தானியம் தின்ன
பறவைகள் தரைக்கு வருது

அதுகளுக்கு
லாக் டவுன் இல்ல

மூளையை நிரப்பிக் கொள்ள
பள்ளிக்கூடத்துக்குப் போன பிள்ளைக

மூலையில முடங்கி கெடக்குது
வலைதள வலையில் சிக்கித் தவிக்குது

வருங்கால தலைமுறையை
நெனெச்சா நெஞ்சு கணக்குது

லாக் டவுனுக்கு முன்னால
பாஸ்டரு சொன்னாரு
ஏசாயா 54 ஐ படிச்சுப்பாருன்னு

ஏலே வேதமாணிக்கம்
அந்த பைபிளை எடுடா
எல்லாத்தையும் அமத்திப்போட்டுட்டு
அக்காவை வரச்சொல்லு

பதினொண்ணு – லேருந்து
சத்தமா வாசி மகனே

சிறுமைப்பட்டவளே,
பெருங்காற்றில் அடிபட்டவளே,

தேற்றரவற்றவளே,
இதோ, நான் உன் கல்லுகளைப்
பிரகாசிக்கும்படி வைத்து,

நீலரத்தினங்களை
உன் அஸ்திபாரமாக்கி,

உன் பலகணிகளைப் பளிங்கும்,
உன் வாசல்களை
மாணிக்கக் கற்களும்,
உன் மதில்களையெல்லாம்
உச்சிதமான கற்களுமாக்குவேன்.

உன் பிள்ளைகளெல்லாரும்
கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்;

உன் பிள்ளைகளுடைய சமாதானம்
பெரிதாயிருக்கும்.

நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்;
கொடுமைக்குத் தூரமாவாய்;
பயமில்லாதிருப்பாய்,
திகிலுக்குத் தூரமாவாய்,
அது உன்னை அணுகுவதில்லை
.

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்;

அப்படி போடு
இப்படியெல்லாம்
TV நியூஸ்ல சொல்லமாட்டீங்கிறாங்களேடா?

டிவி’ ய பாத்து பாத்து
ஒங்கப்பா ஓரமா சோந்துபோய்
படுத்தே கெடக்காரு

அவருகிட்ட போயி
அவரு காது கேக்கிறமாறி
சத்தமா வாசிடா

அவரு படுத்துட்டா அவ்வளவுதான்டா
எழுப்பிவிடுடா வேதமாணிக்கம்

உனக்கு புண்ணியமா போகும்

சந்தடிகளுக்கு ஊடே ஒரு சாமானிய
பெண்ணின் சத்தம்

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14