“மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனை எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். வேதத்திற்கு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் இதுவே ஆகும். அவர் அப்புத்தகத்தை எப்படி, எங்கு, எவ்வாறு எழுதினார் என்ற தகவலை அறிந்தோமானால் ஆச்சரியமாக இருக்கும். அவரது வாழ்க்கைக் குறிப்புகள் நம் கிறிஸ்துவ வாழ்விற்கும் அதிக பிரயோஜனமாக இருக்கும். இங்கிலாந்தில் கிறிஸ்தவர் அல்லாத குடும்பத்தில் பிறந்த இவர், தனது சிறு வயதில் இருந்தே தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களை பழுதுபார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பள்ளிப் படிப்பைக்கூட பாதியிலேயே விட வேண்டியதாயிற்று. இளம்பிராயத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார். நிம்மதியற்ற ஜாண் பனியன் தனது பதினாறாவது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். ஒருமுறை அரசின் ஆணைப்படி போருக்குச் செல்ல உத்தரவிப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் அனுப்பப்பட்டார். அந்த நபர் போரின் முதல்நாளிலேயே போரில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி அவரை சிந்திக்க வைத்தது. மயிரிழையில் உயிர் தப்பினது ஏனோ? என்று யோசித்து நல்லவனாக வாழ விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் வீடு திரும்பினார்.
19வது வயதில் ஒரு கிறிஸ்துவ பெண்ணை மணமுடித்தார். மனைவி அடிக்கடி கிறிஸ்துவை பற்றி கூறியும் அவர் ஆண்டவரை ஏற்க மனமற்றவராக இருந்தார். இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரம் பழுதுபார்க்க வந்த மூன்று பெண்கள் இயேசுவைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்ததை கேட்டு தன்னை முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்தார். அவர் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட கொஞ்ச நாட்களிலேயே அவரது மனைவி இறந்து போனார். தனது வாழ்வை முற்றிலும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அவருக்காக தன்னால் இயன்றதை செய்ய முன்வந்தார். ரிப்பேர் பார்க்கும் வீடுகளில் தனது தொழிலை செய்து கொண்டே இயேசுவைப்பற்றி அறிவிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் இங்கிலாந்தில் போதகர் தவிர மற்ற யாரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் வேதத்திலுள்ள “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்ற வசனத்திற்கு கீழ்ப்படிவது உத்தமம் என உணர்ந்து சுவிசேஷத்தை தைரியமாய் பிரசங்கித்தார். ஆகவே சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அவர் நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். “இனி சுவிசேஷம் அறிவிக்க மாட்டேன் என்று கூறினால் விடுதலை” என்றார் நீதிபதி. அப்படி உறுதியளிக்க பனியன் முன்வரவில்லை. உடனே நீதிபதி 3 மாதம் சிறை தண்டனை என அறிவித்தார். மறுநிமிடமே இன்று நான் விடுவிக்கப்படாமல் தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன் என்றார். அதனால் 3 மாத சிறைத்தண்டனையை 12 வருடங்களாக நீட்டிக்கப்பட்டது. அந்த சிறிய அறையில் 50 பேருடன் தங்க வேண்டியதாயிருந்தது. மங்கலான வெளிச்சம், துஷ்டர்கள், சுகாதாரமற்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில்தான் பனியன் “மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை எழுதினார். சற்று யோசித்துப்பாருங்கள் 50 பேரின் பேச்சு, சத்தம், தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்லி அடிக்க வரும் துஷ்டர்கள் மத்தியில் ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் பிறப்பிலே கிறிஸ்தவர் அல்ல, படித்தவர் அல்ல, அவருக்கு தெரிந்தது ஓட்டை விழுந்த பாத்திரத்தை ஈயம் கொண்டு அடைப்பது மட்டுமே. தேவன் இவரது சாமர்த்தியத்தை பார்க்கவில்லை; மாறாக அவரின் அர்ப்பணத்தை பார்த்தார். நாற்றமெடுக்கும் அறையில் உலகிற்கே மணம்வீசும் “மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை எழுதினார்.
தேவன் உங்களுக்கு கொடுத்த சிறிய பொறுப்பை நிறைவேற்ற இன்று உங்களுக்கு எத்தனை சௌகரியங்கள் உண்டு? அத்தனை பாடுகள், அசௌகரியங்கள் மத்தியிலும் உலகமே போற்றத்தக்கது ஒரு புத்தகத்தை ஒரு ஜான் பனியனில் எழுத முடியுமென்றால், உங்களால் எத்தனை காரியங்களை தேவனுக்காக செய்ய முடியும்!