
கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.
திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து விதிமுறைகள் ஆகும். கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.
கிறிஸ்தவ அறநெறி
கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் நம்பி, கடைபிடிக்க வேண்டிய விசுவாசத்தை போதிப்பது திருச்சபையின் கடமையாக உள்ளது. நம்பிக்கையாளர்களின் அறநெறி வாழ்வு, ஓர் ஆன்மிக வழிபாட்டுச் செயலாக மாற திருச்சபை உழைக்கிறது. ஆண்டவர் இயேசுவின் வாழ்வை ஒத்ததாக கிறிஸ்தவர்களின் வாழ்வு இருக்கும்போது, உண்மை கடவுள் மீதான விசுவாசத்திற்கு மற்றவர்களையும் ஈர்த்து திருச்சபையைக் கட்டியெழுப்ப முடியும். ஆகவே, செப உணர்வு, அருளடையாள வாழ்வு, அறநெறி அர்ப்பணம், இறையன்பு மற்றும் பிறரன்பில் வளர்ச்சி ஆகியவற்றில் தவிர்க்க முடியாத குறைந்தபட்ச உறுதிநிலையை வழங்க திருச்சபை ஐந்து ஒழுங்குகளை வகுத்து தந்துள்ளது.
ஐந்து ஒழுங்குகள்
திருச்சபை வழங்கியுள்ள ஒழுங்குகள் பின்வருமாறு: (1) ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் பங்கேற்பதுடன், இந்நாட்களின் புனிதத்தைப் பாதிக்கும் வேலைகளையும் செயல்களையும் தவிர்க்க வேண்டும். (2) ஆண்டுக்கு ஒரு முறையாவது, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருளடையாளம் பெற வேண்டும். (3) உயிர்ப்புக் காலத்திலாவது நற்கருணை உட்கொள்ள வேண்டும். (4) திருச்சபை குறித்துள்ள நாட்களில் இறைச்சியைத் தவிர்க்கவும், நோன்பு கடைபிடிக்கவும் வேண்டும். (5) ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு, திருச்சபையின் பொருள்சார் தேவைகளில் உதவி செய்ய வேண்டும்.
சில தெளிவுகள்
‘கடன் திருநாள்’ என்பது, கத்தோலிக்கர்கள் கட்டாயமாக திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க கடமையுள்ள புனித நாளாகும். ஆண்டவரது உயிர்ப்பின் கொண்டாட்டமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்தும் கடன் திருநாட்களாக உள்ளன. கடவுளின் தாய் மரியா (ஜனவரி 1), ஆண்டவரின் திருக்காட்சி (ஜனவரி 6), மரியாவின் கணவர் யோசேப்பு (மார்ச் 19), ஆண்டவரின் விண்ணேற்றம் (மே/ஜூன்), கிறிஸ்துவின் திருவுடல் திருரத்தம் (மே/ஜூன்), திருத்தூதர்கள் பேதுரு, பவுல் (ஜூன் 29), மரியாவின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15), அனைத்து புனிதர்கள் (நவம்பர் 1), மரியாவின் அமல உற்பவம் (டிசம்பர் 8), கிறிஸ்து பிறப்பு (டிசம்பர் 25) ஆகிய பெருவிழாக்கள் மற்ற கடன் திருநாட்கள் ஆகும்.
உயிர்ப்புக் காலத்தில் நற்கருணை உட்கொள்ளும் முன்பாக, ஒப்புரவு அருளடையாளம் பெறுவது அவசியம். சாம்பல் புதன், புனித வெள்ளி ஆகிய நோன்பு நாட்களில் ஒரு வேளை முழு உணவைத் தவிர்த்து, மற்ற வேளைகளில் குறைந்த அளவு உணவு உட்கொள்ள வேண்டும். தூய உணவு நாட்களான சாம்பல் புதன் மற்றும் தவக்கால வெள்ளிக்கிழமைகளில் இறைச்சியை உணவில் சேர்க்கக்கூடாது. திருச்சபையின் பொதுவான ஐந்து ஒழுங்குகளுடன், “குறைந்த வயதிலும், தடையுள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்” என்ற ஒழுங்கையும் கடைபிடிக்க தமிழக ஆயர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
https://www.maalaimalar.com/