
ஆழம் இல்லாத நீரில்
செலுத்தும் வட்ட வடிவ
படகு போன்ற கலம்
பராமரிப்புப் பணி என்பது
பல்வேறு நிலைகளில்
சூழ்நிலைகளைப் பொறுத்து
வேறுபடுகிறது
இவைகளில் மக்களைப்
பராமரித்தல் என்பது
மற்றவைகளிலிருந்து முற்றிலும்
மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது
குடும்பங்களில் உறவுகளில்
இனங்களில் பராமரிப்பு என்பது
உள்ளான அன்பின்
அடிப்படையிலே
செயல்படுவதாகும்
மனித வளர்ச்சியில்
ஒவ்வொரு கட்டத்திலும்
பாதுகாப்பும் பராமரிப்பும்
மிக அவசியமான
ஒன்றாக கருதப்படுகிறது
மனித உணர்வுகளில்
அன்புத் தாழ்ச்சி ஏற்படும்போது
மற்றவர்களைக் கவனிக்கவேண்டும்
பராமரிக்க வேண்டும்
பாதுகாக்கவேண்டும் என்ற
நிலையில் உணர்வுகள்
நசிந்துபோகிறது.
விருப்புடன் செயல்பட ஏதுவில்லாது
கடமைக்காக மட்டும் செயல்பட
மனித மனம் தள்ளப்படுகிறது
இதனால் நாட்டின் நடைமுறையில்
மாற்றம் உருவாகிறது
புதிது புதிதாக ஆதரவற்ற
அனாதை இல்லங்களும்
முதியோர் இல்லங்களும்
முளைக்கின்றன
அங்கும் தூய்மையான
மனிதாபிமான அன்பு
வெளிப்படுவது
கடினமாகத்தான்
காணப்படுகிறது.
பணமும் மனமும் கலந்து
உறவாடும்போது
காலத்தால் அழியாத
களங்கமற்ற அன்புகூட
கரைந்துபோகிறது
பரிசுத்த வேதாகமத்தில்
2 சாமுவேல் 17 மற்றும் 19 ம்
அதிகாரங்களில் ஒரு மனிதனின்
பராமரிக்கும் அன்பைப்
பார்க்கிறோம்
அவர் பெயர் பர்சிலா
அவர் செலுத்திய பராமரிக்கும்
அன்பைப் பற்றி நீங்கள்
வாசிக்கும்போது உங்களுக்கு
அது சர்வசாதாரணமான
அன்பாகக் கருதப்படுகிறது
(2 சாமுவேல் 17: 27-29)
இன்றைய நாட்களில் அது
ஆச்சரியமான அன்பாக
கருதப்படுகிறது.
இன்றைய உறவுகளில்
பெற்றோருக்கும்
பெரியவர்களுக்கும்
தாங்கள் காட்டும் அன்பிற்குங்கூட
அளவுகோல் வைத்திருக்கிறார்கள்
தாவீது ராஜாவுக்குப்
பலவிதங்களிலும் அன்று
மிகவும் நெருக்கடியான சூழ்நிலை
இஸ்ரவேலருக்கோ யூதாவுக்கோ
தான் ராஜா என்று
சொல்லமுடியாதபடி
நெருக்கடி
மகன் அப்சலோமின்
துரோகமும் அவன் மரணமும்
ராணுவத்தின் எதிர்ப்பும்
பகைமையும் ஒருபுறம்
தன்னை சேர்ந்தவர்களெல்லாம்
எதிர் அணியில் இருக்கிறார்கள்
தனக்கு தங்க இடமோ
தாபரிக்க ஸ்தலமோ இல்லை
அலைச்சலும் அயர்வும் தன்
சரீரத்தில் களைப்பை
உண்டுபண்ணியுள்ள நேரமது
தன்னை ஆதரிப்பார்
யாரும் இல்லை என்ற சோகம்
எதிர்காலத்தைக் குறித்த
நிச்சயமற்ற நிலைமையும்
பயமும் அவனை வாட்டி எடுக்கிறது
இவைகளில் ஏதாவது ஒன்று
உங்களில் இன்று இருக்குமானால்
அதிர்ந்துபோய்
அப்படியே உட்கார்ந்துவிடுவீர்கள்
வனாந்திர வாழ்க்கையின்
மத்தியில் தாவீது மக்னாயீம்
என்ற இடத்திற்கு வருகிறான்.
மக்னாயீம் என்றால்
இரண்டு சேனைகள் என்று பொருள்.
நீங்கள் இருபக்க நெருக்கடிகளின்
இடையில் ஏற்படும் இடையூறுகளை
சந்தித்திருக்கிறீர்களா?
பராமரிக்கப்படவேண்டியவனின்
பராமரிப்பு இங்கே காணப்படுகிறது
வாழ்க்கையின் இக்கட்டான
சூழ்நிலையில்தான் தாவீது
மக்னாயீம் வந்துசேருகிறான்
இச் சமயத்தில்தான்
கீலேயாத்தியனாகிய பர்சிலா
இன்னும் சிலரோடு சேர்ந்துவந்து
தாவீதைச் சந்திக்கிறான்
( 2 சாமுவேல் 17: 27-29)
இது ஓர்
சரித்திரச் சந்திப்பு
தாவீதையும் அவன்
பரிவாரங்களையும் சேர்த்து
பாதுகாக்கவும் பராமரிக்கவும்
அன்புள்ளம் கொண்டு அவனுக்கு
பணிசெய்கிறான்
அப்போது பர்சிலாவுக்கு
என்ன வயது தெரியுமா?
எண்பது வயது!
பராமரிக்கப்பட வேண்டியவன்
அவன்தான்
ஆனால் தாவீதையும் அவன்
பரிவாரங்களையும் பராமரிக்க
பர்சிலா துணிவுகொண்டான்
பர்ஸில் நிறைய
பணம் இருந்தாலும்
பல்வேறு வங்கிகளின்
ATM கார்டு இருந்தாலும்
சிலருக்கு இப்படிப்பட்ட
மனம் வராது
மனம் வந்தாலும்
பர்ஸை விட்டு
பணம் வெளியே வராது
இது உங்களுக்கு ஆச்சரியமாக
இல்லையா?
இப்போதைய மனிதனின் பார்வை
பர்ஸ் (பணப்பை) பக்கம்தான்.
பர்சிலா பக்கம் அல்ல
மெத்தைகளையும் கலங்களையும்
மண்பாண்டங்களையும்
கோதுமையையும்
வாற்கோதுமையையும்
மாவையும் வறுத்தப்பயற்றையும்
பெரும்பயற்றையும் சிறுபயற்றையும்
வறுத்த சிறுபயற்றையும்
தேனையும் வெண்ணெயையும்
ஆடுகளையும் பால்கட்டிகளையும்
கொண்டுவந்தான்
அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே
பசியும் இளைப்பும் தவனமுமாய்
இருப்பார்கள் என்று இப்படி
செய்தார்கள் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது
பர்சிலா ஐயாவுக்கு
ஏறக்குறைய
ஒரு கல்யாணத்தையே
நடத்திமுடித்தாற்போல்
இருந்திருக்கும்.
இதை வாசிக்கிற உங்களுக்கு
இந்தச் சம்பவம் ஒரு
சாதாரணமாக தோன்றலாம்
ஆனால் இந்தக் காலத்தில்
உற்றார் உறவினர்களுக்குக் கூட
ஒருவேளை சோறு போட
தயங்கும் மக்கள் இருக்கத்தானே
செய்கிறார்கள்
நீங்கள் எப்படி?
தாவீதோடு இருந்த ஒரு குட்டி
ராணுவத்திற்கு அப்போதைய
தேவையையும் அடுத்துவரும்
அவர்களின் தேவைகளையும்
மனப்பூர்வமாய்ச் சந்தித்த
அன்புள்ள மனிதன்தான் பர்சிலா
ராஜா மக்னாயீமிலே
தங்கியிருந்த காலம் முழுவதும்
பர்சிலா அவனைப்
பராமரித்தான்
(2 சாமுவேல் 19:32)
பெரிய ஐசுவரியவானாய்
இருந்திருக்கவேண்டும்
என்றுதானே நினைக்கிறீர்கள்?
அப்படியே இருந்தாலும்
எத்தனை ஐசுவரியவான்களுக்கு
இப்படிப்பட்ட
திறந்த மனம் இருக்கிறது?
தாவீதுராஜா மக்னாயீமை
விட்டு கடந்துபோகும்முன்
பர்சிலாவை நோக்கி
நீ என்னோடே கூட
கடந்துவா
எருசலேமில் உன்னை
என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன்
என்றான்.
ஆனால் பர்சிலா,
ராஜாவின் அழைப்பை
ஏற்க மறுத்துவிட்டான்
( 2 சாமுவேல் 19:33-39)
தாவீதின் போராட்டமான
வாழ்க்கை என்னும்
காட்டாற்று வெள்ளத்தின் மத்தியில்
ஒரு அன்பு பரிசலாக இருந்து
அவனையும் அவன் ஜனங்களையும்
யோர்தானின் மறுகரை சேர்த்தான்.
பர்சிலாவின் ஆழமான அன்பை
எண்ணி, அப்படிப்பட்ட அன்புள்ள
பராமரிப்பு நிறைந்த வாழ்க்கை
வாழ்கிறவர்கள் இன்று
எத்தனை பேர் உண்டு?
கிறிஸ்துவின் ஆழமான அன்பு
இதனிலும் மேன்மையல்லவா?
பர்சிலா அனைவருக்கும்
ஒரு அன்பு பரிசல் அதாவது (Boat)
அன்று மட்டுமல்ல அவனது
பராமரிப்பு சரித்திரம்
இன்றும் தொடர்கிறது.
எப்படி?
தாவீது, பர்சிலாவின் பெயரில்
பெத்லகேமில் அவனது இறுதிக்
காலத்தில் பராமரிக்க ஒரு கட்டிடத்தை
அதாவது ஒரு சத்திரத்தைக்
கட்டினானாம்.
அந்தக் கட்டிடம்
இருந்த இடத்தில்தான்
பிற்காலத்தில் இயேசு
பிறந்ததாக ஒரு
சரித்திரச் சான்று உண்டு
பர்சிலா பெயரைச்
சொல்லுகிற இடமும்
ஒரு பரிசைத் தந்தது
அவர்தான் சொல்லிமுடியாத
ஈவாகிய உலக இரட்சகர் இயேசு
அவரது பராமரிப்பு ஒருபோதும்
முடிந்து போகாது
அது இப்போதும் உனக்கு உண்டு
இனி, எப்போதும் உனக்கு உண்டு.
எழுதியவர் :
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்

++++++++++++++++++++++++++

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.
“நல்லாசான்” சர்வதேச விருது (மலேசியா -2021)