
நகரும் நாட்கள்
இயங்குவதும் இயக்குவதும்
இன்றைய மனித வாழ்வின்
தத்துவங்கள்.
இவற்றுக்கு இடையே தான்
நாம் உலகத்தில் வெற்றி நடை
போடவேண்டும்.
மருத்துவமனைகளிலும்
ரயில்வே நிலையங்கள் மற்றும்
விமான நிலையங்களிலும்
சுகவீனமுள்ளவர்கள் முதியவர்கள்
ஊனமுற்றோர் போன்றோருக்கும்
ஏனைய நடக்க இயலாதோருக்கும்
எங்கும் பேருதவி புரிவது
சக்கர நாற்காலிதான்.
உள்ளத்தில் ஊனமுற்றோர்
இதய எண்ணங்களால்
சோர்வுற்றோர்
மனதால் நோயுற்றோர்
கவலை, கண்ணீர், ஏமாற்றம்,
பாரம் இவைகளால்
எழுந்திருக்கவும் சக்தியின்றி
நடைப்பிணமாக வாழ்பவர்களுக்கு
சக்கர நாற்காலி உண்டு.
அதுதான் இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள
உங்களின் விசுவாச வாகனம்
அது தாங்கும், ஏந்தும், சுமக்கும்,
ஓடும், உழைக்கும்.
உங்கள் உள்ளத்திலுள்ள
விசுவாசத்தை
நீங்கள் சுமந்து செல்லப்
பிரயாசப்படாதீர்கள்.
உங்கள் உள்ளத்திலுள்ள விசுவாசம்
உங்களைச் சுமந்து செல்ல
இடம்கொடுங்கள்.
ஜெயம் பெறுவீர்கள்.
நமது விசுவாசமே உலகத்தை
ஜெயிக்கிற ஜெயம் ( 1 யோவான் 5:4).
விசுவாசம் என்பது ஒரு உந்துவிசை.
உள்ளத்தில் இருந்துகொண்டு
உலகத்தை ஜெயிக்கும்
ஒரு மாபெரும் சக்தி.
அது உங்களைக் கடைசிவரை
வழிநடத்திச் செல்லும்.
ஆனால் அந்த விசுவாசம்
இயேசுவின்மேல்
இருக்கவேண்டும்.
பரிசுத்த விசுவாசத்தினாலே
உங்களை உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள் (யூதா 20)
தேவன் பேரில் உள்ள
உங்கள் விசுவாசம்
உங்களில் கிரியை
செய்யவேண்டும்
சக்கர நாற்காலிகளில்
மூன்று விதம் உண்டு
பாதிக்கப்பட்டவரை வைத்து
பிறர் தள்ளிகொண்டுசெல்லும்
சக்கர நாற்காலி.
மற்றவர்களில் உள்ள
விசுவாசத்தை வைத்து
எத்தனை நாட்களுக்கு
நீங்கள் நகரப்போகிறீர்கள்?
இன்னொன்று
இயந்திர விசையால் ஓடுகிற
சக்கர நாற்காலிகள்.
பவர் கட்டாகி, பேட்டரி சப்ளை
திடீரென நின்றுபோனால்
நிலைதடுமாற வாய்ப்பு உண்டு.
நீங்களாகவே உங்களது கைகளால்
தள்ளிகொண்டுசெல்கிற வகை மூன்றாவது.
நீங்களாகவே இயேசுவின் உதவியோடு
உங்களில் துவக்கப்படுகிற
விசுவாச கிரியைகளுக்கு
உங்களை ஒப்புக் கொடுங்கள்
அவரே உங்கள் ஒவ்வொரு
காரியத்தையும்
விசுவாசத்தில் முடிக்க
உதவியாக இருப்பார்(எபிரெயர் 12:1)
உங்களைத் தாங்கிச்செல்கிற
விசுவாச வண்டி அடிக்கடி
சோதனை ஓட்டத்திற்கு
உட்பட வேண்டும்.
அப்போதுதான் உங்கள் விசுவாசம்
உறுதிப்படும். அதற்குப்
பொறுமை தேவை (யாக்கோபு 1:3,4)
விசுவாசமாகிய கப்பலைச்
சேதப்படுத்ததே (1 தீமோத்தேயு 1:19)
உன் விசுவாசத்தைக்
கிரியைகளில் காண்பி
(யாக்கோபு 2:17, 18)
உன் விசுவாசம் உன்னில்
ஊனமாகாதிருந்தால்
உனக்குச்
சக்கர நாற்காலி தேவையில்லை.
நீங்களெல்லாம் கிறிஸ்துவைப் பற்றும்
விசுவாசத்தினாலே தேவனுடைய
புத்திரராய் இருக்கிறீர்களே!
(கலாத்தியர் 3:26)
எழுதியவர்
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 – 2021)
போதகர் / எழுத்தாளர்

தொகுப்பு:
Rev. J. Israel Vidya Prakash B.Com.,
Director – TCN Media Literature Dept.
Radio Speaker – Aaruthal FM
