ஆலயத்தில் அன்னாள் (கிறிஸ்துமஸ் சிறப்பு கவிக் கட்டுரை)

Share this page with friends


ஆலயத்தில் அன்னாள்

 ‘’வாழ்க்கை என்பது
துணிச்சல் அடங்கிய முயற்சி
சலிப்பில்லாமல் போராடப்
பழகிக்கொண்டால்
வாழ்க்கையில் அனைவரும்
சுலபமாக வெற்றி
அடைந்துவிடலாம்’’

பார்வையற்ற  
ஹெலன் கெல்லரின்
அனுபவ அறிக்கை

நீங்கள் வாசிக்கப் போவது
சிவகாமியின் சபதம் அல்ல

எண்ணூறு பக்கங்களைக்
கொண்ட அந்தப் புத்தகத்தை
வாசிக்க ஆட்கள் இருக்கும்போது,
ஆலயத்தில் அன்னாள்
என்ற கவிக் கட்டுரையை 
வாசிக்க பதினைந்து நிமிடத்தை  
ஒதுக்கீடு செய்ய
யோசிக்க மாட்டீர்கள்
என்று நம்புகிறேன்

அன்னாள் என்றதுமே
சாமுவேலின் அம்மாதானே
என்பீர்கள். இல்லை இல்லை
இது பானுவேலின் குமாரத்தி

கன்னிப்பிராயத்தில்
கல்யாணம்
ஏழு வருடங்கள் மட்டுமே  
குடும்பப் பிரயாணம்

ஏனோ, இதற்குப் பின் வாழ்வில்
ஓர் திடீர் அஸ்தமனம்

அன்னாளைக் கரம்பிடித்தவர்
கடந்துபோய்விட்டார். அதனால்
அவள் ஓர் உடைந்த பாத்திரம்
போலாகிவிட்டாள்

மல்கியாவுக்கும் மத்தேயுவுக்கும்
இடைப்பட்ட காலங்கள்
இருண்ட காலங்கள் எனப்படும்
இந்தக் காலத்தில் பிறந்த
அன்னாளின் வாழ்க்கையில் ஓர்
இனம்புரியாத இருள் சூழ்ந்துவிட்டது

அன்னாளின் துணிச்சலும் 
அயராத  முயற்சியும்
அவளுக்குள் முளைத்த
சலிப்பை அடக்கம் செய்து,
நம்பிக்கையை
முளைக்கச் செய்துவிட்டது


சாத்தான் தனது பலதரப்பட்ட
ஆயுதங்களையும்
ஒன்றுசேர்த்து
ஒரே ஆயுதமாக
உருவாக்கிவிட்டானாம்

அதுதான் சோர்வு
என்னும் ஆயுதமாம்!

அன்னாளுக்கு விரோதமாக
உருவாக்கப்பட்ட
சோர்வு என்ற ஆயுதமானது
அவள் அந்த இழப்பைச் சந்தித்த
அன்றைய தினமே
வாய்க்காமல் போய்விட்டது

முடங்கிப் போவாள் என்று
நினைத்தவர்களின்
எண்ணங்களை முடக்கி,
சூழ்நிலைகளை அடக்கி

எதிராக வீசின
கோராவாரிக் காற்றைக்
கட்டுக்குள் கொண்டுவந்து,  
எருசலேம் தேவாலயத்திற்குள்
அடைக்கலான் குருவிபோல
அடைக்கலம் புகுந்துவிட்டாள்   

அவருடைய பீடங்களண்டையில்
அடைக்கலான் குருவிக்கு வீடும்
தகைவிலான் குருவிக்கு
தன் குஞ்சுகளை வைக்கும் கூடும்
கிடைத்தது என்று அன்னாளுக்குச்
சொன்னது யாரோ!
(சங்கீதம் 84:3)

பானுவேலின் குமாரத்திக்கு
ஏற்பட்ட பாதிப்பு
அவளைத் தவிர,
சுற்றிலும் இருந்த
அத்தனை பேரையும்
பாதித்தது

நான் மரண இருளின்
பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படேன்

தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும்
என்னைத் தேற்றும் (சங்கீதம் 23:4)
என்று சங்கீதக்காரன் எழுதியதை
வாசித்தவளைப் போல
ஆலயத்தின் வாசலுக்குள் நுழைந்து
அமர்ந்துகொண்டாள்

தேவனே, என் சிறுவயது முதல்
எனக்குப் போதித்து வந்தீர்
இதுவரைக்கும்
உம்முடைய அதிசயங்களை
அறிவித்துவந்தேன்,
இப்பொழுதும் தேவனே,
இந்தச் சந்ததிக்கு
உமது வல்லமையையும்
வரப்போகிற யாவருக்கும்
உமது பராக்கிரமத்தையும்

நான் அறிவிக்குமளவும்
முதிர்வயதும்
நரைமயிருமுள்ளவளாகும் வரைக்கும்
என்னைக் கைவிடீராக

(சங்கீதம் 71:17,18)
ஆமென், என்ற சிறு ஜெபத்துடன்
ஆலய வாழ்க்கையை
ஆரம்பித்துவிட்டாள்


உசியா ராஜா
மரணமடைந்த வருஷத்தில்
ஏசாயாவை ஆலயத்தில் கண்ட
அதே கண்கள் (ஏசாயா 6:1)
உத்தம விதவையான
அன்னாளையும் கண்டது

அன்றைக்கு எகிப்திய
அடிமைப் பெண்ணான
ஆகாரை விசாரித்த தேவன்
அன்னாளையும் விசாரித்தார்

சாலொமோன் கட்டின  
எருசலேம் தேவாலயத்தில்
அன்றையதினம் தேவ சத்தம்
தொனித்திருக்கவேண்டும்!

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை
உன் வாலிபத்தின் வெட்கத்தை மறந்து
உன் விதவையிருப்பின் நிந்தையை
இனி நினையாதிருப்பாய்

உன் சிருஷ்டிகரே, உன் நாயகர் (HUSBAND)
கைவிடப்பட்டு மனம்நொந்தவளான
ஸ்திரீயைப்போலவும்,
இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து
தள்ளப்பட்ட மனைவியைப்
போலவும் இருக்கிற உன்னைக்
கர்த்தர் அழைத்தார் |

இமைப்பொழுது
உன்னைக் கைவிட்டேன்;
ஆனாலும்
உருக்கமான இரக்கங்களால்,
உன்னைச் சேர்த்துக்கொள்வேன். 
(ஏசாயா 54 : 4-7)
என்ற வார்த்தைகள்
உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டு
ஆலயத்திற்குள் வந்துசேர்ந்த  
அன்னாளின் இதயத்திற்கு
எண்ணெய் வார்த்தது
போலிருந்திருக்கும்!

தீர்க்கதரிசினிக்கு ஓர்
தீர்க்கதரிசனச்  
செய்தி கிடைத்துவிட்டது

அன்னாளின் இதயம்
இலகுவாகிவிட்டது
அந்நாளிலிருந்து ஏறக்குறைய
எண்பத்திநாலு வயதுவரை
ஆண்டவரின் வார்த்தை மட்டுமே
அவளது உணவாகிவிட்டது  

உபவாசமும் ஸ்தோத்திர கீதமும்
அன்றுமுதல் ஆரம்பமாகிவிட்டது

72 மணி நேர துதி ஆராதனை அல்ல
84 வயதுவரை துதி ஆராதனை!

Hannah -வை அழுது ஜெபிக்க
ஆலயத்திற்கு அனுப்பியவள்
பெனின்னாள்

Anna – வை துதித்து, ஜெபித்து, உபவாசித்து
ஆராதிக்க ஆலயத்திற்கு
அனுப்பியது தனிமை என்ற பெனின்னாள்!

ஆலயத்தில்
அடைக்கலம் புகுந்த அன்னாள்  
பரிசுத்த ஸ்தலத்தில்
பரிசுத்தரைப் பார்க்க
ஆசையாயிருந்து
ஆண்டவரைக்
கண்ணாறக் கண்டுவிட்டாள்

(சங்கீதம் 63:2)

ஊருக்குள்ளே
சுகபோகமாய் வாழ்கிறவள்
உயிரோடும், உயிரைவிட்டும்
செத்துக்கொண்டிருந்த
நாட்களில்
ஆலயத்திற்குள் அன்னாள்
ஏனோக்கு போல தேவனோடு
சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்
(ஆதியாகமம் 5:24)

ஆகாமிய கூடாரங்களில்
ஆயிரம்பேர் இருந்தாலென்ன
ஆலயத்தின் வாசற்படி போதும்
என்றிருந்த அன்னாளுக்கு,
அவளது தேவ பக்தியே
மிகுந்த ஆதாயமாயிருந்தது
(1 தீமோத்தேயு 6:6)

இளமை முதல் முதுமை வரை
தேவாலயமே என் சரணாலயம்

என்றிருந்த அன்னாளுக்கு,
அந்நாள் ஓர் பொன்னாள்
என்று சொன்னால் அது
மிகையாகாது

பிறந்து எட்டே நாளான
இயேசு பாலகனை
கரங்களில் ஏந்திக்கொண்டு
யோசேப்பும் மரியாளும்
அந்த தேவாலயத்திற்குள்
நுழைந்தனர்

ஓய்வு நாள் தோறும்
வந்துபோன சிமியோன் தாத்தா
அன்றைய தினம் ஆவியின்
ஏவுதலினால் ஆலயத்திற்கு வந்திருந்தார்
(லூக்கா 2:27)

ஆலயத்திற்கு,
ஆலயமணி ஓசை கேட்டு
வரவேண்டுமா? அல்லது
ஆவியின் ஏவுதலினால்
வரவேண்டுமா?
என்ற கேள்விக்கு
இந்தப் பெரியவரிடம்
பதில் உண்டு

இயேசு பாலகனை
கைகளில் ஏந்திக்கொண்டு
தேவனை ஸ்தோத்தரித்து
தீர்க்கதரிசனங்களை உரைத்து
பரலோகத்திற்கு
கடந்து போவதற்குரிய
கடவுச் சீட்டை  (Passport)
பெற்றுக்கொண்டவர்தான்
இந்தப் பெரியவர்
(லூக்கா 2:26)

இதைக் கண்ட அன்னாள்
அங்கே வந்து நின்று,
எருசலேமில் மீட்பு வர
வாஞ்சையோடும்
நம்பிக்கையோடும்
எதிர்பார்ப்போடும் 

மேசியா வருவார் என்று
ஆவலோடு காத்திருந்த
அனைவருக்கும்
வரவேண்டிய மேசியா வந்துவிட்டார்
என்றதொரு தீர்க்கதரிசனச்
சிறப்புச் செய்தியை
பிரசங்கித்து,
போதகரைப் போல
குழந்தைப் பிரதிஷ்டை
ஆராதனையை நடத்திமுடித்தாள்

(லூக்கா 2:38)  

சிமியோன் தாத்தாவுக்கு
கிடைக்காத சிலாக்கியம்
ஆலயத்தில் நாட்டப்பட்ட
பச்சையான பழுத்த
ஒலிவ மரத்திற்கு கிடைத்துவிட்டது

அன்னாளுக்கு
முதல் மரியாதை
மகதலேனா மரியாளுக்கு
முதல் தரிசனம்


இருவரும் வாழ்க்கையில்
உடைக்கப்பட்டவர்கள்
முன்னவர் ஏழு வருடங்கள் மட்டும்
கணவரோடு வாழ்ந்தவர்
பின்னவர் ஏழு பிசாசுகளோடு
வெகு பாடுபட்டவர்
(லூக்கா 8:2)  

உடைந்துபோன
பாத்திரங்களை உருவாக்கி
உபயோகப்படுத்துவதில்
உன்னதமானவருக்கு
நிகர் யாருமில்லை

அன்னாளின்
பரிசுத்த ஆலய வாழ்வு
வீண்போகவில்லை
ஆண்டவர் இயேசுவின்

ஆலய வருகையில் 
அதாவது முதல் வருகையில்
அமைதியாய்
பங்கெடுத்துவிட்டாள்

வாழ்வில் சிறுமைப்பட்டவள்
அன்னாள் என்ற தீர்க்கதரிசி
பெருங்காற்றிலே அடிபட்டவள்
தேற்றரவற்றவள்

ஆனால் தீங்கு நாளில்
கூடாரத்தின் மறைவில்
மறைத்து வைத்து  
ஒளித்துவைத்து
இயேசுவின் முதலாம் வருகையில்
உயர்த்தி வைக்கப்பட்டவள்

கல்லுகளைப் பிரகாசிக்க வைக்கும்
கர்த்தரின் செயல் இதுவே
சிங்கத்தைப் போல தைரியமாய் நின்று
இந்த மேசியா மூலமே இரட்சிப்பு என்று
சத்தமிட்டு முழங்கியது
புகழ்பெற்ற ரபீ அல்ல
ஒதுக்கப்பட்ட ஓர் உத்தம விதவை

60 ஆண்டுகளுக்கு மேலாக
ஜெபத்தில் உறுதி
84 வயதிலும் உபவாசத்தில் உறுதி
முதிர்வயதிலும் அவளிடத்தில்
காணப்படவில்லை அசதி


அன்னாளைப் போல
என் வாழ்க்கை ஆகிவிட்டதே
ஆதரிக்க யாருமில்லையே
என்று எண்ணிக்கொண்டிராமல்,
ஆண்டவர் இயேசு வருகைவரை
தேவன் தங்கும் உங்கள் சரீரமாகிய
ஆலயத்தில் அமைதியுடன் காத்திருங்கள்

உங்கள் நம்பிக்கை வீண்போகாது
இயேசுவின் இரண்டாம் வருகையில்
உங்களுக்குப் பங்குண்டு
நீங்கள் இயேசுவைக் காண்பீர்கள்

(1 தெசலோனிக்கேயர் 4:17)
அல்லேலுயா

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends