ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவியும் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தந்தை ஆலயத்தில் பெரிய டீக்கன். பாடல்களை இயற்றி, கிறிஸ்மஸ் மற்றும் விழாக்காலங்களில் ஒரு குழுவாக சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள்.

ஆனால் அந்த தகப்பனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவர் சம்பாதிக்கும் சம்பளத்திற்கு போதுமானதாக இல்லை. ஆகவே பக்கத்தில் இருக்கும் கடையில் கடனுக்கு வாங்கி குடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மனைவி சண்டையிட்டு நிறுத்த பார்த்தார்கள். ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. கடனாக வாங்கியதை கொடுக்க முடியாத நிலை. அதற்காக வேறொரு கடையில் கடன் வாங்கி, இப்படி ஒரு முறை கடன் வாங்கி ருசித்த பின்பு, சுற்றிலும் இருக்கிற கடைகளில் கடன். அதை அடைக்க வேறொரு மக்களிடம் கடன், அதை அடைக்க சேட்டுகளிடம் கடன் என்று ஏகப்பட்ட கடன். ஊரிலே தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலை. காலை ஆறு மணிக்கு, சேட் தன் மோட்டார் பைக்கில் அந்த தெருவே கேட்கும்படி கடன் கேட்க வருவான். கொடுக்க முடியவில்லை என்றதும், நாலு பேருக்கு கேட்கும்படியாக, சத்தம் போடுவான். இவர்கள் கிறிஸ்தவர்கள். மற்ற புறஜாதியார் மத்தியில் எத்தனை அவமானம்! கடைசியில் அந்த தகப்பன், ஆலயத்தில் பெரிய பதவியில் இருந்தவர், அநேக தாலந்துகளை உடையவர், ஆலயத்தில் இசை கருவிகளை வாசித்தவர், விஷ மருந்து குடித்து மரித்து போனார். அவருடைய மனைவி, நான்கு குழந்தைகளையும் எல்லா இடத்திலும் கடன் வாங்கி, அநாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்சேர்ந்தார்.

என்ன ஒரு பரிதாபம்!.இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டிருக்கும் அநேகருடைய நிலைமை இதுதான்! கர்த்தருடைய வாக்குதத்தம் எல்லாம், ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பது உண்மைதான். என்றாலும், இந்த கிறஸ்தவ குடும்பத்தில் அந்த வாக்குதத்தங்கள் பிரயோஜனப்படவில்லையே! ஏன், அதை அவர்கள் உரிமை பாராட்டி கொள்ளவில்லை. தங்கள் தேவன் யார் என்று அவர்கள் அறியவில்லை. தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்தார்கள். கர்த்தருடைய ஊழியத்தை செய்தார்கள், ஆனால், பேருக்கும் புகழுக்கும் செய்தார்களே ஒழிய, கிறிஸ்து அவர்கள் உள்ளத்தில் பிறக்கவேயில்லை! எத்தனை பரிதாபம்!.நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்(உபாகமம் – 28:2) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தால் நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். .நீ கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமல் போனால், நீ அநேகம் ஜாதிகளிடம் கடன் வாங்குவாய், அதை கொடுக்க உன்னால் முடியாமல் போகும். அந்த கிறிஸ்தவ தகபபனுக்கு கர்த்தர் எத்தனையோ முறை எச்சரித்திருப்பார், ஆனால் அவரோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதை கேட்காமல், தன் சுயநலத்திற்காக, சுய இன்பத்திற்காக சிகரெட்டுகளை வாங்கி ஊதி தள்ளினார். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலைவனாயிருப்பான்; நீ வாலாயிருப்பாய் (உபாகமம் – 28:43,44) என்ற கர்த்தரின் சாபம் அவருடைய வாழ்க்கையில் பலித்தது..அன்பு சகோதரனே, சகோதரியே, உங்கள் சுய இன்பத்திற்காக, உங்கள் இச்சைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காக, கடன் மேல் கடன் வாங்கி கொண்டிருக்கிறீர்களோ? உங்கள் குடும்பத்தை கண்ணீரில் மிதக்க விட்டு கொண்டிருக்கிறீர்களோ? இன்று கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும் எச்சரிப்பின் சத்தத்தை கேட்போமாக! கர்த்தரிடம் தஞ்சம் புகுந்து விடுவோமாக! அப்போது அவர் நீங்கள் கையிட்டு செய்யும் காரியங்களை எல்லாம் ஆசீர்வதிப்பார்..ஒரு சிலர், தங்கள் பெற்றோரை சந்தோஷபடுத்த வேண்டி, தங்களுடைய திராணிக்கு மேலாக அவர்களுக்கு கொடுத்து, பழக்கபடுத்துவார்கள். பெற்றோருக்கு கொடுப்பதை நான் ஒரு நாளும் தடுக்க மாட்டேன். வயதான பெற்றோரை தாங்குவது நமது கடமை. அதை செய்யாவிட்டால் கர்த்தரின் சாபம் நம்மேல் வரும். ஆனால் மகனோ, மகளோ வெளிநாட்டில் சம்பாதிக்கிறார்கள் என்று இங்கு சுகபோகமாய், தங்கள் சுய இச்சைகைளுக்காய், பிள்ளைகள் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்களுக்கு அனுப்பும் பணத்தை வீணாய் விரயம் செய்யும் பெற்றோர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை இச்சையை தீர்ப்பதற்காக, இந்த மகள், அல்லது மகன் பணத்தை அனுப்புவார்கள். சிலவேளை முடியாதபோது மற்றவர்களிடம் கடன் வாங்கி அவர்களுக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்?.ஞானமாய் சில காரியங்களை செய்ய வேண்டும். ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோமர் 13:8) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. கடனை வாங்கி பழக்கப்படாதிருங்கள். ஒருமுறை வாங்கினால் திரும்ப திரும்ப வாங்க தோன்றும். அதனுடைய முடிவோ விபரீதம்! அது ஒரு பொல்லாத வியாதி! ஆந்த வியாதியில் சிக்கி விடாதீர்கள்!.கர்த்தருக்கு கொடுங்கள். உங்கள் இயலாமையிலிருந்து கர்த்தருக்கு கொடுத்து பாருங்கள்! கர்த்தர் வானத்தின் பலகணிகளை திறந்து உங்களை ஆசீர்வதிப்பதை காண்பீர்கள். கர்த்தருக்கு கொடுக்கிறவர்கள் யாரும் மற்றவர் முன் தலைகுனிந்து நிற்க மாட்டார்கள். உங்களை கடனே இல்லாமல் கர்த்தர் அதிசயமாய் வழிநடத்துவார். உங்கள் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். ஆமென்! அல்லேலூயா!

ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். – (உபாகமம் 28:12).
Thanks for
Bishop.Kennady, Tiruchy