சாதாரண மனிதர்களின் பாராட்டை எதிர்பார்த்து சோர்ந்து போகாதே

சாதாரண மனிதர்களின் பாராட்டை எதிர்பார்த்து சோர்ந்து போகாதே

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அலுவலகமோ எந்த விசேஷமும் இல்லாதது போல தன் வேலையுண்டு , தானுண்டு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. Staff notice board கூடப் பழைய செய்திகளை மட்டும் அறிவித்துக் கொண்டு வெறுமையாய்க் காணப்பட்டது. ஜட்சனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
அறுபது பணியாளர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒருவருக்குக் கூடவா தெரியாமல் போகும் ? Attendance clerk கூடவா கவனித்திருக்க மாட்டார். HRMS திறந்த உடனேயே தெரியப்படுத்தி இருக்குமே . இதுவே சித்தார்த்தின் பிறந்த நாளாக இருந்திருந்தால் ?
ஜட்சன் , ” Rain Deer ” நிறுவனத்தில் இணைந்து இது ஏழாவது வருடம் . இந்த ஏழு வருடங்களில் ஒரு முறை கூட அவனுடைய பிறந்த நாளுக்கான வாழ்த்து நோட்டீஸ்போர்டில் வந்ததே இல்லை. எவ்வளவோ பணியாளர்களுக்கு வாழ்த்து சொல்லும் நிறுவனம் அவனுடைய பிறந்த நாளை மட்டும் ஏனோ கண்டுகொண்டதில்லை.
போன மாதம் சித்தார்த்தின் பிறந்த நாளில் அலுவலகம் என்ன பாடுபட்டது. எத்தனை வாழ்த்துகள் , பரிசுப் பொருட்கள்! சித்தார்த் சேர்ந்து ஒரு நாலு வருஷம் இருக்குமா ? அவனுக்கு மட்டும் அங்கே என்ன ஒரு மரியாதை! ஜட்சனுக்கு சுய பச்சாதாபம் மேலிட்டது.
ம்ம்ம் . சித்தார்த்தின் கதை வேறு . அவன் பிறந்த நாளில் எல்லாருக்குமே மதியம் பிரியாணி , KFC ,Coke எல்லாமே வந்துவிடும். அதுவுமில்லாமல் வேலை நேரம் முடிந்ததும் ஒரு மானங்கெட்ட கூட்டமே அவன் பின்னால் “பார்ட்டி ” கொண்டாடக் கிளம்பிவிடும். அன்றைய செலவு மட்டும் சில ஆயிரங்கள். அப்படி இருக்கும் போது 60 x 5 = 300 என்று கணக்குப் போட்டு ஜட்சன் வாங்கி வந்திருக்கும் Dairy Milkகை யார்தான் மதிப்பார்கள் ? அவனுடைய குடும்ப சூழ்நிலையில் அதுவே அதிகம் என்று யார்தான் நினைப்பார்கள் ?
இதற்கு மேல் ஜட்சனுக்குப் பொறுமையில்லை . எழுந்து அவனே ஒவ்வொருவரிடமும் சாக்லேட்டைக் கொடுக்கத் துவங்கினான்.
” என்னப்பா , முன்னாடியே சொல்றதில்லையா ? “
” காலைலயே தெரிஞ்சிருந்தா ஏதாச்சும் gift வாங்கிருப்பேன் “
” நேத்து நைட் பண்ணெண்டு மணிக்கே கூப்பிட்டு விஷ் பண்ணனும்னு நெனச்சேன் “.
ஒவ்வொரு வார்த்தையும் சம்பிரதாயமாக சொல்லப்பட்ட ரெடிமேட் வார்த்தைகள் என்பது அவனுக்குத் தெரிந்ததுதான்.
” ஆண்டவரே! உமக்கு பயந்து நேர்மையாக சம்பாதிக்கும் என்னைப் போன்ற ஏழைகளால் இவ்வளவுதான் செய்ய முடியும். வீட்டு வாடகைக்கும் , இதர செலவுகளுக்கும் , தம்பி தங்கையின் படிப்புக்கும் , வாங்குகிற சம்பளமே போதவில்லை. இருந்தாலும் நான் அவனைப் போல் , நிர்வாகத்துக்கு துரோகம் செய்து படாடோபமான வாழ்க்கை வாழ ஆசைப்படாதபடி என் சிந்தனையை ஆளுகை செய்யும் ” . மனதுக்குள் ஜெபித்தான்.

” பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே, நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே “
மனதுக்குள் சங்கீதம் 37 :1 ஒலித்தது. இருந்தாலும் மனிதப் பிறவியல்லவா ? திருக்குள்ளதும் , கேடுபாடுள்ளதுமாகிய இதயம் வறுமையையும் , பற்றாக் குறையும் நினைத்து ஓலமிட்டது . உடன் பணியாளர்களின் , சிரத்தையில்லாமல் சொல்லப்பட்ட அசுவாரஸ்யமான வாழ்த்துக்களையும் ,
மறுமொழிகளையும் அசை போடும்போது
தன்னையும் மீறி அழுதுவிட்டான் .
” போதும் ஆண்டவரே! இந்த வறுமை ரொம்ப போரடிக்குது . கடைசி வரைக்கும் இப்படித்தானா ? “.
Rain Deer , துபாயில் துவங்கப்பட்ட ஒரு மிகப் பெரிய பார்ஸல் சர்வீஸ் . உலகம் முழுக்க அதற்கு முன்னூறு கிளைகளுக்கு மேல் உண்டு. அதன் தமிழ் நாட்டின் கிளையில்தான் அவன் இருந்தான். அவனது ஜெபமும், நேர்மையான உழைப்பும் நிறுவனத்தில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி இருந்தாலும் சித்தார்த்தைப் போல அவனைச் சுற்றி ஒரு கூட்டமில்லை.
சித்தார்த்திடம் எப்போதுமே பணம் புரளும். டிரைவர்கள் முதல் மேனேஜர் வரை அவனோடு குழைந்து குழைந்து பேசுவார்கள். சில உள்ளூர் பார்சல்களை எந்த பில்லும் இல்லாமல் பாதிக் கட்டணத்தில் அவன் அனுப்புவதாகவும் , அந்தத் தொகையை மேனேஜருடனும் , டிரைவர்களுடனும் பகிர்ந்து கொள்வதாகவும் அரசல்புரசலாக ஜட்சனின் காதில் விழுந்த போதிலும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாமன் மச்சான் மாதிரி மேனேஜரோடு உறவாடிக் கொண்டிருக்கும் ஒருவனைக் குறித்துப் புகார் செய்யும் தைரியம் யாருக்கு வரும் ? அத்துடன் தகுந்த ஆதாரம் ?
பல முறை ஜெபத்தில் அழுதிருக்கிறான் ஜட்சன். மார்க்கெட்டிங் தன்னுடைய வேலை அல்ல என்றாலும், சுய முயற்சியில் பல பெரிய வாடிக்கையாளர்களை உருவாக்கியிருக்கிறான் . இது வரை அதற்காக ஒரு வாழ்த்து கூட மேலிடத்தில் இருந்து வந்ததில்லை . கிட்டத்தட்ட 20 % வாடிக்கையாளர்கள் ஜட்சன் மூலமாய் வந்தவர்கள்தான். பல புகார்களை அழகாக சமாளித்திருக்கிறான். ம்ம்ம். யாரும் கண்டுகொள்வதுதான் இல்லை. என்னவோ பெரிய சாதனையாளன் போல சித்தார்த்தைத்தான் சுற்றி நின்று கொண்டு பல்லைக் காட்டுவார்கள் .
” எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் ” என்ற கொலோசெயர் 3 :24 வசனங்கள் அவனுக்கு மிகப் பெரிய ஆறுதல். சாக்லேட் கொடுத்து முடித்தாயிற்று. ஒரு வாடிக்கையாள நண்பர் மூலமாய் Jenny Tex என்ற ஒரு நிறுவனத்தின் தொடர்பு எண் கிடைத்திருந்தது . அவர்கள் உலகின் பல இடங்களுக்கும் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நிறுவனம் .
Jenny Texசின் GM மிக எளிமையாகத்தான் பேசினார். அடுத்த வாரம் முதல் , பார்சல் அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்தார். எவ்வளவு பெரிய வெற்றி ! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொன்னான். மேனேஜர் அமர்ந்திருக்கும் கேபினைப் பார்த்தான். மேனேஜரும் சித்தார்த்தும் ஒரே தட்டில் இருந்து எதையோ எடுத்துக் கொறித்துக் கொண்டே டீயை உறிஞ்சிக் கொண்டு , சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தனர். இப்போது ஜட்சனிடமிருந்து ஒரு பெருமூச்சு மாத்திரம் வெளிப்பட்டது. வேலையில் மூழ்கிப் போனான்.
வேலை முடிந்து அலுவலகத்தை மூடப்போகும் நேரத்துக்கு ஒரு அரை மணி நேரம் இருக்கும். மேனேஜர் அவசரமாய் எல்லாரையும் conference hall வரும்படி அழைத்தார். இதுபோன்ற அவசரக் கூடுகைகள் ஆடிட்டிங் சமயங்களில் , இலக்கு நிர்ணயிக்கப்படும் சமயங்களிலும் நிகழ்வதுண்டு. ஆனால் இவை இரண்டுமே இரண்டு மாதங்கள் முன்பாகவே நடந்து விட்டன.
” பிறகு ஏன் இந்த அவசரக் கூடுகை ?”.
எல்லா முகங்களிலும் கேள்விக்குறி . மேனேஜர் பதற்றமாய்ச் சொன்னார்.
” Friends. நம்ம கம்பெனியோட Country Manager இன்னிக்கு வரப்போறதா information வந்திருக்குது. திடீர்னு plan பண்ணதாம்.கொஞ்சம் அவங்கவங்க செக்ஷனை மட்டும் கொஞ்சம் நீட்டா ரெடி பண்ணி வச்சுக்குங்க. மற்றபடி Business improvement டுக்கு ஏதாச்சும் idea கேட்டார்னா உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க போதும் . அவரோட பூர்வீகம் கும்பகோணந்தான். அதனால பயப்படாம தமிழ்லயே நீங்க பேசலாம் ” . எல்லாம் சொல்லி முடித்த பின் கடைசியாகச் சொன்னார் ,
” தேவையில்லாம யார் மேலயாச்சும் complaint பண்ணி, வந்தவரை mood out ஆக்கி branch image ஜைக் கெடுத்துடாதிங்க “. இதைச் சொல்லும்போது மட்டும் அவரிடம் கொஞ்சம் பதற்றம் காணப்பட்டதை ஜட்சன் உணர்ந்தான்.
ஏழு மணிக்கு ஜட்சன் ஒரு Cottage Prayer போக வேண்டும். அவன்தான் அன்று மெசேஜ் கொடுக்க வேண்டும். செய்தியைக் காலையிலேயே தயாரித்து விட்டான். ஒரு ரிவிஷன் மட்டும் பார்த்தால் போதும். ஆனால் அதற்குள் மீட்டிங் முடிய வேண்டுமே. இருந்த இடத்தில் இருந்தே கண்களை மூடி அதற்காக ஜெபித்தான்.
அடுத்த பதினைந்து நிமிடங்களிலேயே அவர் வந்துவிட்டார். ஆனால் யாரையும் , எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. பார்த்தவர்களிடமெல்லாம் ஒரு சிநேகமான புன்னகையைக் காட்டிக் கடந்து சென்றார்.
Conference Hall மெளனத்தினால் நிரம்பியிருந்தது. Country Manager தன்னுடைய மழலையான தமிழால் மெளனத்தைக் கலைத்தார். எதிர்பார்த்ததை விட அதிகமாய் branch வளர்ந்திருப்பதைப் பாராட்டினார். பணியாளர்களுக்காக இன்னும் பல புதிய நலத்திட்டங்கள் வரப்போவதை அறிவித்தார் . தீடீரென்று இன்னொரு விஷயமும் சொன்னார்.
” கம்பெனி வாகனத்துல , கம்பெனியோட expenseல இங்க யார் யார் Business பண்ணி திருட்டுத்தனமா சம்பாதிக்கிறீங்கன்னும் information வந்திருக்குது. அவங்க மேல official action சீக்கிரம் வரும். ஒன்னு தெரிஞ்சுக்குங்க , நீங்க unofficial business பண்ற clients இருக்குற கம்பெனிலயும் நமக்கு ஆள் இருக்காங்க . நீங்க எந்த தப்பு பண்ணாலும் தெரியாம போகாது “.
மேனேஜரும் , சித்தார்த்தும் பயத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர். அவர் பேச்சைத் தொடர்ந்தார். நம்ம கம்பெனி விளம்பரத்துக்குன்னு பெரிசா expense ஒன்னும் பண்றதில்ல. Marketing கூட பெரிய ரேஞ்சுல கிடையாது. இருந்தாலும் ஒரு இந்த ஏரியால ஒரு remarkable growth இருக்கிறத கவனிச்சோம். அப்புறமா நம்ப customers கிட்ட அவங்க எப்படி நம்மள செலக்ட் பண்ணாங்கன்னு ஒரு secret survey பண்ணோம். அதுல நிறைய பேர் மென்ஷன் பண்ண ஒரு name ஜட்சன்.
‘ Mr. Judson. Could you please come front ? ‘
ஜட்சனுக்கு நடப்பதெல்லாம் கனவா , நிஜமா என்று புரியவில்லை. ரோபோ மாதிரி எழுந்து முன்னே சென்றான். Country Manager அவன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டார் .
” Good job young man என்றபடி தன்னுடன் வந்த டிரைவரைப் பார்த்தார் . அவர் ஓடிப்போய் ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வந்து முன்னால் இருந்த மேஜையில் வைத்துப் பிரித்தார். அது ஒரு விலை உயர்ந்த கேக். அதில் Happy birthday Judson என்று எழுதப்பட்டிருந்தது. அவர் பேச்சைத் தொடர்ந்தார்.
” Survey முடிஞ்சு நாலு நாளாச்சு . ஆனா இன்னிக்குதான் ஜட்சனுக்கு birthday னு அவரைப் பத்தி details gather பண்ணும் போது HRMS ல பாத்தேன். அதனாலதான் சர்ப்ரைஸா இந்த நாளை choose பண்ணேன். கட் பண்ணுங்க ஜட்ஸன் ” என்றார்.
அடுத்து அவர் செய்தது யாரும் எதிர்பாராதது. அவரே கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டினார் . யாரால் கண்டு கொள்ளப்படாத அவன் பிறந்த நாளை எல்லாருக்கும் மேலான பதவி வகிக்கும் ஒரு பெரிய அதிகாரி கொண்டாடுகிறார். சராசரி பணியாளர்களால் அலட்சியப்படுத்தப்பட்ட ஒருவனை அந்த நிறுவனத்திலேயே உயர்ந்த மனிதர் பெருமைப்படுத்துகிறார். அதற்கு மேல் ஜட்சனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. கதறி அழுதுவிட்டான்.
” கர்த்தாவே நீர் நல்லவர். நீர் காண்கிற தேவன். நன்றிப்பா. நன்றிப்பா ” .
வாய் விட்டே சொல்லிவிட்டான்.
முழு அலுவலகமும் அசையாமல் கவனித்துக் கொண்டிருந்தது.
” நம்ம வளர்ச்சிக்குத் தேவை ஜட்சன் மாதிரி dedicated workers தான். அவர் personal interest எடுத்து , தான் இருக்கிற இடம் நல்லாருக்கணும்னு இந்த அளவுக்கு முயற்சி பண்ணிருக்கார். இன்னிக்கு கூட Jenny Tex னு ஒரு கம்பெனில பேசிருக்கார். அவங்க வேற சில doubts clear பண்ணிக்கிறதுக்காக நம்ம Customer Care க்கு Call பண்ணி பேசுனதாலதான் எனக்கு தெரியவந்தது.
அடுத்த வாரத்துலேர்ந்து ஜட்சனுக்கு ரெண்டு மாசம் டெல்லியில் training இருக்கும். அது முடிஞ்சதும் ” கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னார் ,
” ஜட்சன்தான் இந்த Branch சோட manager. இப்ப இருக்குற Manager கிரியோட service நம்ம சென்னை Cargo unit ல தேவைப்படுது. அவர் அங்க போய்டுவார் “.
ஜட்சனிடம் திரும்பி சொன்னார் ,
” இதான் Rain Deer உங்களுக்குக் குடுக்குற Birth Day Gift ” . ஜட்சன் கண்ணீரோடு கையைடுத்து வணங்கினான்.


சொந்தமே ! உன் ஒவ்வொரு நற்செயலும் கர்த்தரின் கணக்கில் உண்டு. சாதாரண மனிதர்களின் பாராட்டை எதிர்பார்த்து சோர்ந்து போகாதே . அனைத்திலும் மேலானவர் உன்னை அரவணைத்து முடி சூட்ட வருகிறார்.

” ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர் ” சங்கீதம் 3 :3

ஆறுதலின் தேவன் ஊழியங்கள்