தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்

தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்

தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்

இந்த நாட்களில் நமக்கு புத்தி, விவேகம், ஞானம் அதிகமாக தேவைப்படுகிறது. வேதத்தில் புத்தியில்லாத சிலவற்றை தியானித்து புத்தியடைய என்ன செய்ய வேண்டும் என்றும் கவனிக்க கர்த்தர் அருள் புரிவாராக!

1. புத்தியில்லாத தீக்குருவி.

நல்ல வீரமிக்க துணிவு உள்ள, வலிமை மிக்க ஒரு பறவை. பெரிய முட்டை இடுமாம். ஆனால் அடை காக்காது, முட்டைகளை வனாந்திர மணலில் புதைத்து வைப்பதினால் அவைகள் காட்டு மிருகங்களின் காலடி பட்டு உடைந்து போகும் என்கிற அறிவு அதற்கு இல்லையாம். அதையும் மீறி தன் இனம் வெளியே வந்தால் அதை கொத்தி கொத்தி காயப் படுத்துமாம். அதினால் அது படும் வேதனை மற்றும் தீங்கு அதிகமாம் ஏனெனில் கர்த்தர் அதற்கு புத்தியையும் ஞானத்தையும் விலக்கி வைத்தாராம். யோபு 39:13-17

B. புத்தியில்லாத குதிரை

குதிரையின் வீரம் பெரியது, வேகமும் அதிகம். வல்லமை பெரியது. ஆனால் அவைகள் பயன்பட, அவைகள் ஒருமுகப்படுத்த பட வாரினாலும் கடிவாளத்தாலும் தங்கள் முகம் கட்டப்பட வில்லை எனில் அவைகளின் பக்கத்தில் அவைகளின் எஜமான்களே போக முடியாது. அப்படி மிஞ்சி போனால் உதை கிடைக்கும். சங் 32:9

C. புத்தியில்லாத எப்பிராயீம்

பேதையானவன், இருமனமுள்ளவன், பாதி பரிசுத்தம், பாதி அசுத்தம், அந்நிய நுகத்தில் பிடிக்கப் பட்டவன். அதினால் அவனுக்கு சொஸ்ததை இல்லை, அவன் காயம் கொடிதாக இருக்கிறது. அவன் தகாத கற்பனையை மனதார பின்பற்றி மோசம் போகிறான் என்று வசனம் சொல்கிறது. ஒசி 7:11

D. புத்தியில்லாத கன்னிகைகள்.

இவர்களிடம் விளக்கு உண்டு எண்ணெய் இல்லை. காத்திருப்பு உண்டு ஆனால் ஆயத்தம் இல்லை. வரும்போது பார்க்கலாம் என்கிறவர்கள். நிர்பாக்கியசாலிகள். ஏனெனில் மணவாளன் வரும் போது கோட்டை விட்டவர்கள். மத் 25.

E. புத்தியில்லாத் ஸ்தீரி

இவள் வீடு குடும்பம் அப்படியே வளர்ந்து வரும் போது தன் கைகளால் இடித்து போடுவாள். புருசன் இருதயம் இவளை நம்பாது. புறம்பான அலங்காரம், புறம்பான பாராட்டுகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சகிப்பு தன்மை பொறுமை போன்ற தெய்வீக சுபாவங்களுக்கு தன்னை விலக்கிக் கொள்கிறாள். நீதி 14:1

F. புத்தியில்லாத மகன்

ஆஸ்திகள் மேல் கண் வைப்பவன், அந்தஸ்து, பதவி மேல் கண் வைத்து சுகபோகம் அனுபவிக்க நினைப்பவன். இவன் தாய் தகப்பனுக்கு செவி கொடுப்பதில்லை. இவன் தன்னை பெற்றாருக்கு இலச்சை உண்டு பண்ணுகிறான் என்று வசனம் சொல்கிறது. இவன் காணாத தன் வீட்டை மணலின் மேல் கட்டுகிறவன் போன்றவன்.

G. புத்தியில்லாத கலாத்தியர்

கிறிஸ்துவில் ஆரம்பித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைந்தவர்கள், இன்று பாரம்பரியம், கொள்கை என்று அவைகளுக்கு பின்பால் ஓடி தேவ அன்பை விட்டு விட்டு கடித்து பட்சிக்கிறவர்கள் என்று வசனத்தில் பார்க்கிறோம். கலா 3:1

இவர்கள் புத்திக்கு தங்களை விலக்கி கொண்டதனால், தங்கள் புத்தி அந்தகாரம் அடைய விட்டு கொடுத்ததினால் படும் அவதிகள் ஏராளம். எனவே நாம் புத்தியடைய என்ன செய்ய வேண்டும்?

A. நாம் புத்தியற்றவர்கள் என்கிற நிலையை உணர்ந்து ஞானம் உள்ள கர்த்தரிடம் சேர்ந்து அவருக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகி, பரம தகப்பனிடம் திரும்பி வந்து அவரிடம் விண்ணப்பம் பண்ண வேண்டும். ஏனெனில் அவர் கடிந்து கொள்ளாமல் கேட்கிறதை தருகிற தேவன் ஆகும். தாவீதோடு கர்த்தர் இருந்தார். அவன் புத்திமானாக நடந்தான். சாலோமன் புத்தியை ஞானத்தை கேட்டு பெற்று கொண்டான். யோசேப்பு, தானியேல் போன்ற இன்னும் ஏராளமான உதாரணங்கள் வேதத்தில் உண்டு.

B. கற்பாறையான, கன்மலையான, உறுதியான கிறிஸ்துவின் வார்த்தைகளை பின்பற்ற வேண்டும். அவரை நேசிக்கிறவர்கள் அவருடைய வார்த்தைகளை கைக்கொள்வார்கள். கிறிஸ்துவின் உறுதியான வாக்குகளை தியானித்து வாழ்ந்தால் அதுவே புத்தியின் உறைவிடமாக இருக்கிறது.

C. அனுதினமும் பிசாசின் கிரியைகள் நம் வாழ்வில் அழிக்கப் பட விட்டு கொடுக்க வேண்டும். ஏனெனில் பிசாசின் hold ஆக நமது வாழ்வு இருக்கலாகாது. மாம்சம், உலகம், அசுத்தம், இச்சை போன்ற காரியங்களுக்கு விலகி பரிசுத்தம் காத்து கொண்டால் கிறிஸ்துவின் நாமம் நமக்குள் பலமாக கிரியை செய்யும். பிசாசு துரத்தப் பட்ட போது அந்த மனுசன் தெளிந்த புத்தியடைந்தான்.

D. தெளிந்த புத்தி, ஞானம் மற்றும் உணர்வு தரும் ஆவியானவரால் வாழ்வு நிறைய விட்டு கொடுத்து அவரில் வாழும் வாழ்வை பெற வேண்டும். அப்படி செய்தால் இந்த உலகில் புத்தியுள்ள வாழ்வை வாழ கர்த்தர் அருள் புரிவார். புத்தியுள்ள கன்னிகைகள் எப்போதும் எண்ணெயால் நிறைந்த வாழ்வை பெற்றதினால் கல்யாண சாலைக்குள் பிரவேசித்தார்கள்.

கர்த்தர் தாமே நிறைவான, பரிபூரணமான புத்தியை தந்து கிறிஸ்துவின் அறிவை அறிகிற வாழ்வை நிலையாக தந்து நம்மை நடத்துவாராக! ஆமென்!

செலின்