்று
தன்னை எப்போதும் வாழ்த்திக்கொண்டும்
தனக்கு முன்னே ஓடிகொண்டுமிருக்கிற
ஐம்பது பேரைச் சம்பாதித்தான்
(2 சாமுவேல் 15 :1).

ராஜ குமாரர்களுக்கு
அடிக்கடி விருந்து வைத்து
விஷயங்களைக் கக்க வைத்து,
தக்கவைத்து,  சேகரித்து
நேரம்வரும்போது அவர்களைத் தந்திரமாய்
கொன்றுகுவித்தான்.

பழிவாங்கும் போக்கு
அவன் உள்ளத்தில் எப்போதும்
பதுங்கி இருந்தது.


கவர்ச்சியாலும்
தன் கனிவான பேச்சினாலும்
இஸ்ரவேலில்
ஒவ்வொருவனின் இருதயமும்
அப்சலோமைப் பற்றிப் போகிற
நிலை உண்டானது.

இப்போதும்
அதே நிலைதான் நீடிக்கிறது.

அகித்தோப்பேலின் ஆலோசனை
அவனை
அலற வைத்துக்கொண்டிருந்தன.


தன் தகப்பனுக்கு எதிராக
தலைவனானான்.


ஆனால்
அவன் தலையோ சன்னல்பின்னலான
கார்வாலி மரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தது.


அவனுடைய அழகான பின்னப்பட்ட
நெடுங்கூந்தல்
கர்வாலி மரத்தின் முட்களில்
சிக்கிக்கிடக்கிறது.

ஆண்கள் நெடுங்கூந்தல் வைப்பதற்கு
அப்சலோம் அஸ்திபாரமிட்டவன்.

அப்சலோமின் ஆரவாரங்கள்
தற்காலிகமானவை.
சில வாரங்கள் தலைவனைப் போல
நடித்துக்கொண்டிருந்தான். 

ஆண்டவருக்கும் மக்களுக்கும் நடுவே
எந்தவொரு மனிதனும்
தன்னை உயர்த்திக்கொண்டு
நிற்கவேண்டாம், நடிக்கவேண்டாம்
.

அப்படிப்பட்ட மனிதர்களை மக்கள்
பின்பற்றவும்வேண்டாம்.
ஆதரிக்கவும் வேண்டாம்


அவர்கள் தங்களுக்குத் தாங்களே
நினைவுத்தூணை
ஏற்படுத்திக்கொள்ளுபவர்கள்

(2 சாமுவேல் 18:18).

இவர்களுக்குப் பெயர்
அப்சலோமின் அடையாளங்கள்
என்று வேதம் கூறுகிறது.

இன்றைக்கும் அந்த நினைவிடம்
இஸ்ரவேலில் பள்ளத்தாக்கில் உண்டு.

ஆனால் இறுதிவரை நின்று ஜெயம்பெற்ற
தாவீதின் கல்லறை அதற்கு எதிரே
சீயோன் மலையிலே உச்சியிலே
கெம்பீரமாக எழும்பி நிற்கிறது.

தேவப்பிள்ளையே,
நீ தாவீதைப்போல
பொறுமையாக இரு.

ஆனால்
இறுதி வெற்றிக்கு
முன்னேறிக்கொண்டிருக்கிற நாட்கள்
இவைகள்
என்பதை உணர்ந்துகொள்.

வீண் ஆரவாரத்திற்கு
அடிமைப்பட்டுவிடாதே.
கர்த்தர் உனக்கு கொடுத்த
கர்த்தருடைய நாமத்தைச் சொல்லி 
உலகிற்கு இயேசுவை அறிவித்ததால்
கிடைத்த பணத்தை
பொருளை
வீணான ஆடம்பரத்திற்கோ
ஆரவாரத்திற்கோ செலவிட்டுவிடாதே

வாரந்தோறும்
கிடைக்கிற காணிக்கை
மாதந்தோறும் வாங்குகிற சம்பளம்
உன் ஆரவாரத்திற்கு
கொடுக்கப்படுகிறதல்ல

என்பதை  அறிந்துகொள்.

தாலந்துகளைத் தந்தவன்
கணக்குக் கேட்பதுபோல
அனைத்தையும் தந்தவர்
உன்னிடத்தில்
கணக்குக் கேட்பார்.

சீமேயியைப் போல
யார் உன்னை  தூஷித்தாலும்
பொறுமை காட்டு
.

பகட்டான வாழ்க்கை வேண்டாம்.
பக்தியுள்ள வாழ்க்கை வேண்டும்.
தங்களைப் பற்றி தாரை ஊதும்
வாழ்க்கை வேண்டாம்.
தாழ்மையுள்ள வாழ்க்கைப் போதும்.

வரப்போகிற காலம்
தாவீதின் குமாரனாகிய 
இயேசுகிறிஸ்துவின் காலம்.
ராஜாதி ராஜாவாகிய
அவரை வரவேற்க ஆயத்தப்படு. 
 

ராஜாதி ராஜாவை விட்டுவிட்டு,
தாவீது ராஜாவையும் விட்டுவிட்டு

அப்சலோம் பின்னே
ஓடின ஒரு கூட்டத்தைப் போல,

இக்கால அப்சலோம்களைக் கண்டு
அவர்களுடைய ஆரவாரங்களைப் பார்த்து
அவர்கள் பின்னே ஓடிவிடவேண்டாம்.

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
(1939 – 2021)

தொகுப்பு :
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends