சுவிசேஷ ஊழியம் செய்யும் அநேக சுவிசேஷகர்கள் நாங்கள் சபைகளை ஆரம்பிக்கமாட்டோம் சுவிசேஷம் அறிவிப்பதே எங்கள் ஊழியம் என்று சுவிசேஷ ஊழியம் செய்வது மகிழ்ச்சியே… சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு நிச்சயமாக உண்டு பரலோகம் அவர்கள் தேவைகளை நிச்சயமாக சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆனால் சில சுவிசேஷகர்கள் நாளடைவில் திருச்சபையை ஆரம்பித்து தங்களை பாஸ்டர் என்று
அழைத்து சபை ஊழியம் செய்கிறார்கள். அழைப்பை மறந்தா அல்லது அல்லது அழைப்பை நிராகரித்தா என்று தெரியவில்லை.. ஒரு சில சுவிசேஷகர்கள் மற்றும் சுவிசேஷ ஸ்தாபனங்கள் திருச்சபையை ஆரம்பிக்காவிட்டாலும் ஒரு சபையின் போதகரை விட சபையின் விசுவாசிகளையும் அவர்கள் வருமானங்களையும் நன்மைகளையும் அனுபவிக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்னவென்றால் சுவிசேஷகர்கள் தாங்கள் நடத்தும் சுவிசேஷ கூட்டங்களில் ஒரு படிவம் கொடுக்கிறார்கள். அந்த படிவத்தில் உங்களுக்கு இலவசமாக மாதாந்திர பத்திரிகை அனுப்புகிறோம் ஆகவே உங்கள் முழு விலாசத்தை தாருங்கள் என்று கேட்க இவர்களும் தங்கள் மொபைல் எண்ணோடு விலாசத்தை கொடுக்கிறார்கள். அதன் பிறகு விலாசத்தை கொடுக்கும் அந்த விசுவாசிகளை அவர்கள் ஊழியத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடுகின்றனர். அது மட்டுமல்ல அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் போன் செய்து ஜெபிக்கிறார்கள். அது மட்டுமல்ல தங்கள் ஊழியங்கள் மற்றும் அதன் தேவைகளை தெரியப்படுத்துகிறார்கள். அவர்கள் ஊழியத்தின் தேவைகளுக்கு உதவி செய்பவர்களுக்கு கர்த்தர் இந்தந்த அற்புதங்கள் செய்தார் என்று போட்டோவை பத்திரிகையில் போட்டு சாட்சி சொல்ல வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த மாதிரியான வியாபார தந்திர போக்கை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ
அப்போஸ்தலர்களோ கடைபிடிக்கவும் இல்லை வேதத்தில் அதற்கான ஆதாரங்களும் இல்லை. அது மட்டுமல்ல மாநிலங்கள் தோறும்
மாவட்டம் தோறும் தாலுக்காக்கள் தோறும் ஜெப மையங்களோ கிளைகளோ ஆரம்பிக்கவில்லை. இந்த மாதிரியான ஊழியங்கள் அநேக திருச்சபைகளுக்கு இடறலாகவே இருக்கின்றது.
வேதத்திலுள்ள சுவிசேஷகர்கள் சுவிசேஷம் அறிவித்தார்கள் அற்புதங்கள் நடந்தது ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள் அந்த ஆத்துமாக்களை சபையில் சேர்த்தார்கள் அல்லது ஒரு போதகரின் கையிலே ஒப்புக்கொடுத்தார்கள். ஆகவே தேசத்தில் எழுப்புதல் அக்னி பற்றி எரிந்தது. சபைகள் வளர்ந்து பெருகியது. ஆனால் இந்த நாட்களில் வியாபார தந்திரமாக பல சுவிசேஷகர்களும் ஸ்தாபனங்களும் செயல்படுகின்ற படியால் இரட்சிப்பு குறைந்து எழுப்புதல் தாமதிக்கிறது.

திருச்சபைகளும் திருச்சபை போதகர்களும் உண்மை மற்றும் உத்தமமான சுவிசேஷகர்களை ஊழியங்களில் பயன்படுத்த வேண்டும். அப்படி பயனுபடுத்தாதும் எழுப்புதலுக்கு தடையே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

நன்றி: டேவிட் லிவிஸ்டன்