ஒரு குரங்கு மனிதர்களைப் போல  உபவாசிக்க விரும்பியது.  மாலை வரை  உபவாசித்து இருக்கவும், அதற்குப் பிறகு உபவாசத்தை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்து தனிமையான  ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டது. “முழுக்க முழுக்க கடவுளின் சிந்தனை மட்டுமே  இருக்கணும்.  என்னதான் பசியெடுத்தாலும் சொட்டு தண்ணீர் கூட குடிக்கக் கூடாது ” என்று திட்டவட்டமாக முடிவெடுத்து கடவுளைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தது. பக்கத்தில்  ஒரு மரத்தில் குலைகுலையாய்ப் பழங்கள் பழுத்துத் தொங்கியது கண்ணில் பட்டது.

“இல்லை, நான் பின்வாங்க மாட்டேன்.  என் உறுதியைக்  குலைக்க எதனாலும் முடியாது ” முகத்தை  இறுக்கமாக வைத்துக் கொண்டது.  “சாப்பிடத்தானே கூடாது ? மரத்தின் மீது  ஒரு கண்ணை மட்டும் வைத்துக் கொள்வது தப்பில்லை ” மரத்தின் பக்கமாய்த் திரும்பி அமர்ந்து கொண்டது.  சற்று நேரத்தில் ஒரு அணில் கூட்டம் அந்த மரத்திற்குப் படையெடுத்தது.
பழங்களைக் கொறித்துக் கொறித்துக் குதறிப் போட்டது. 

“இதென்னடா வம்பாப் போச்சு! உபவாசம் முடிக்கும் போது ஒரு பழம் கூட  இருக்காது போல்ருக்கே! சரி சாப்பிடத்தானே கூடாது,  கொஞ்சம் பழத்தை பறிச்சு கைல வச்சுக்கிட்டே.. கடவுளை நினைச்சுக்கிட்டு இருப்போம்.  உபவாசம் முடிச்ச  உடனே சாப்பிட வசதியாக இருக்கும் “
அடுத்த நிமிடமே மரத்தில் இருந்து இறங்கி நிறைய பழங்களைப்  பறித்துக் கையில் வைத்துக் கொண்டு  மீண்டும் ஏறி உட்கார்ந்து கொண்டது.                                                 
                                
பழங்கள் நன்கு பழுத்திருந்தன. வாசனை  அபாரமாக இருந்தது.  ”சாப்பிடத்தானே கூடாது? கடவுள் நினைவுடன்  வாசனை பிடிக்கலாம்” கையில் எடுத்து முகர்ந்த படியே  அமர்ந்தது.
“சரி.  உபவாசம் முடிக்கும் போது பழத்தை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு உடலில் வலிமை  இருக்குமா?  சாப்பிடாமல்  இருப்பதுதானே உபவாசம்?  பழத்தை வாயில் கவ்வியபடியே கடவுளைப் பற்றி நினைக்கலாம்” முடிவெடுத்தபடியே பழத்தை வாயில் வைத்துக் கவ்விக் கொண்டது.  “அடடா, என்ன  ஒரு வாசனை! இது நிச்சயம் மிகவும் சுவையாகத்தான் இருக்கும். உபவாசம் முடிக்கும் போது உடலில் வலிமை  இல்லாமல் போகலாம்.  அதனால் வாயில் கவ்விக் கொண்டிருக்கும் பழம் பாதியிலேயே கீழே விழுந்து விடலாம்.  எனவே கொஞ்சம் அழுத்தமாகக்  கவ்விக் கொண்டால் பழம் கீழே விழ வாய்ப்பில்லை. நாமும்  நிம்மதியாக கடவுளின் நினைவில் மூழ்கலாம்” முடிவெடுத்தபடியே கொஞ்சம் அழுத்தமாகக் கவ்விக் கொண்டது.

பழத்தின் சாறு நாவில் பட்டது. சகலமும் மறந்து போனது. “சரி.  இவ்வளவு தூரம் நடந்து போச்சு!  இன்னொரு நாளைக்கு உபவாசம் இருந்துக்கிடலாம். ஆகா,  என்ன ஒரு சுவை! “
வயிறு முட்ட சாப்பிட ஆரம்பித்தது.

உள்ளத்தைத் தொடும் ஒவ்வொரு தேவ செய்திக்குப் பின்னும் எடுக்கும் ஆவிக்குரிய தீர்மானங்கள் மற்றும்  முடிவுகள், சின்ன விஷயந்தானே என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு  அனுமதிக்கும்  காரியங்களால் நீர்த்துப் போய் விடுவதைப்  பார்க்கிறோமே ! இனிமேல்  நாம்  ஆவியானவர் கொடுக்கும்  உறுதியைக் குலைக்கும் காரியங்களைத் துவக்கத்திலேயே துரத்தி  அடிப்போமா ?

” நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? “
எரேமியா 2 :36