ஞானஸ்நானம் (Baptism)
மனந்திரும்புதலைக் குறித்து விளக்கமாக நாம் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மனந்திரும்புதலை அடுத்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான காரியம் ஞானஸ்நானத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான்!

அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த முதல் பிரசங்கத்தில் கிறிஸ்தவ வாழ்விற்கான அஸ்திபார உபதேசங்களை வரிசைப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதில் மனந்திரும்புதலுக்கு அடுத்து அவர் வலியுறுத்தும் உபதேசம் ஞானஸ்நானம் ஆகும்.
இன்றைய சபைகளில் மிகக்குறைந்த அளவே அறியப்பட்டிருக்கிற, போதிக்கப்படுகிற உபதேசங்களில் ஞானஸ்நானமும் ஒன்றாகும். மனிதனின் தவறான தத்துவங்களாலும், தரம் மலிந்த தலையீடுகளாலும், பகட்டுப் பாரம்பரியங்களாலும் இந்த உயர்வான உபதேசம் ஒளியிழந்துவிட்டதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்த மேன்மையான உபதேசம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையான, அஸ்திபார உபதேசங்களில் ஒன்றாக இருப்பதால் இதைக்குறித்த தெளிவான சத்தியத்தை கற்றுக்கொள்ள ஆவியானவர் நமக்கு அநுக்கிரம் பண்ணுவாராக.
`ஞானஸ்நானம்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
நான் இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் (1992ல்) ஞானஸ்நானத்தைப் பற்றி சிலரிடம் கேட்டபோது, அவர்கள் இப்படியாக எனக்கு பதிலுரைத்தனர். அவர்கள் தெரிந்து அப்படி சொன்னார்களோ அல்லது கேலியாக அப்படி சொன்னார்களோ எனக்கு தெரியாது.
ஞானமாகிய' இயேசுவை ஏற்றுக்கொண்ட பின், அவரை ஏற்றுக்கொண்டதற்காக ஒரு
ஸ்நானம்’ பண்ணவேண்டும். அதுதான் ஞானஸ்நானம் என்றார் ஒருவர்.
இன்னொருவர் சொன்ன பதில், `நம்முடைய ஞானத்துக்குள் நாம் செய்கிற ஸ்நானம்தான் ஞானஸ்நானம். அதாவது, நம்முடைய ஞானத்திற்குள் ஸ்நானம் பண்ணும்போது, நமக்குள் நாம் சுத்தமாகிறோம்.’
இந்த பதில்கள் நமக்கு விளையாட்டாக தெரிந்தாலும், அதற்குள் ஒரு உண்மை மறைந்திருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும்.
`ஞானஸ்நானம்’ என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை நாம் அறிந்துகொண்டால், ஞானஸ்நானத்தைப் பற்றிய ஒரு தெளிவு நமக்கு உண்டாகும்.
ஞானஸ்நானம்' என்ற வார்த்தைக்கு மூல பாஷையாகிய கிரேக்க மொழியில்
Baptisma’ (பப்திஸ்மா) என்றும், இதற்கான வினைச்சொல் `Baptizo’ (பப்டைசோ) என்றும் எழுதப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைகளுக்கான ஆங்கில அர்த்தம், immersion, dipping, plunging under, submerging, sinking என்பதாகும்.
அதாவது, `தண்ணீரில் மூழ்குதல்’ என்பதுதான் சரியான அர்த்தமாகும். இதன் கிரேக்க வார்த்தையானது, ஒரு துணியை சாயம் தண்ணீருக்குள் மூழ்க வைத்தல், ஒரு குவளையை தண்ணீருக்குள் விட்டு தண்ணீர் மொண்டு எடுத்தல், ஒரு கப்பல் தண்ணீரில் மூழ்குதல் போன்ற செயல்களை குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதிலிருந்து `ஞானஸ்நானம்’ என்பது தண்ணீரோடு நெருங்கிய தொடர்புடையது என்பதை நாம் அறிகிறோம்.
`ஞானஸ்நானம்’ வேதத்தின்படியான உபதேசமா?
இன்றைய நாட்களில் ஞானஸ்நானத்தைக் குறித்து அநேக குளறுபடியான சத்தியங்களும், குழப்பத்தை விளைவிக்கிற போதனைகளும் கொடுக்கப்படுகின்றன. ஞானஸ்நானம் என்ற சத்தியத்தை ஓரங்கட்டி ஒதுக்கி வைக்கிற சபைகளும் உண்டு; ஞானஸ்நானத்தை அதிக முக்கியப்படுத்தி ஒரு மிகப்பெரிய ஸ்தாபனமே உருவாக்கியிருக்கிற சரித்திரமும் உண்டு.
இந்த இரண்டு ஓரக்கொள்கைகளையும் ஒதுக்கிவிட்டு, சரியான சமநிலைப்பாட்டு உபதேசத்தை நாம் கற்றுக்கொண்டு, கைக்கொள்ளாவிட்டால் ஞானஸ்நானத்தின் உன்னத மேன்மையையும், உண்மையான தாற்பரியத்தையும், நடைமுறை வாழ்க்கையின் நன்மைகளையும் நாம் இழந்துபோய்விடுவோம்.
`ஞானஸ்நானம்’ என்ற உபதேசம் வேதத்தின்படியானதா? என்பதையும், இதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதையும் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு கற்றுக்கொண்டால், கள்ள உபதேசங்களுக்கு நாம் எச்சரிப்படைந்து, வஞ்சகத்துக்குத் தப்பி ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழமுடியும்.
ஞானஸ்நானம் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் 29 அதிகாரங்களில், 64 வசனங்களில், 76 முறை வருகிறது. சுவிசேஷ புத்தகங்களில் மட்டும் 10 அதிகாரங்களில் 30 வசனங்களில், 37 முறை வந்துள்ளது. அப்போஸ்தலர் நடபடிகளில் 11 அதிகாரங்களில், 22 வசனங்களில், 24 முறை வந்துள்ளது. நிருபங்களில் 8 அதிகாரங்களில், 12 வசனங்களில், 15 முறை வந்துள்ளதை காணலாம்.
எனவே, ஞானஸ்நானம் என்பது வேதத்தின்படியான சத்தியம் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த சத்தியத்தைக் குறித்து நம் ஆண்டவரும் இயேசுவும், அப்போஸ்தலரும் வலியுறுத்தி போதித்திருக்கிறார்கள் என்பதை நாம் வசனங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
அ). ஞானஸ்நானத்தைக் குறித்து நம் ஆண்டவர் இயேசுவே போதித்திருக்கிறார்:
ஞானஸ்நானத்தை குறித்து நம் ஆவிக்குரிய வாழ்வின் முன்னோடியும், முன் மாதிரியுமான நம் ஆண்டவர் இயேசுவே தெளிவாக போதித்திருக்கிறார். இது போதனை மாத்திரமல்ல, கட்டளையும்கூட!
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் (மத். 28:19-20).
இந்த வசனத்தில் ஞானஸ்நானம் என்பது கட்டளையாக சொல்லப்பட்டது மாத்திரமல்ல, இந்த கட்டளையை கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணும்படியாகவும் கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, இரண்டு கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு உபதேசமாக இந்த ஞானஸ்நானம் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது, `ஞானஸ்நானம்’ கொடுக்க வேண்டும்; எடுக்க வேண்டும் என்பது கட்டளை, அதை நாம் கைக்கொள்ள வேண்டும் என்பது ஒரு கட்டளை! ஆகவே, நாம் கைக்கொள்ள வேண்டிய கட்டாயமான கட்டளை என்பதை நாம் அறிவோமாக.
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகிய ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் (மாற். 16:15-16).
இந்த வசனத்தின்படி சுவிசேஷத்தை விசுவாசித்து, இயேசுவை கிறிஸ்துவாக, இரட்சகராக ஏற்றுக்கொள்கிற ஒரு நபர் அல்லது ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதை தெளிவாக நம் ஆண்டவர் போதிக்கிறார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஞானஸ்நானம் என்ற உபதேசத்தை நமக்கு கட்டளையாக மாத்திரம் கொடாமல் அதை அவர் செய்து காண்பித்து நமக்கு முன்மாதிரியையும் வைத்துப் போயிருக்கிறார்.
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார் (மத். 3:16; லூக். 3:21).
இயேசுவே ஞானஸ்நானம் பெற்று நமக்கு முன்மாதிரியை வைத்துப் போயிருக்கும்போது, ஞானஸ்நானம் எடுக்கத் தேவையில்லை, இயேசுவை விசுவாசித்தால் மட்டும்போதும், பரலோகம் போய்விடலாம் என்று அதிமேதாவித்தனமாக போதிக்கிற கள்ளப் போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் நமக்குப் புத்தி சொல்லுகிறார்.
அப்படிப்பட்டவர்கள் இயேசுவைவிட பெரியவர்கள், இயேசுவுக்கே அறிவுரை கூறும் அளவுக்கு உயர்ந்துவிட்டவர்கள் போலத் தெரிகிறது. இவர்கள் தங்களுக்குக் கேடுண்டாகும்படி தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்ட பரிசேயர் மற்றும் நியாயசாஸ்திரிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மனந்திரும்பினால் நலமாயிருக்கும்!
எனவே, பிரியமான தேவ பிள்ளைகளே, ஞானஸ்நானம் என்பது இயேசு போதித்த வேதத்தின்படியான சத்தியம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.
ஆ). ஞானஸ்நானத்தைக் குறித்து அப். பேதுரு போதித்திருக்கிறார்:
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது, பேதுரு அப்போஸ்தலன் பிரசங்கித்த முதலாவது பிரசங்கத்தில், தனிப்பட்ட விசுவாசிக்கான மற்றும் சபைக்கான அஸ்திபார உபதேசங்களை வரிசைப்படுத்தி போதிக்கிறார். பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் `(இரட்சிக்கப்படுவதற்கு) நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டார்கள். அதற்கான பதிலில் இரண்டாவதாக ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதை பேதுரு குறிப்பிடுகிறதை நாம் வாசிக்கலாம்.
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் (அப். 2:38).
இந்த வசனத்தின்படி ஞானஸ்நானம் என்பது நமது இரட்சிப்பை பூரணப்படுத்துகிற உபதேசத்தில் ஒன்று என்பதை அறிகிறோம்.
அப்போஸ்தலர் 2:41ல், “பேதுருவின் வார்த்தையைக் கேட்ட அநேகர் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று பார்க்கிறோம்.
அப்போஸ்தலர் 10ம் அதிகாரத்தில் கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு பிரசங்கித்தபோது வசனத்தைக் கேட்ட புறஜாதி மக்கள் யாவரும் விசுவாசித்து, ஞானஸ்நானத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள் என்று வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது (வச. 47,48).
அப். பேதுரு தன் நிருபத்திலும் ஞானஸ்நானத்தைக் குறித்த தாற்பரியத்தை எழுதுகிறதைப் பார்க்கிறோம்.
அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது (1 பேது. 3:21).
இவ்விதமாக, இயேசு கிறிஸ்துவின் பிரதான அப்போஸ்தலனாகிய பேதுரு, ஞானஸ்நானத்தைப் பற்றி பிரசங்கித்ததையும், ஞானஸ்நானம் கொடுத்ததையும், ஞானஸ்நானம் எடுக்கும்படியும், கொடுக்கும்படியும் கட்டளையிட்டதையும் வசனத்தில் தெளிவுற வாசிக்கிறோம்.
இ). சுவிசேஷகன் பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்தார்:
ஞானஸ்நான உபதேசத்தைக் குறித்துப் படிக்கும்போது, சுவி. பிலிப்புக்கு ஒரு சிறந்த இடம் இருக்கிறது என்பதை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் பார்க்க முடியும்.
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கு ஏற்றவைகளைக் குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப். 8:12).
சமாரியா தேசத்து பட்டணங்களில் பிலிப்பு அநேகரை விசுவாசத்துக்குள் நடத்தி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். சீமோன் என்ற மாயவித்தைக்காரனும் இயேசுவின் நாமத்தை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதை பிலிப்புவின் ஊழியத்தில் பார்க்க முடிகிறது (வச. 8:13).
ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அறிந்துகொள்ள பிலிப்புவின் ஊழியத்தில் நடந்த மற்றொரு சம்பவம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. கந்தாகே என்ற எத்தியோப்பிய ராஜஸ்திரீயின் மந்திரிக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியும், அவனை ஞானஸ்நானப் படுத்தும்படியும் பரிசுத்த ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோனார்.
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்பெறுகிறதற்குத் தடையென்ன? என்றான்.
அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை என்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான் (அப். 8:36-38).
இந்த சம்பவத்திலிருந்து உயர்வு தாழ்வில்லாமல், பேதமில்லாமல், பாரபட்சமில்லாமல் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிற அனைவரும் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதை அறிகிறோம்.
இ). ஞானஸ்நானத்தைக் குறித்து அப். பவுல் போதித்திருக்கிறார்:
அப்போஸ்தலனாகிய பவுல் சவுலாக இருந்தபோது, தமஸ்குவுக்குப் போகிற வழியில் நம் ஆண்டவரால் சந்திக்கப்பட்டு, கண்கள் குருடாக்கப்பட்டவராக பட்டணத்திற்குக் போகிறார். அங்கே அனனியாவின் மூலம் கண்கள் திறக்கப்பட்டு, பார்வையடைந்து ஞானஸ்நானம் பெற்றார் என்று வாசிக்கிறோம்.
அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது, அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து ஞானஸ்நானம் பெற்றான் (அப். 9:17,18; 22:16).
பவுல் என்கிற சவுல் நியாயப்பிரமாணத்தைக் கற்றுத்தேர்ந்த பரிசேயன். நியாயப்பிரமாணத்தின்படி தன் மாம்ச சரீரத்தில் விருத்தசேதன அடையாளத்தைப் பெற்றவர். இவர் எந்த தர்க்கமும் பண்ணாமல், விதண்டாவாதமும் பேசாமல், அனனியா என்ற ஊழியக்காரன் சொன்ன உபதேசத்தைக் கேட்டு, உடனடியாக ஞானஸ்நானம் பெற்றார் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறிகிறோம்.
மேலும், தன்னுடைய ஊழியத்தில் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, வசனத்தை விசுவாசித்து ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் அப்போஸ்தலனாகிய பவுல் ஞானஸ்நானம் கொடுத்தாகவும், ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டதாகவும் வாசிக்கிறோம்.
அவருடைய நிருபங்களில் இதைக் குறித்த சத்தியத்தை மிகத்தெளிவாக போதித்திருக்கிறார் என்பதை வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.
பவுலின் ஊழியத்தில் அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றும், அவருடைய நிருபங்களில் இந்த உபதேசத்தை பலவிதங்களில் வலியுறுத்திச் சொல்லுகிறார் என்பதையும் நாம் இங்கே வாசிக்கலாம்.
லீதியாளும் அவளுடைய வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப். 16:14-15).
ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவனும் அவன் வீட்டாரும், கொரிந்தியரில் அநேகரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப். 18:8; 1 கொரி. 1:15).
ஸ்தேவானுடைய வீட்டார் பவுலின் கைகளினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள் (1 கொரி. 1:15).
பவுல் எபேசுவிலே கண்ட, முறையான சரியான ஞானஸ்நானம் பெறாத சீஷர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் (அப். 19:1-7).
நாமனைவரும் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவர்கள் (ரோம. 6:3).
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்கள் (1 கொரி. 12:13).
கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள் (கலா. 3:27).
நமக்கு ஒரே ஞானஸ்நானம் உண்டு (எபே. 4:5).
இந்த வசனங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஞானஸ்நானம் என்பது வேதத்தின்படியான உபதேசம் என்பது நமக்குத் தெளிவாகிறது.
இதை தொடர்ந்து இன்னும் சில முக்கியமான காரியங்களை அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்.