கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள்

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிரசங்கி 10:1)

ஒரு கிரேக்க அறிஞர் சிறு பிள்ளைகளுக்கு ஞானமாக கற்று கொடுப்பதில் தேர்ந்தவர். தன் பிள்ளைகளையும் நல்லவிதமாக வளர்த்து வந்தார். ஒழுக்கமற்றவர்களோடு பழகுவதை அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.

ஒருமுறை அவரது பிள்ளைகள் விருந்து ஒன்றில் கலந்து கொள்ள அனுமதி கேட்டனர்.

அவரோ அங்கு சில நற்செயல்களற்றவை நடக்கும், கெட்ட பழக்கம் உள்ளவர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று அறிந்திருந்தபடியால் பிள்ளைகளுக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்.

அறிஞரது மகன், ‘நீங்கள் நினைப்பது போல ஆபத்தில் சிக்குவதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல’ என்று கோபத்தோடு கூறினான்.

அவரோ எந்த வார்த்தையும் பேசாமல், வீட்டிலிருந்த ஒரு எரிந்த கரித்துண்டை எடுத்தார். அதை தன் மகனிடம் கொடுத்தார். மகன் கரித்துண்டை கையில் வாங்கின மாத்திரத்தில் கையெல்லாம் கறைபட்டது. கைதவறிய கரித்துண்டு அவனது வெள்ளை சட்டையிலும் விழுந்து கறைபடுத்தியது. ‘கரித்துண்டை கவனத்துடன் கையாள்வது ரொம்ப கஷ்டம் தான்’ என்று தகப்பனிடம் கூறினான் மகன்.

‘கரித்துண்டு உன்னை சுட்டுவிடவில்லை, ஆனால் உன்னை கறைப்படுத்தி விட்டது என்பதை அறிந்து கொள்’ என்றார் தகப்பன்.

ஆம், எத்தனை உண்மை!

தீயவர்களோடு பழகுவதால் நாம் உடனே தீயவர்களாக மாறுவதில்லை. ஆனால் அவை நம்மை கறைபட்டவர்களாக மாற்றி, காலப்பபோகிகில் நம்மையும் அத்தீய குணத;திற்கு சொந்தக்காரர்களாக மாற்றிவிடும்.

ஆகவே தான் வேதம் கூறுகிறது, ‘கோபக்காரனுக்கு தோழனாகாதே, உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே, அப்படி செய்தால் நீ அவனுடைய வழிகளை கற்றுக்கொண்டு உன் ஆத்துமாவுக்கு கண்ணியை வருவிப்பாய்’
(நீதிமொழிகள் 22:24-25) என்று நம்மை எச்சரிக்கிறது.

அதைப்போல பண ஆசை உள்ளவர்களிடம் பழகி பாருங்கள், அவர்கள் அதை சேர்க்க வேண்டும், அதை கட்ட வேண்டும், இதை கட்ட வேண்டும் என்றே பேசுவார்கள். அதை கேட்டு கொண்டிருந்தால் நமக்கும், ஐயோ நான் ஒன்றும் சேர்த்து வைக்கவில்லையே, இனியாவது சேர்த்து வைப்போம் என்று எண்ணம் நம்மையும் அறியாமல் நமக்குள் வந்துவிடும்.

பின், சில வேளைகளில் எப்படியாவது நாமும் பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று அதையே செய்து, கர்த்தர் பேரில் வைத்த நம்பிக்கையம் அற்றுப்போய் வீண் கவலைக்கும், பாரத்திற்கும் ஆளாகி விடுவோம்.

ஒருசிலர் எப்போது பார்த்தாலும் முறுமுறுத்து கொண்டே இருப்பார்கள். என்னதான் எல்லாம் நன்மையானதாக இருந்தாலும், ஏதாவது குறை கண்டுபிடித்து குற்றம் சொல்லி கொண்டே இருப்பார்கள்.
சிலவேளைகளில் நான் நினைப்பதுண்டு, வீட்டிலும் இப்படி சொல்லி கொண்டே இருந்தால், கணவனோ, மனைவியோ பாவம் என்று. அவர்களது குறைகளை கேட்டு கொண்டிருந்தால் நாமும் அவர்களோடு சேர்ந்து குறை சொல்ல ஆரம்பித்து விடுவோம்.

கர்த்தர் வெறுக்கும் இந்த காரியங்களை நம்மையும் அறியாமல் நாம் ஏற்படுத்தி கொண்ட நட்புகளால் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஒருவரையும் நாம் வெறுக்க கூடாது, ஆனால் அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்று அறிவதற்கு முன் நெருங்கிய நட்பு வைக்ககூடாது. அது ஆபத்தானது.

‘உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்’ என்ற வாக்கு நம் சமுதாயத்தில் உண்டு. நல்ல நண்பர்களை பெற்று கொள்வோம். நண்பர்களாவதற்கு முன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்தபின் நெருக்கம் கொள்வோம்.

‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்..’ என்று சங்கீதத்தில் (1:1) பார்க்கிறோம்.

அப்படி நாம் செய்யாமல் நம்மை தவிர்த்து கொண்டால், நம்மை கறைபடுத்தி கொள்ளாமல் காத்து கொள்ள முடியும். கர்த்தர் விரும்பும் பாத்திரமாக முடியும்.
எல்லாவற்றிற்கும், எல்லாருக்கும் மேலாக நல்ல நண்பராம் இயேசுவை நம்மோடு சேர்த்து கொள்வோம். அவரை நம்முடைய நல்ல நண்பராக வைத்து கொள்வோம்.

அவர் நல்ல ஆலோசனை தருவார், நம்மை நல் வழியில் நடத்துவார். ஆமென் அல்லேலூயா!

– Rev.Bishop.Kennedy