
அலங்கோலத்திலிருந்து அலங்காரம்
.
அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். – (ஏசாயா 61:4).
.
ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு.
அதில் பல அறைகள் இருப்பினும் ஒரு அறை மட்டும் மிகவும் விசேஷமானது. அவ்வீட்டைப் பார்வையிட செல்லும் ஓவியரெல்லாம் அவ்வறை சுவர்களில் ஏதாகிலும் ஒரு ஓவியத்தை வரைந்து செல்வது வழக்கம்.
ஒரு காலத்தில் அவ்வறை மிக நேர்த்தியாக கட்டப்பட்டு அழகிய வர்ணம் பூசப்பட்டதாய் இருந்தது. ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சோடா குடிநீர் சேமிப்பு கலம் வெடித்து அதன் அழகிய சுவரெல்லாம் கறைபட்டு போயின.
.
அங்கு தங்கியிருந்த பிரபல ஓவியர் சர்.எட்வின் லாண்ட்சீர் என்பவர் அந்த கறைகளை பார்த்தபோது அவை நிலையாக நிற்கும் கறைகள் போல் அவருக்கு தோன்றின.
பின் அவர் தன் கலைத்திறனால் அந்த கறைகளை விலைமதிக்க முடியாத ஒர் ஓவியமாக மாற்றிவிட்டார். அதில் அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் பின்னணி காட்சியை வரைந்தார். அதிலுள்ள பாறைகளும், மரங்களும் அவற்றிற்கிடையில் கெம்பீர தோற்றத்துடன் நிற்கும் ஒரு அழகிய ஆண்மானும் காண்போருக்கு உண்மை காட்சியைப் போல தோற்றமளித்தன.
இந்த ஓவியம் ஸ்காட்லாந்தின் சிறந்த மலைக்காட்சி ஓவியங்களில் ஒன்றாக விளங்குகிறது. அன்று அலங்கோலமான கறை இன்று ஆயிரக்கணக்கானோரை தன் பக்கம் இழுக்கும் ஒரு அழகிய காட்சியாய் விளங்குகிறது.
.
ஒரு காலத்தில் நமது ஆவிக்குரிய வாழ்வும் நன்கு வளர்ச்சியடைந்த தேவனுடைய கண்களுக்கு அழகானதாக காணப்பட்டிருக்கலாம்.
ஆனால் தற்போதோ நற்சுபாவங்கள், நல்ல பழக்கவழக்கங்கள், மிகச்சிறந்த ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாம் மறைந்து பாவ கறை படிந்து அலங்கோலமாய் காணப்படுகிறதோ?
முந்தின நாட்களில் என்னில் காணப்பட்ட உன்னத அனுபவங்கள் மீண்டும் துளிர்ப்பது சாத்தியம் தானா? நான் இழந்து போயிருக்கும் ஜெப ஜீவியம் என்னில் புதுப்பிக்கப்படுமோ, என்ற அங்கலாய்போடு காண்ப்படுகிறீர்களோ?
உங்கள் ஆத்துமா தொய்ந்து போய் உள்ளதோ? சோர்ந்து போகாதீர்கள்!
.
ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர், ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியை சீர்படுத்தினவர் நம் தேவன்.
அவர் உங்களில் சீர்குலைந்து கிடக்கும் அனைத்து மேன்மையான அனுபவங்களையும் மீண்டும் உருவாக்க வல்லமையுள்ளவர். அவரே உங்களது முந்தின சீரை பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாக செய்வார்.
அவர் அலங்கோலத்தை அலங்காரமாகவும், தோல்வியை ஜெயமாகவும், துக்கத்தை சந்தோஷமாகவும் மாற செய்கிறவர். வறண்ட ஆவிக்குரிய ஜீவியத்தை தண்ணீர் தடாகமாவும், நீரூற்றாகவும் மாற்றி மிகுதியாய் செழிக்க செய்கின்றவர்.
.
பிரியமானவர்களே, நீங்கள் இழந்து போன ஆவிக்குரிய வாழ்வை எண்ணி சோர்ந்து போகாமல், உங்களை புதுப்பித்து உயிர்ப்பிக்க கூடிய சர்வ வல்லவரின் கரங்களில் இன்றே ஒப்புக்கொடுங்கள்.
அவர் உங்களை மீண்டும் அலங்கரித்து அநேகருக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!
.
ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த வேளையிலும் வறண்ட நிலத்தை போல காணப்படுகின்ற எங்கள் வாழ்க்கையை உம்முடைய அற்புத கரத்தில் ஒப்படைக்கிறேhம் தகப்பனே, ஒரு நாளில் ஆவிக்குரிய வாழ்வில் ஜொலித்த எங்கள் வாழ்வில், ஜெபத்தில் வல்லமையாய் இருந்த வாழ்வில் தற்போது காணப்படுகிற எல்லா அலங்கோலத்தையும் மாற்றி அலங்காரமாய் மாற்றுவீராக. ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கினவரே, கோணலானவைகளை செவ்வையாக்குகிற தேவனே எங்கள் வாழ்விலும் காணப்படுகின்ற கோணலான காரியங்களை எல்லாம் செம்மைப்படுத்தும்படியாக எங்களை ஒப்புக்கொடுக்கிறோம் தகப்பனே. ஆதியில் கொண்டிருந்த அன்பை நாங்கள் விட்டுவிடாதபடிக்கு உம்மையே உறுதியாய் பற்றிகொள்கிறோம். நம்பிக்கை இழந்த எங்களுடைய வாழ்வை புதிதாய் மாற்றி, கனி கொடுக்கிற வாழ்வை திரும்ப தருவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.