
உயர்தரமான ஹோட்டல்.
அதற்கு அடையாளம்
அதில் மங்கிய ஒளியுள்ள ஹால்.
மூன்று தமிழ் பண்டிதர்கள்
ஒரு மேஜையைச் சுற்றிலும் அமர்ந்து
சர்வரை அழைத்து
சிற்றுண்டி என்ன உண்டு என்று கேட்க,
போண்டா உண்டு என்று சொல்ல,
கொண்டுவா என்றார்கள்.
கொண்டுவந்தான்.
ஒரு பண்டிதர் அதைப் பிட்டார்.
பலகாரம் ஊசியிருக்கிறது என்றார்.
அடுத்தவர் அதைப் பிட்டபோது,
நூலாய் வருகிறது என்று சொல்ல,
வாசலில் ஒரு பிச்சைக்காரி
நிற்பதைப் பார்த்த மூன்றாமவர்
இதைத் தையலுக்குக்
(பெண்ணுக்கு) கொடுங்கள் என்றாராம்.
சிலேடைத் தமிழ் உயர்தரமானது.
ரசிக்கலாம்.
ஆனால் ஊசிபோனதே!
ஊசிப்போன பண்டங்களை
யாரும் விரும்புவதில்லை.
காலையில் சுட்ட இட்லிகள்
மாலையில் உருமாறி உப்புமாவாக
வரும்போது புளிப்பாக இருந்தாலும்
சுவையாக இருக்கிறது என்று
சொல்லுகிறவர்களை
குறை சொல்லக்கூடாது.
உள்ளே போகிற எதுவும்
தீட்டுப்படுத்துவதில்லை.
ஊசிப்போன பலகாரம்
உடலைக் கெடுக்கும்.
ஊசிப்போன உள்ளம்
உள்ளதையெல்லாம் கெடுக்குமே!
ஹோட்டல்கள் கோயில்களாக
மாறினால் நல்லதுதான்.
ஆனால் வழிபாடுகளும் ஆராதனைகளும்
ஹோட்டல்களுக்குள்ளே
பக்தியற்ற உலக மோஸ்தரில் போவது
சர்ச்சைக்குரிய விஷயமல்லவா?
சர்ச்சுக்குரிய விஷயம்
சர்ச்சைக்குரிய விஷயமாகிவிடக்கூடாது
கண்ணாடிப் பேழைக்குள்ளே
மதுபாட்டில்கள்
அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
அதற்கு கீழாக ஆசாரியர்
நின்றுகொண்டு ஆராதனை நடத்துகின்றனர்.
ஆட்களும் ஆரவாரித்துக்கொண்டு
ஆராதனை செய்கிறார்கள்
நான் மிகைப்படுத்தி எழுதவில்லை.
மினிமமாகத்தான் எழுதுகிறேன்.
முத்துக்களை எங்கே வைக்கவேண்டுமோ
அங்கே வையுங்கள்.
திருவிருந்து எங்கே பரிமாறவேண்டுமோ
அங்கே பரிமாறுங்கள்.
ஆசாரிப்புக் கூடாரத்தைக் குறித்து
ஆண்டவர் அக்கறையுள்ளவராக இருந்தார்.
அதை அனுசரிப்பதைக் குறித்தும்
பிரமாணங்களை வைத்தார்.
அதை நிர்மாணிப்பதில்
அங்குலம் அங்குலமாக
அவருக்கு ஆர்வம் இருந்தது.
மோசேக்கு அதை
விளக்கிக் காட்டிய விதம்
எவ்வளவு நேர்த்தி!
இந்த வரைபடத்தை வைத்து
இந்த நாட்களில்
எத்தனைவிதமான வேதபாடங்கள்?
பிரகாரம் பரிசுத்த ஸ்தலம்
மகாபரிசுத்த ஸ்தலம்
ஆண்டவர் இயேசு கிறிஸ்து வந்த பின்
எல்லாம் ஒன்றாகிவிட்டன.
உண்மை.
ஆனால் அதின் தத்துவம்
ஒன்றுகூட இல்லாமல் போகவில்லையே!
எந்த இடத்தில ஆராதித்தாலும்
சூழ்நிலை பரிசுத்தமாக இருப்பது
அவசியமல்லவா?
உள்ளத்தில் பரிசுத்தம் இருந்தால்
போதுமென்று,
அழுக்கு ஆடையை
கட்டிக்கொண்டு வந்தா ஆராதிக்கிறோம்?
ஆத்தும ஆதாயத்திலும்
ஆராதனையிலும் வேகம் தேவைதான்.
ஆனால் விவேகத்தையும் வேண்டாம் என்று
சொல்லிவிடமுடியாதே!
பரிசுத்தவான்களின் ஆராதனைதான்.
இன்று பாவம்நிறைந்த ஹோட்டல்களில்
நடைபெறுகிறது.என்று சொல்லுகிறார்களே!
இந்த சாட்சியை ஏற்றுக்கொள்ளும்
மனம் எனக்கு உண்டு என்று
சொல்லுகிறவர்களை
நாமும் ஏற்றுக்கொள்ளுவோமா?
ஆசாரிப்புக் கூடாரம்
கர்த்தரின் மகிமையை
மிக அதிகமாக கண்ட இடம்.
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
இரவும் பகலும் மாறி மாறி
எப்போதும் மனிதனின்
சரீரக் கண்களாலும்கூடக்
காணப்பட்ட தேவ ஸ்தலம்
அங்கு காணப்படுகிற தேவ
மகிமையை குறித்து மக்களுக்கு
பயமும் இருந்தது. பக்தியுமிருந்தது.
அங்கே அவருடைய சமூகத்து
அப்பங்கள் உண்டு.
அதில் புளிப்பில்லை அவைகள்
அன்றன்றுள்ள அப்பங்கள்
தேவ சமூகத்திற்கு வருகிறவர்களுக்கும்
அவர் சமூகத்தில் ஆராதிப்பவர்களுக்கும்
இந்த அப்பத்தின் உள்ளம் அவசியம்.
சூழ்நிலையும் அவசியம்.
இதை அந்த உயர்ந்த ஓட்டல்
கொடுக்கிறதா?
ஆண்டவர் கைகளினால்
கட்டிய கட்டடங்களில்
வாசம்பண்ணுகிறதில்லை.
இரட்சிக்கப்பட்ட புளிப்பில்லாத
அப்பங்களாகிய மனித உள்ளங்களிலும்
சரீரத்திலும் வாசம்பண்ணுகிறார்.
ஆலயங்களும் ஆராதனைகளும் அவசியம்.
நமது கடமை, பிரமாணமும் கூட.
ஆனால் புளித்தமாவு இருக்கிற இடத்தில
அவர் இருப்பதுமில்லை.
புளித்தமாவாகிய சதுசேயர்,
பரிசேயரைக் குறித்தும்
எச்சரிக்கையாக இருங்கள்.
கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா
முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
நீங்கள் புளிப்பில்லாதவர்களாய்
இருக்கிறபடியே
புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படி
பழைய புளித்தமாவைப் புறம்பே
கழித்துப் போடுங்கள்.
ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய
கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே
ஆதலால், பழைய புளித்த மாவோடே அல்ல.
துர்க்குணம் பொல்லாப்பு என்னும்
புளிப்பில்லாத அப்பத்தோடே
பண்டிகையை ஆசாரிக்கக்கடவோம்
(1 கொரிந்தியர் 5:6-8)
கர்த்தருடைய நாமத்தை
மகிமைப்படுத்துகிற
எந்த ஸ்தானத்திலும்
அவர் வருவார். ஆசீர்வதிப்பார்.
ஆனால் அவர் சமுகத்து அப்பங்கள்
அன்றன்றுள்ள புலிட்பில்லாத
அப்பங்களாக இருக்கட்டும்.

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
(1939-01 March 2021)
தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்