ஊழியம் இல்லை
ஊழியம் வளரவே இல்லை என்று
நொண்டி சாக்கு சொல்லுபவர்களே.. உங்களுக்கு நான் ஒன்று சொல்லட்டும்..

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திற்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் செல்கிறார். ஆதரிக்க ஆள் இல்லை செலவு செய்ய பணமும் இல்லை என்ன செய்ய என்று ஜெபத்தோடு இருக்கும் சூழலில் ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாவையும் சந்திக்கிறார். அவர்கள் கூடார தொழிலை செய்பவர்கள் தனக்கும் அந்த தொழில் தெரியும் என்பதால் அவர்களுக்கு இவர் உதவியாக இவருக்கு அவர்களுக்கு உதவியாக இருந்து ஏகதேசம் ஒன்றரை ஆண்டுகள் அங்கே அவர்களுடனே தங்கி வேலை செய்து சாப்பிட்டு.. மற்ற நேரங்களில் ஊழியம் செய்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு மகிமையான சபையை கட்டி எழுப்பி விட்டார். அதுவும் பன்னிரெண்டு வரங்களுள்ள சபையை உருவாக்கிவிட்டார். ஆகவே அங்கே அந்த திருச்சபையினர் வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்பை விட்டுவிட்டப்படியினால் அன்பே பெரியது என்றும் அன்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நிரூபங்களில் எழுதுகிறார்.ஒன்றரை ஆண்டுகளில் இப்படி ஒரு மகிமையான ஊழியத்தை கட்டி எழுப்ப முடியும் என்று சொன்னால் பத்து வருடம் இருபது வருடம் ஊழியம் செய்தும் பலன் ஒன்றும் இல்லை என்று சொல்லும் நபர்களை என்ன செய்ய முடியும். என்ன சொல்ல முடியும். ஊழியம் வளர்ச்சி அடையவில்லை என்று அங்கலாய்க்கும் ஊழியர்களின் இருதயத்தில் ஆத்தும தரிசனத்தை விட கட்டிட சொத்து தரிசனமே காரணம் ஆகும். தங்களின் நேரங்களையும் காலங்களையும் இடம் வாங்கனும் பெரிய சபையை கட்டனும் அந்த பாஸ்டர் மாதிரி அவரை விட பெரிய அளவில் சபையை கட்டனும் என்று கட்டிட போட்டியை விட்டு விட்டு அவர் சபையில் இருக்கும் ஆத்துமாக்களை விட அதிக அளவில் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும் என்று போட்டி போடுங்கள் தேவ தாசர்களே…
நம் மனம் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய மாற வேண்டும். இதை தான் தேவன் விரும்புகிறார் பரலோகம் அங்கிகரிக்கிறது. ஆத்துமாக்கள் பெருக பெருக இடம் மற்றும் கட்டிடங்கள் தானாக உருவாகிவிடும்.

நண்பர்களே நம் ஊழியம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாம்
வியாபார யுக்தியை(Business Mind) பயன்படுத்தாமல் ஆத்தும ஆதாய யுக்தியை (Soul’s Mind) பயன்படுத்தினால் நிச்சயமாக திருச்சபையின் வளர்ச்சி ஆச்சரியமாக இருக்கும் அபரிதமாகவும் இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன். ஆகவே ஒரு இடம் வாங்கனும் பெரிய ஆலயம் கட்ட வேண்டும் என்று ஆசை மற்றும் எண்ணங்கள் மனதில் இருந்தாலும் கூட ஆத்தும ஆதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். கட்டிட தரிசனத்தை விட ஆத்தும தரிசனம் பெருகட்டும். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்.

David Livingston