கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா?

தைப் பொங்கல் தமிழர்களால் உழைக்கும் மக்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னே எந்தப் புராணக் கதையும் இல்லை.ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். விளைச்சலுக்கு உதவிய கதிரவனுக்கும் தான் வளர்த்த மாட்டுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடபடுகிறது. இதற்கும் இந்திர விழாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இதே போன்ற ஒரு விழாவினை வேதகாமத்திலும் காண முடியும் “நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக”(யாத்திரைகமம் 23:16). இந்த அறுப்புக்கால பண்டிகையை தான் தமிழர்கள் அறுவடை நாள் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

மேலும் லேவியராகமம் 23ஆம் அதிகாரம் 15ஆம் வசனம் முதல் 25ஆம் வசனங்களில் அறுவடை திருவிழா எப்படி கொண்டாட வேண்டும் என்று வாசிக்கிறோம் “நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள். அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

கிறிஸ்து நமக்காக சிலுவையில் பலியானதால் இந்த அறுவடை திருநாளில் நாம் யாதொரு பலியையும் செலுத்த வேண்டியது இல்லை. அதே போல வயலில் விளைந்த விளைச்சல்கள் எல்லாம் கர்த்தாராலேயே விளைந்ததால் அறுவடை திருநாளில் சூரியனுக்கு அல்ல சூரியனை படைத்த ஆண்டவருக்கே நன்றியை செலுத்தி இந்த அறுவடை நாளான பொங்கல் திருநாளை கொண்டாடலாம். ஆமென்!