
சபைக்கு எதிராகக் கொத்தளங்கள்
எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள் (2.இரா 25:1).
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து பாளயமிறங்கி அதற்கு எதிராகக் கொத்தளங்களை கட்டி கூடவே கர்த்தருடைய ஆலயத்தையும் அக்கினியால் சுட்டெரித்து போட்டான் (2.இரா 25:1,9). சபைகளுக்கு எதிராகக் கொத்தளங்கள் (Camp) போடுவது அன்றைக்கு மாத்திரம் அல்ல இன்றைக்கும் இவ்வித செயல் மிகவும் அதிகம் நம் இந்திய தேசத்தில்.
சபைகள் நொருக்கப்படுவதும், சபையின் பொருட்கள் உடைக்கப்படுவதும், சபைகள் தீக்கிரையாக்கப்படுவதும் சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நடந்துவருகிறது. சபைகள் நடத்தவே கூடாதபடிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கும் செயல் மற்றொரு எதிரான கொத்தளமாகும். பல நூற்றாண்டுகளாக சபையின் வளர்ச்சியை தடுக்க எத்தனையோ மாமனிதர்கள் பல தடைகளை கொண்டுவந்தும் இன்றுவரை அதின் முன்னேற்றத்தை தடுக்கவே முடியவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு (மத் 21:44).
ஊழியர்களும், விசுவாசிகளும் இந்த சூழ்நிலைகளை கண்டு மனம் தளராமல் சமயத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும் (1.சாமு 10:7). கர்த்தராகிய தேவன் எல்லாவற்றையும் படைத்தப் பின்பு ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார், ஆனால் மனிதனுக்கோ அது முதல் நாள். மனிதனின் முதல் நாளே ஓய்வு நாளாக கர்த்தருடன் நேரம் செலவழித்தான். எனவே ஞாயிற்றுக் கிழமைகளில் ஆராதனை நடத்த முடியவில்லை என்று கவலைக்கொள்ளாமல் சமயத்துக்கு ஏற்றபடி எல்லா நாட்களையும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ள வேண்டும் (ரோ 14:6).
சபை நடத்த முடியவில்லை, சபைக்கு செல்லமுடியவில்லை என்று கவலைப்படாமல் சமயத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும். கற்களை பலிபீடமாக கட்டி கர்த்தரை தொழுது கொண்டவர்கள் பின்பு ஆசாரிப்புக் கூடாரம் கட்டினார்கள், பிறகு பெரிய ஆலயத்தை கட்டினார்கள். இவ்வித கட்டிடங்களில்தான் ஆராதனை செய்வேன் என்று சொல்லாமல் “இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது” என்று இயேசு சொன்ன வார்த்தையை நினைவு கூறுங்கள் (யோ 4:21). ஆகையால் ஆதி அப்போஸ்தலர்களைப் போல “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள் (அப் 2:46,47). ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும் (மல் 4:2).
சகோ. சந்தோஷ் பீட்டர்
DEW Movement