அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு
அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்

(மத்தேயு 2:2) 

விண்மீன்களைக் கண்டு
வியந்து ரசிக்காத மனிதர் இல்லை.
ரைம் சொல்லும் நர்சரிக்
குழந்தைகள் முதல்
கவிபாடும் கவிஞர்கள் வரை
எட்ட இருக்கும் நட்சத்திரத்தைப்
பற்றித்தான் வர்ணனை.


அறிவியலாருக்கு
அன்றும் இன்றும் என்றும்
அவைகளைப் பற்றி ஆய்வுதான்.

சித்திரம் வரைவோர்
வெறும் வானத்தையா
வரைகிறார்கள்?
 

வானத்தை வரைந்தால்
விண்மீன்கள்தான் நிரம்பியிருக்கும்.

வானத்தை வம்புக்கு இழுத்து
விண்மீன்களோடு விளையாடாத
கவிஞர் யாரேனும் உண்டா?


வானமும் பூமியும்
ஒழிந்துபோகும்வரை,
விண்ணும் மண்ணும் உள்ளவரை,
விண்மீன்கள்
உலகமெங்கும் கொட்டமடித்து,
நாசா(NASA)வை வட்டமடித்து,


எங்களை எண்ணிவிட முடியுமா?
அல்லது

தொட்டுவிடத்தான் முடியுமா? என்று
கேள்விக் கணைகளைத்
தொடுத்துக் கொண்டிருக்கின்றன.


ஆண்டவர் ஆபிரகாமுக்கு
என்ன சொன்னார்?


அண்ணாந்து வானத்தைப் பார்,
நான் படைத்த நட்சத்திரங்களை
எண்ணக்கூடுமா?
என்று கேட்டார் (ஆதி.15:5).

ஆபிரகாமுக்குக்
கர்த்தர் தந்த ஆசீர்வாதம்
எங்கே தொடங்குகிறது பாருங்கள்! 

எத்தனைக் கோடி  விண்மீன்களோ
யார் அறிவார்?

நாசாவின் கணக்கெடுப்பெல்லாம்
ஒரு கண்துடைப்புத்தான்.
படைத்தவருக்குத்தான்
அவைகளின் இலக்கம் தெரியும்.
அவருக்குத்தான் அவைகளின்
அசைவுகள் புரியும்.


அவர் நட்சத்திரங்களின்
இலக்கத்தை எண்ணி,
அவைகளுக்கெல்லாம்
பெயரிட்டு அழைக்கிறார் என்று
சங்கீதக்காரன் ஒரு
தகவலைத் தருகிறார்
(சங்கீதம் 147:4).

அவருடைய நட்சத்திரத்தை
ஞானிகள் கண்டார்கள்.
பின்தொடர்ந்தார்கள்.
இயேசு இருக்கும் இடம்வரை
அந்த  நட்சத்திரம்
அவர்களை வழிநடத்தியது

(மத்தேயு 2:9)

அது சரி.

அவருடைய நட்சத்திரம்
இப்போது எங்கே
நிலைகொண்டிருக்கிறது?


இன்றும் இருக்கிறதா?

இத்தனை விண்மீன்கள்
வானவெளியில் இருக்கும்போது
அவரது விண்மீன் மட்டும்
அழிந்தா போய்விடும்?


இல்லை. இல்லை.

வான வெளியில்
அதைத் தேடுகிறீர்களா?
அது அங்கேயும் இல்லை.


மண்ணுக்கு வந்த அந்த விண்மீன்
இங்கேயே தங்கிவிட்டது.

அப்படியானால்
இங்கே தேடுவது எளிதல்லவா?
ஆமாம்.
மிகவும் எளிதுதான்.


ஆண்டவர் இயேசுவை போலவே,
மண்ணின் மைந்தர்களுக்காக
அனைவரது
உள்ளங்களிலும் இடம்பெற

அந்த நட்சத்திரமும்
வெடித்துச் சிதறியது.
அதனால் கோடிக்கணக்கான
நட்சத்திரங்களாக பெருகியது
.

எல்லாம் அவருடைய
நட்சத்திரம்தான்.


அவைகளில் நீயும் நானும்
வழிநடத்தும் நட்சத்திரம்தான்.

அவருடைய நட்சத்திரம்
செய்த வேலையை
நீ செய்கிறாயா?

கிறிஸ்துமஸ் பண்டிகை
வந்துவிட்டால்
எங்கும் எதிலும்
நட்சத்திரக் கூட்டம்தான்.


நட்சத்திர ஹோட்டல்களிலும்
(FIVE STAR HOTELS)
நம்ம கூட்டம்தான்!


அவருடைய நட்சத்திரமே,
உன்னைப் பார்த்து ஒரு கேள்வி;

நீ
கவர்ச்சியான,
கலரான கண்ணைப் பறிக்கும் ஒளியில்
கடையில் அல்லவோ வாங்கி
அலங்காரமாக கட்டி
அழகுபார்க்கிறாய்


அல்லது
வீட்டில் ஒரு மூலையில்
ஒதுங்கி ஒளிந்து
மங்கி மழுங்கிப்போன
பழைய நட்சத்திரத்தை
தூசிதட்டி
எடுத்துக்கட்டி

உன் சாமர்த்தியத்தைக்
காட்டுகிறாயே.

நீ சாமர்த்தியசாலிதான்.

அவருடைய நட்சத்திரம் ஞானிகளை
வழிதப்பவிடாமல் பொறுப்பாக
இயேசு இருக்கும் இடம் வரைக்கும்
கொண்டுவந்து சேர்த்தது.


மீண்டும் உன்னைப்
பார்த்துக் கேட்கிறேன்,


நீ எத்தனை பேரை
இயேசுவிடம் வழிநடத்தி வந்திருக்கிறாய்?


வானத்து விண்மீன்கள்
அளவில் மிகப்
பிரமாண்டமாய் இருக்குமாம்.
சூரியனைக் காட்டிலும்
மிகப் பெரியவைகள்
அநேகம் உண்டாம்.


பிரகாசமும்
அப்படித்தானாம்.

ஆனால் என்னவோ
சூரியன் தான் பகலில்
நம்மை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.


தன் ஒளி பூமியை
இதுவரை எட்டிப்பிடிக்காத
விண்மீன்களும்
விண்னில் வலம் வருகின்றனவாம்.


இயேசுவை அறிவிக்கிற
நட்சத்திரத்தை
தேவன் சாதாரணமாகவா
படைத்திருப்பார்?

உன்னை உண்டாக்கினதே
பிரமிக்கத்தக்க
அதிசயமாமே!
(சங்கீதம் 139:14)

வாய்விட்டுச் சிரிக்கும் ஜீவராசி
மனிதனைத் தவிர
வேறு ஏதேனும் உண்டா?


அவருடைய நட்சத்திரம்
அவர் பணி செய்ய
எங்கேயிருந்து புறப்பட்டதோ?
எவ்வளவு தூரம்
பயணப்பட்டதோ?
யார் அறிவார்?

அவர் படைக்கும்போது
எவ்வளவு பிரமாண்டமாய்
இருந்திருக்கும்?


தன் பிரமாண்டத்தையும்
பிரகாசத்தையும்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து


பூமிக்குப் பங்கம் வராமல்
மனிதருக்கு கேடு வராமல்
இப்பிரபஞ்சத்தில்
இயேசுவுக்கு முன்பாக
தன்னைத் தாழ்த்தி


அகல் விளக்கு அளவிற்குத் தன்னைச்
சிறுமைப்படுத்தி
இயேசு இருந்த வீட்டின் மேல்
வந்து நின்று
ஞானியருக்கு துணை செய்தது.


இதுவும் ஆச்சரியம்தான்.

அவருடைய நட்(சத்திரம்)
ஊர்ந்து நகர்ந்துவந்து நின்ற இடம்
சத்திரம் இருந்த வீதியின்மேலே.


அவருடைய நட்சத்திரத்தின் பணி
சத்திரம் வரை வந்து

வெற்றியுடன் முடிந்தது.

இப்போது
உன் பணி சத்திரத்திலிருந்து
அதாவது

சபையிலிருந்து தொடங்குகிறது.

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து
எரிகோவுக்குப் போகையில்
கள்ளர் கையில்
அகப்பட்டு காயப்படுத்தப்பட்டு
குற்றுயிராகக் கிடந்தானே! 
அவனைக் கண்ட
சாமானியனான சமாரியன் செய்த
ஊழியத்தை
அவருடைய நட்சத்திரமாகிய  நீ செய்.

காயமடைந்து உயிருக்குப்
போராடிய மனிதனை
தன் வாகனத்தில் சுமந்து சென்று
சத்திரத்தில் சேர்த்து
அன்பையும் பண்பையும்
அத்துடன்
இரண்டு பணத்தையும் கொடுத்து
பராமரிக்கச் சொல்லிச் சென்றதை
மறந்துபோனாயோ?


அவருடைய நட்சத்திரமே….

அவருடைய அன்பையும் பண்பையும்
அவர் தந்த பணத்தையும்
அவருக்காகப் பயன்படுத்தி
சத்திரத்தை நிரப்பிவிடு.
சபையை நிரப்பிவிடு.
பெதஸ்தா குளத்தை கலக்கிவிடு
.
அற்புதம் நடக்கட்டும். 

இந்நாட்களில் உனக்காக மட்டும்  
பிரகாசிக்காமல்  உன் வெளிச்சம்  
எல்லையைக் கடந்து  2022 -க்குள்ளும்
தியாக தீபமாய் நுழையட்டும்.


அவருடைய நட்சத்திரமாகிய நீ
பூமிக்கு உப்பென்றும்
உலகத்திற்கு வெளிச்சமென்றும்
அவர் சொன்னாரே
.

உனக்காக மரிக்கத்தான்
மரியின் வயிற்றிலிருந்து பிறந்தார்.

மற்றபடி
மட்டன் பிரியாணியைக் கிண்டி
சாப்பிட்டு ஊரைச் சுற்றி நடந்துவிட்டு
பண்டிகையை ஆசாரித்துவிட்டு  
சிரித்து மகிழ அல்ல
என்பதை நினைவில் கொள்.


உப்பு சப்புமின்றி
உணர்வற்று கிடக்கும்

வாழ்க்கையை
சட்டென்று நிறுத்தி
சத்தியத்திற்குக்

கீழ்படிந்துவிடு.

இயேசு போகிற  வழிகளிலெல்லாம் 
இயேசுவை அறிவிக்கிற
இடங்களிலெல்லாம்
ஜனங்களை வழிநடத்திச் செல்ல
நீ ஆயத்தம்தானா?

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின்
ஒளியைப்போலவும்

அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்
நட்சத்திரங்களை போலவும்
என்றென்றைக்குமுள்ள
சதாகாலங்களிலும்
பிரகாசிப்பார்கள்

(தானியேல் 12:3)

ஆம். நீயும் நானும்
நீதிக்குட்படுத்துகிற
நட்சத்திரங்களாம்.


புதிய சிந்தனைகளுடன்
புதிய வருடத்திற்குள்
பிரவேசிக்க ஆயத்தப்படு. 
பாஸ்டர் S. விக்டர் ஜெயபால் (1939 – 01.03.2021)
**************************************

தொகுப்பு : பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,
இயக்குநர் – இலக்கிய துறை
TCN MEDIA