
பாஸ்டர் S. விக்டர் ஜெயபால்
போதகர் | எழுத்தாளர்
வெற்றி முழக்கம் என்பது மீட்பிற்குப் பின்னால் வரும் உணர்ச்சிப் பெருக்காகும். தோற்றவனும் முழக்கமிடுகிறான். வெற்றி பெற்றவனும் முழங்குகிறான். இதில் ஜெயித்தவன் யார்? தோற்றவன் யார் என்று, இப்போதெல்லாம் தெரிவதில்லை. இது இந்தக் காலக் கொடுமை.
வெற்றியின் அனுகூலங்களைக் குறித்து ஆயிரம் எழுதுகிறார்கள். மேடைகளில் வானளாவப் பேசுகிறார்கள். ஆனால் அதில் அநேகருக்கு மகிழ்ச்சி இல்லை.
இந்தப் பாருக்குள்ளே, போருக்குரிய ஆயத்தங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. போர்க் கருவிகளின் சோதனை, ஏவுகணைகளை ஏவிச் சோதனை, எனச் சோதனை மேல் சோதனையாக மனுக்குலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் வெற்றி பெற்றால் வெறித்தனமாக வெடி வெடித்துத் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள். அந்த மகிழ்ச்சிக்கு கொண்டாட்டத்தில் சிலர் மாண்டும் போகிறார்கள்.
ராக்கெட் சோதனை என்றாலும் ரசாயனக் கருவிகளின் சோதனைகள் என்றாலும் போருக்கு ஆயத்தம் என்று எதிர்ப்போருக்குச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படுவதற்குச் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த யுத்தமும், யுத்தத்திற்கான ஆயுதமும் யோசுவா புத்தகத்தின் 5 மற்றும் 6 ம் அதிகாரங்களில் காணப்படுகிறது. இன்றைக்கும் அந்த யுத்தத்தின் வெற்றி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வெற்றியின் பாதிப்பு உள்ளப் பூர்வமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் இன்றும் வெளிப்படுகிறது. அந்த உண்மையினைச் சுட்டிக் காட்டுவதுதான் இந்தக் கட்டுரையின் உள்நோக்கம்.
கடல் அடிக்கடி உள்வாங்குவது போல, இதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே உலகக் காரியங்களுக்குள்ளே உள்வாங்கிவிடாமல், அதாவது வாசிப்பதை நிறுத்திவிட்டு மார்த்தாளைப் போல வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தி விடாமல் தொடர்ந்து வாசியுங்கள். வாசிப்பதன் மூலம் உங்கள் விசுவாச வேர்களுக்கு ஜீவதண்ணீரைப் பாய்ச்சுங்கள். வெற்றியின் பாதையில் தொடர்ந்து உங்களை தேவன் நடத்துவார்.
இஸ்ரவேல் ஜனங்களை 430 ஆண்டு கால எகிப்தின் அடிமைத்தனத்தினின்று சர்வ வல்ல தேவன் விடுவித்து அவர் வாக்குப்பண்ணியபடி புதிய கானான் தேசத்திற்கு அவர்களைக் கொண்டுவந்தார். 40 ஆண்டுகால வனாந்திரப் பயணம் முற்றுப் பெற்றது அவர்களுக்குப் புதிய பூமி கிடைத்தது. புதிய மகிழ்ச்சியும் கிடைத்தது.
வனாந்திரப் பாதையில் அவர்களுக்கு சொகுசான வாழ்க்கை. வேலை வெட்டி கிடையாது. உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற விதியும் இல்லை, நியதியும் இல்லை. (இன்றைக்கு இந்த விதியை சிலர் பயன்படுத்துகிறார்கள். அது வேதனைக்குரியது).
“ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே’’ (2 தெச 3:10) என்று பரிசுத்தப் பவுல் எழுதி வைத்திருக்கிறாரே!
நேரத்திற்கு உணவு, எப்போதும் அழுக்கில்லாத உடுப்பு, வளர்ச்சிக்கேற்ப கூடவே வளர்ந்து கொண்டிருக்கும் செருப்பு, வேண்டிய மட்டும் தண்ணீர், விருந்துக்கான இறைச்சி, இப்படி ஒரு அற்புதமான ஆச்சரியப்பட வைக்கும் வாழ்க்கை, வனாந்தரத்தில்! தம்முடைய வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு ஆண்டவர் முற்றிலுமாக நிறைவேற்றினார்.
இனி வாக்குத்தத்த தேசத்தை தேவ ஜனம் சுதந்தரிக்க வேண்டும். எடுத்த எடுப்பில் எரிகோ கோட்டை இவர்களுக்கு எதிராக அடைபட்டுக் கிடக்கிறது. எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரில் மருந்துக்குக் கூட ஒருவருமில்லை. எல்லாரும் வனாந்தரத்தில் முறுமுறுத்தே மாண்டுபோனார்கள்.
யோசுவாவும் காலேபும்தான் மிச்சம். எரிகோவிற்கு எதிராக யுத்தம் தொடங்க வேண்டும். யோசுவா துரிதமாக செயல்பட ஆரம்பித்தார்.
எப்போதும் சாத்தானுக்கு எதிராக யுத்தம் செய்யும் நாம் வெற்றி பெறச் சில வழிகளை மேற்கொண்ட அனுபவம் உண்டு. இப்போதும் அப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகுங்கள். யோர்தானைக் கடந்தவுடன் அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு நியாயப்பிரமாணத்தின்படி பரிசுத்தமானார்கள். பரிசுத்தமடையாமல் சத்துருவோடு யுத்தம் செய்ய முடியாது. “பரிசுத்தமாகுதல் நமக்கு கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன்’’.
அடுத்து அவர்கள் எரிகோவின் சமவெளியில் பஸ்காவைப் புசித்தார்கள். பஸ்கா, பரிசுத்த ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து. சொந்த தேசத்தின் தானியத்தால் தயாரித்த புளிப்பில்லாத அப்பம் புசித்தார்கள். நீ உன் சொந்த தேசத்தைச் சுதந்தரிக்க உன்னில் புளிப்பான எந்தப் பாவமும் இருக்ககூடாது.
இனிமேலும் அற்புதங்களால் வந்த வானத்து மன்னா இல்லை. உன் புதிய தேசத்தின் பலனைப் புசிக்க உனக்கு ஆயத்தமும் முயற்சியும் பக்திக்குரிய செயலும் தேவைப்படுகிறது.
இப்போது உனக்குப் புதிய தளபதியும் திட்டமும் தேவை. எரிகோ கோட்டையின் யுத்தத்தை நடத்த எனக்கு ஆலோசனையோடுகூட ஒரு தலைவர் தேவை என்ற சிந்தனை யோசுவாவிற்கு வந்தது. எரிகோவின் கோட்டைக்கு வெளியே புதிய பார்வையுடன் தனியாக நடக்கிறான். எதிரான ஒரு கோட்டையைத் தகர்க்க தனியாக எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மனம் தேவை.
உன் பரிசுத்தமான காத்திருக்குதலுக்கு நடுவே ஒரு புதிய தளபதியை நீ சந்திப்பாய். என்ன ஆச்சரியம்.? அவர் பழைய ஏற்பாட்டுத் தளபதி அல்ல. புதிய ஏற்பாட்டுத் தளபதி. புதிய கானானில் புதிய தளபதியாய், உருவின பட்டயத்தோடு இஸ்ரவேல் ஜனங்களையும் யோசுவாவையும் வரவேற்கும் ஆண்டவர் இயேசு! ஆச்சரியமாயிருக்கிறதா?
அவர் சொன்ன பதிலை ஆராய்ந்துபாருங்கள். நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன். “சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையுமே’’ என்ற சகோதரி சாராள் நவரோஜியின் பாடல் நினைவிருக்கிறதா? இனி எப்படி உலகைச் சந்திக்க வரப்போகிறார் என்பதற்கு முன்னோட்டம் இதுதான்.
உங்களுக்குத்தான் எத்தனை எதிர்ப்புகள்? எத்தனை தடைகள்? கதவடைப்புகள் ? இவற்றிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட இந்தக் காலத்தில்தான் எத்தனை ஆலோசனை மையங்கள்! (COUNSELLING CENTRES) அமைப்புக்கள்? இவற்றிக்கு ஜனங்கள் அலைந்து திரிந்து அலுத்துப்போகிறார்கள். அவர்களை பார்க்கும்போது பரிதாபமாய் இருக்கும். சத்திய வேதத்தை ஆவலாய் வாசித்து அறிந்திருந்தால், அல்லல்படமாட்டார்கள். இப்போதும் ஆலோசனைக்குக் கர்த்தர் உன் அருகில் வந்திருக்கிறார். யோசுவாவைப் போல் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்துகொள்ளும் தாழ்மை யாருக்கு வரும்?
பெருமையும், மேட்டிமையும் அதிகரிக்கும் உலகமிது. முகங்குப்புற விழுந்து சாகப்போகும் சந்ததி அதிகமாகும் காலமிது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்களே! அதுதான் எவ்வளவு படித்திருந்தாலும் வேதத்தை அறிந்திருந்தாலும் நொடிப் பொழுதில் மேலிருந்து குப்புற விழுந்து போகிறார்களே! நிதானியுங்கள். உலகப் பெருமையோடு ஒட்டிக்கொள்ளாதீர்கள். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள். வெற்றி காண்பீர்கள்.
யோசுவாவிற்கு முதலில் குழப்பம்தான் இருந்தது. வந்திருப்பது யார்? இவர் யார் பக்கம்? யெகோவாவின் குரலைக் கேட்டிருக்கிறான். இயேசுவின் குரலைக் கேட்டதில்லை போலும். அவரை மனித உருவில் சந்தித்ததுமில்லை. ஆனால் அவருடைய இரண்டு வார்த்தையான பதிலில் அவன் சுதாரித்துக் கொண்டான்.
மனித உருவில் இயேசு வந்து 2020 ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் உணர்வடையாத ஒரு மாபெரும் கிறிஸ்தவக் கூட்டம் அடுத்த கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது !
இயேசு பிறந்ததை, மேசியா வந்ததை அறியாமல் சுதாரிப்படையாமல் அழுகையின் சுவரில் முட்டி முட்டி அழுது கொண்டிருக்கிறார்களே. இவர்களுக்கு வெற்றி எங்கேயிருந்து வரும்? கொஞ்சம் யோசியுங்கள்.

ஆண்டவர் சொன்ன ஆலோசனை என்ன? அமைதியாய்க் காத்திருந்து ஆற்றலோடு செயல்படு. எத்தனை நாட்கள்? ஆறு நாட்கள். ஏழாம் நாள் முழுமையாய் ஆர்ப்பரிப்போடு செயல்படு. உள்ளப்பூர்வமான ஒருமன ஆர்ப்பரிப்பு எப்போது வெளிப்படும்? கர்த்தருக்குக் காத்திருந்தால்தான் வெளிப்படும்.
இப்போது என்ன நடக்கிறது என்பதை வெளியே கொஞ்சம் எட்டிப் பாருங்கள். வெளியுலகக் கிறிஸ்தவர்கள் வாரத்தின் மற்ற ஆறு நாட்களும் கோபம், கசப்புணர்வு, எரிச்சல், வீண் வைராக்கியம், சுயநலத்தன்மை இவற்றோடு ஆர்ப்பரித்துவிட்டு, ஏழாம் நாள் அல்லது புதிய ஏற்பாட்டு ஆராதனையின் நாளான வாரத்தின் முதலாம் நாள் ஆலயத்திற்கு வந்து அமைதியாகிவிடுகிறார்கள். ஊழியரின் ஆர்ப்பரிப்புச் சத்தம் தான் அதிகமாகிறது. ஜெயம் கிடைக்கிறதா? ஆராதனைதான் முடிந்தது! ஆர்ப்பரிப்புத்தான் முடிந்தது! எரிகோ எங்கே விழுந்தது?
உணர்ச்சிப்பூர்வமான வெற்று ஆர்ப்பரிப்பு. எரிகோ கோட்டை இடிந்து விழுவது எப்படி? அந்த மாபெரும் அலங்கம் தூள் தூளாவது எப்படி?

இந்தக் காலத்து மக்களின் ஆர்ப்பரிப்பை வைத்துக்கொண்டு ஏழு எழுபதுதரம் எரிகோவைச் சுற்றிவந்தாலும் ஒரு இன்ச் கூட நகராது. எரிகோ கோட்டை விழாது. காரணம்? ஒருமனதிற்காக ஆறுநாள் அமைதியாய் அந்த மக்கள் காத்திருந்து ஏழாம் நாள் ஆர்ப்பரித்தார்கள்.
இப்போது உள்ளவர்கள் ஆலயத்திற்கு வெளியே சண்டை போட்டுவிட்டு உள்ளே வந்தவுடன் ஒருமனமாய் ஜெபிக்கிறோம் ஒன்று சேர்ந்து பாடுகிறோம் என்கிறார்கள். சிலர் ஆலயத்திற்குள்ளேயே அதிலும் ஆராதனை வேளையிலேயே செல்போனில் (SMS) சண்டை போட்டுக்கொண்டே ஆராதிக்கிறார்கள். ஒருமனமாய் எல்லாரும் சேர்ந்து அல்லேலூயா சொல்லுவோம் என்று சொன்னவுடன், உடனே அல்லேலூயாவும் சொல்லுகிறார்கள். என்ன இது?
சண்டையையும், ஜெபத்தையும் ஒரே நேரத்தில் செய்து, காலத்தை மிச்சப்படுத்துகிறவர்களை என்ன சொல்லுவது? இருந்துவிட்டுப் போகட்டும்.
தளபதி வருகிறார். சந்திக்க ஆயத்தம் தானா? ராணுவத்திற்கும் போருக்கும் சம்பந்தமில்லாத தளபதிகளை, சத்துவமில்லாத தளபதிகளை இன்றைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் இவ்வுலகில் வரப்போகிற தளபதி இயேசு உங்களை சேர்ந்தவர். யோசுவா சந்தித்த தளபதி இயேசு இன்றும் உயிரோடிருக்கிறார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் அவர் ஒருவரே.
உங்களுக்கு நேரிடும் எதிர்ப்புகளை இயேசுவாகிய அந்த மகிமையான தளபதியோடு சந்தியுங்கள். வெற்றி நிச்சயம். ஆர்ப்பரியுங்கள். கர்த்தர் வருகிறார்.