ஒரு குரங்கு மனிதர்களைப் போல உபவாசிக்க விரும்பியது – தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

ஒரு குரங்கு மனிதர்களைப் போல உபவாசிக்க விரும்பியது – தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. வித்தியாசமான சூழல்.. விடுமுறை நாட்கள் தான் ஆயினும் வீட்டை விட்டு வெளியே போக முடியல. கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவுவதை கேள்விபடுகிறோம். மனதில் கொஞ்சம் படபடப்பு தான். ஆயினும் பாதுகாக்கும் தெய்வம் நம்ம பக்கம் தான் இருக்கிறாங்க.. அதே நேரம் சிறு பிள்ளைகளாக இருக்கிற நாம் ரொம்ப கவனமாக இருக்கனும். மாஸ்க் இல்லாம வெளிய போயிடாதீங்க.., அடிக்கடி கைகளை கால்களை கழுவுங்க.. யாரையும் தொட்டு பேச விரும்பாதிருங்க.. உங்களுக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறோம். தைரியமா இருங்க.. ஒக்கே எல்லாரும் கதை கேட்க ரெடியா?

ஒரு குரங்கு மனிதர்களைப் போல உபவாசிக்க விரும்பியது. காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க முடிவு செய்து, தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டது. “முழுக்க முழுக்க கடவுளின் சிந்தனை மட்டுமே இருக்கணும். என்ன தான் பசியெடுத்தாலும் சாப்பிடக் கூடாது ” என்று திட்டவட்டமாக முடிவெடுத்து, கடவுளை குறித்து சிந்திக்க ஆரம்பித்தது. தியான நேரத்தில் பக்கத்தில் நின்ற ஒரு மரத்தில் குலை குலையாய்ப் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குவதை கண்டதும் நாக்கில் எச்சில் சுரந்தது.

“இல்லை, நான் பின்வாங்க மாட்டேன். என் உறுதியைக் குலைக்க எதனாலும் முடியாது. உபவாசம் முடிந்த பின்னர் சாப்பிட்டுக் கொள்ளலாம்” என நினைத்துக்கொண்டே முகத்தை இறுக்கமாக வைத்து கண்களை மூடிக் கொண்டது. சற்று நேரத்தில் அணில் கூட்டம் அந்த மரத்திற்குப் படையெடுத்தது.
பழங்களைக் கொறித்துக் கொறித்துக் குதறி போட்டுவிட்டு கொட்டையை தூக்கி குரங்கின் மீது வீசியது. “இதென்னடா வம்பாப் போச்சு! உபவாசம் முடிக்கும் போது நமக்கு ஒரு பழம் கூட இருக்காது போலிருக்கே! சரி இப்போ தானே சாப்பிடத்தானே கூடாது, கொஞ்சம் பழத்தை பறிச்சு கைல வச்சுக்கிட்டா அப்புறம் சாப்பிடலாமுனு நினைத்து அணில் கூட்டத்தை விரட்டி சில பழங்களை பறித்து தன் கையில் வைத்துக்கொண்டது. தொடர்ந்து தியானத்தை தொடர்ந்தது.

பழங்கள் நன்கு பழுத்திருந்தன. வாசனை அபாரமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பின் தாக்குபிடிக்க முடியல. “சாப்பிடத்தானே கூடாது? கடவுள் நினைவுடன் வாசனையை மட்டும்.நுகர்வோம்” என கையில் எடுத்து முகர்ந்த படியே தியானத்தை தொடர்ந்தது.

ருசியும் பசியும் கவர்ந்திழுக்க தன்னை அறியாமலேயே கையிலிருந்த பழம் குரங்கின் வாயில் நுழையவே கொஞ்சம் அழுத்தமாகக் கவ்விக் கொண்டது. பதறியது… ஐயோ பாவம் செய்து விட்டேனே.. கடித்த ஒரு துண்டினையும் காறி உமிழ்ந்தது.

“கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே கடித்த பழத்தின் ருசியை எண்ணிப்பார்த்தது. ச்ச.. பழத்தின் சாறு நாவில் பட்டதும் சகலமும் மறந்து போனது. “சரி. இவ்வளவு தூரம் நடந்து போச்சு! இன்னொரு நாளைக்கு உபவாசம் இருப்போம்.. ஆகா, என்ன ஒரு சுவை! “
கிடைத்த பழங்களையெல்லாம் பறித்து வயிறு முட்ட சாப்பிட்டு ஏப்பம் விட்டது.

அன்பு தம்பி தங்கச்சி.. எத்தனை முறை நீங்கள் நல்ல நல்ல தீர்மானங்களையெல்லாம் எடுத்துவிட்டு இடையிலேயே நிறைவேற்ற முடியாமல் தடுமாறியுள்ளீர்கள். ஆம் நம் வாழ்வில் நம்மையும் அறியாமல் செய்யும் சின்ன சின்ன தவறுகள் தான் நாம் தேவனுக்குள் எடுத்த பெரிய பெரிய தீர்மானங்களை சிதைத்து விடுகிறது. சின்ன தவறுகளை துவக்கத்திலேய கிள்ளி எறிந்தால் நாம் பாதுகாக்கப்படுவோம்.

கிறிஸ்துவை முன் வைத்து செயல்படும் உங்கள் கவனத்தை எப்படியாகிலும் திசை திருப்ப பிசாசு தீவிரமாய் முயற்ச்சிக்கிறான். டீவி மூலம், செல்போன் மூலம், தவறான நண்பர்கள் மூலம் எப்படியாகிலும் உங்கள் நேரத்தை திருடி உங்களை திசை திருப்ப பார்க்கிறான்.

இந்த லாக்டவுண் நாட்களில் நமது சரீரத்தை பாதுகாக்க, தொற்று கிருமி நம்மை அனுகாமலிருக்க நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கிறோம். அதுபோலவே உங்கள் ஆத்துமாவை பாதுகாக்கவும் எச்சரிக்கையாயிருங்கள்.

மனன வசனம்: “நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி 12:1)

இந்த மாத சிறுவர் பகுதி நிச்சயம் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை தீர்மானங்களை 9750381784 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்க மறவாதிருங்கள். அடுத்த இதழில் வேறொரு சுவாரசியமான கதையோடு உங்களை மறுபடியும் சந்திக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

பாஸ்டர். பெவிஸ்டன்

Post Tags: