திருச்சபை வரலாறு ஏன்?

திருச்சபை வரலாறு ஏன்?

அநேகர் இன்று திருச்சபை வரலாறே அறியாது இருக்கின்றார்கள். தேவ பிள்ளைகள் மட்டுமன்றி தேவ ஊழியர்கள்கூட திருச்சபை வரலாறு தெரியாது திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேதம் மட்டுமே தெரிந்தால் போதும் என்று விவாதிப்பவர்கள் அவ்வேதம் தேவன் இவ்வுலகத்தில் செய்த காரியங்களின் வரலாற்றைத்தான் விளக்குகின்றது என்பதை உணராதிருக்கிறார்கள். நாம் வணங்கும் தேவன் வரலாற்றின் தேவனாக இருப்பதால், உலக வரலாற்றிலிருந்து அவரைப் பிரித்துவிட முடியாது.

திருச்சபை வரலாற்று அறிவு ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நிச்சயம் அவசியம். அவ்வறிவைப் பெற்றுக் கொள்பவன் கர்த்தரை மேலும் தன் வாழ்க்கையில் மகிமைப்படுத்தக் கூடியவனாக இருக்கிறான்.

திருச்சபை வரலாற்றை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கீழ்வரும் ஆறு காரணங்களும் விளக்குகின்றன.

1. கடவுள் வரலாற்றின் மூலம் செயல்படுகிறவராய் இருக்கிறார்.

வேதம் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கின்ற கடவுளுடைய வார்த்தையாய் இருக்கின்றது. எது சரி, எது பிழை என்று எடுத்துச்சொல்கின்ற பல உதாரணங்களை நாம் வேதத்தில் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி, கடவுள் எவ்வாறு எல்லாக் காரியங்களையும் தன் மகிமைக்காகவே நிறைவேற்றிக் கொள்கிறார் என்றும் வேதம் தெரிவிக்கின்றது. கர்த்தருடைய கிரியைகளே, அவருடைய பிள்ளைகளின் வரலாறாக வேதத்தில் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். எந்தளவு திருச்சபை வரலாற்று அறிவில் நாம் வளருகிறோமோ, அந்தளவிற்கு கர்த்தருடைய அறிவிலும் நாம் வளருகிறவர்களாய் இருப்போம்.

2. கிறிஸ்தவர்கள் எக்காலத்திலும் ஒரே விதமான பிரச்சனைகளையே சந்திக்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.

இவ்வுலகம் தொடர்ந்து திருச்சபையை வெறுக்கிறது. திருச்சபையில் சமாதானம் நிலவும் காலங்களிலும், அதற்கு எதிர்ப்பு ஏற்படுகின்றபோதும், சாத்தான் தனது திட்டங்களின் மூலமாக நம்மைத் தவறான வழிக்குள் இட்டுச்செல்லப் பார்க்கிறான். தவறான போதனைகளும், ஒழுக்கக்குறைவும் கிறிஸ்தவ சபை வாழ்க்கைக்குப் புதிதானதல்ல. நாம் இக்காலங்களில் சந்திக்கும் அனைத்துக் கள்ளப்போதனைகளையும் திருச்சபை வரலாற்றிலும் காணமுடிகின்றது. வேதம் இந்தக் கள்ளப்போதனைகளைக் குறித்து நம்மைத் தொடர்ந்து எச்சரிப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, இக்கள்ளப்போதனைகள் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்தால், நாம் பெருந்தவறு செய்தவர்களாவோம். கள்ளப்போதனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள திருச்சபை வரலாறு பெரிதும் உதவுகிறது.

3. வரலாற்றில் நமக்குரிய இடத்தைப்பற்றி நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

வேதம், நாமனைவரும் ‘புதிய உடன்படிக்கை’யின் காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது. அதாவது, கடவுள், கிறிஸ்துவோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நற்செய்தியை, உலகமெங்கும் இக்காலத்தில் பரப்பி வருகிறார். அதேவேளை, தேவன் எக்காலத்திலும் தனக்கென்று ஒரு மக்களைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் வேதம் வெளிப்படுத்துகிறது. இதை திருச்சபை வரலாறும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. நாம் மட்டும் கர்த்தரை அறிந்து கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஏன் அவரை அறிந்துகொள்வதில்லை? வேதத்தால் ஒருகாலத்தில், உருவாக்கப்பட்டு, எழுச்சிபெற்ற நாடுகளில் நற்செய்தி ஊழியம் வளராத நேரத்தில், ‘மூன்றாம் உலகநாடுகளில்’ மட்டும் அது பெருவளர்ச்சியடைவதின் காரணம் என்ன? திருச்சபை வரலாற்றின் அறிவைக்கொண்டே இக்கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்க முடியும்.

4. திருச்சபை வரலாறுபற்றிய அறிவு, நமது விசுவாசத்தையும், திருமறையின் போதனைகளையும், உறுதிப்படுத்துவதோடு, அவற்றிற்குப் பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

இயேசு கிறிஸ்துவில் நமக்கிருக்கும் விசுவாசம் சரித்திரபூர்வமான விசுவாசம். நமது வேத சத்தியங்கள் காளான்களைப்போல் இவ்வுலகில் திடீரெனத் தோன்றியவையல்ல. நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்களையும், போதனைகளையும் பின்பற்றியதோடு அவற்றிற்காகத் தம் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ள அநேகரை நாம் திருச்சபை வரலாற்றில் சந்திக்கிறோம். நம்மூதாதையர்கள். தொடக்கமுதல் நாம் விசுவாசிக்கும் அதே விசுவாசத்தையும், போதனைகளையுமே கொண்டிருந்ததற்கு திருச்சபை வரலாறு சாட்சி பகருகின்றது. இன்று எம்மத்தியில் கிறிஸ்துவின் பெயரில் காணப்படும் பல சமயக்கிளைகளும் குழுக்களும் இப்பெருமையைப் பெற முடியாது. அதுமட்டுமல்லாமல், திருச்சபை வரலாறு நமது விசுவாசத்திற்குப் பாதுகாப்பாக இருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தவறான போதனைகளைப் பின்பற்றுபவர்களை சந்திக்கிறோம். வரலாற்றினால் சாட்சி பகரப்படும் நமது விசுவாசத்தைக் கொண்டு, அவர்கள் வேத அறிவிலும், விசுவாச வாழ்க்கையிலும், எங்கே தவறிழைக்கிறார்கள் என்று நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. திருச்சபை வரலாற்றின் அறிவையும், வேதத்தின் போதனைகளையும் பயன்படுத்தி, தவறான போதனைகளை நாம் இனங்கண்டுக்கொள்ள முடிவதோடு, அவற்றிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளவும் முடிகின்றது.

5. திருச்சபை வரலாற்று அறிவு, நாம் நற்செய்தி ஊழியத்திலும், மிஷனரி ஊழியத்திலும் அறிவு பூர்வமான ஊக்கத்தோடு ஈடுபட உதவும்.

திருச்சபை வரலாறு, மார்டின் லூதர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ், ஜோர்ஜ் விட்பீல்ட் போன்றவர்களின் அயராத, தளராத ஊழியங்களையும், சார்ள்ஸ் ஸ்பர்ஜன் போன்றோரின் பேரூழியங்களையும், வில்லியம் கேரி, டேவிட் பிரெய்நாட் போன்றோரின் ஊக்கத்தோடுகூடிய திருப்பணிகளையும் எடுத்துரைக்கின்றது. இவர்களனைவரும் திருச்சபை வரலாற்றிற்கு தம் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்ததோடு, அதனால் உந்தப்பட்டு ஊழியத்திற்கும் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள்.

வில்லியம் கேரி, திருப்பணி ஊழியத்தில் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி எழுதிய ‘விசாரணை’ என்ற எண்பத்தைந்து பக்கங்கள் கொண்ட புத்தகத்தில், திருச்சபையின் வரலாற்றிலே எவ்வாறு அநேகர் இவ்வூழியத்தில் ஈடுபட்டு கர்த்தரை மகிமைப்படுத்தினர் என்பதையும், தாம் எவ்வாறு அவர்களுடைய வரலாற்றின் மூலம் உந்தப்பட்டு ஊழியத்தில் ஈடுபட நேர்ந்தது என்பதையும் தெரிவிக்கிறார். திருச்சபை வரலாற்றிலே கேரி அவதானித்த, பலருடைய வாழ்க்கைச் சரிதம் அவருக்குப் பேருதவி புரிந்தது.

6. திருச்சபை வரலாற்றில் நாம் பெறும் அறிவு, எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நம்மைக் கர்த்தரிலேயே தங்கியிருக்கும்படி செய்யும்.

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சார்ள்ஸ் பினி (Charles Finney) என்ற அமெரிக்க நற்செய்திப் பிரசங்கியார் நம் சந்ததிக்கு ஒரு பெருந்தவறான வழியைக் காட்டித்தந்தார். கர்த்தரிடம் இருந்து வரும் எல்லா ஆசீர்வாதங்களையும் மனிதன் தன் சுயமுயற்சியால் பெற்று அனுபவிக்க முடியும் என்று சார்ள்ஸ் பினி போதித்தார். இதற்கான சில வழி முறைகளையும் இவர் வகுத்து புத்தகமாக வெளியிட்டார். இன்று நாம் நற்செய்தி ஊழியத்தில் அவதானிக்கக்கூடிய வேதப்போதனைகளுக்குப் புறம்பான பல செயல்களுக்கு இம்மனிதனே வித்திட்டார். திருச்சபை வரலாற்றை சரியான முறையில் படித்து நாம் பெறச்கூடிய அறிவு, எல்லாவற்றிற்கும் நாம் கர்த்தரிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற தாழ்மை உணர்வை நமக்குள் ஏற்படுத்தும், திருச்சபை வளர்ச்சி, மனிதனுடைய சுய முயற்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உண்மையை வரலாறு தெளிவாகப் போதிக்கின்றது.

ஆர். பாலா