
தந்திரமாய் அல்ல
மந்திரமாயும் அல்ல
போராடிப் பெற்றோம்
அதுவும் நள்ளிரவில்
விடிந்ததா? அல்லது
பிரச்சனைகள்தான்
முடிந்ததா? என்று
சக மனிதனைக்
கேட்டால்,
திருடனுக்கு தேள்
கொட்டினதுபோல்
திரு திருவென்று
பே முழி
முழிக்கிறான்
எல்லாவற்றுக்கும்
Pay பண்ணி Pay பண்ணி
இப்போ முழி மட்டும்தான்
இருக்குதுடா என்கிறான்
ஓ, இதுக்குப் பேர்தான்
பே முழியா?
ஏதாச்சும் பேசுடா
என்றால்,
எதுவும் சொல்ல
சுதந்திரம்
இல்லையடா
என்கிறான்
என்னத்தைச்
சொல்ல!
எவரும் எவருக்கும்
அடிமை இல்லை
என்பதெல்லாம்
மேடைப்
பேச்சுக்கு உதவும்
ஆனால்
வேலைக்கு ஆகாது
நதிகளெல்லாம்
சேர்ந்திடும் இறுதியாக
கடலிலே என்கிறார்கள்
நதிகளுக்கு
சாதிகள் இல்லை – ஆனால்
சதிகள் உண்டு.
சில நேரங்களில்
எங்கள் வீதிகளுக்கும்
வீடுகளுக்குள்ளும் விசிட்
பண்ணிவிட்டுப் போகும்
என்னவென்று கேட்டால்,
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட
நிதிகளுக்கு
சதிகள்
செய்யப்பட்டதால்,
நாங்கள் கரையைக் கடந்து
உங்களைக் காண
வந்திருக்கிறோம்
என்கிறது!
என்னத்தைச்
சொல்ல!
நாம் பெற்றதுக்குப் பேர்
சுதந்திரம்!
ஆனால்
சிறப்பான சுதந்திரம்
என்று ஒன்று உண்டு
அது எங்கே கிடைக்கும்?
தாவீது ராஜா சொல்லுகிறார்
நேர்த்தியான இடங்களில்
எனக்குப் பங்கு கிடைத்தது
ஆம், சிறப்பான சுதந்திரம்
எனக்கு உண்டு. (சங்கீதம் 16:6)
அந்த சிறப்பான சுதந்திரம்
உங்களுக்கு உண்டா?
மார்த்தாளுக்கு
இயேசுவின் பாதத்தில்
பங்கு கிடைக்கவில்லை
அதனால்
சிறப்பான சுதந்திரமும்
கைநழுவிப் போனது
மரியாளுக்கோ
கர்த்தர் என் சுதந்திரமும்
என் பாத்திரத்தின்
பங்குமானவர்;
என் சுதந்திரத்தை தேவரீர்
காப்பாற்றுகிறீர்
என்று சொல்ல சுதந்திரம்
கிடைத்தது.
மார்த்தாளுக்கு
அடுப்பினடியிலிருந்து
விடுதலை கிடைக்கவில்லை
ஏன்?
அவள் விடுதலை பெற
சம்மதியாமல்
கவலைக்குள்ளாகி
இயேசுவையே
கவலைகொள்ள அழைக்கும்
அளவுக்கு
அடுப்பு புகையில்
மூழ்கிவிட்டாள்
இயேசு பக்கத்தில்தான்
அமர்ந்திருக்கிறார்
அவர் பாதத்தின் அருகில்
உடன்பிறந்த சகோதரி
மரியாள் அமர்ந்திருக்கிறாள்
ஆனால்
ஒரே குடும்பத்தில்
தங்கைக்கு கிடைத்த
சுதந்திரம்
அக்காவுக்குக்
கிடைக்கவில்லை
(லூக்கா 10:41,42)
இதுவும்
மாயையும் மனதுக்கு
சஞ்சலமுமாய்
இருக்கிறது என்று
சாலமோன் ஞானி
உயிரோடிருந்திருந்தால்
எழுதியிருப்பார்
ஆறாயிரம் பிசாசுகளின்
பிடியிலிருந்து
கதரேன் நாட்டு
கல்லறையின்
மடியிலிருந்து
விடுதலைபெற்ற
கதரேன் நாட்டு
கல்லறை மனிதனுக்கு
இயேசு கொடுத்தது
புது வஸ்திரம் மட்டுமல்ல
புதிய சுதந்திரம்
கொடுத்தார்
(லூக்கா 8:35)
அந்தப் பகுதியில் இருந்த
பத்துப் பட்டணங்களுக்கு
(தெக்கப்போலி)
அவனை மிஷனரியாக
ஏற்படுத்திவிட்டுப்
போனார்.
பதினெட்டு ஆண்டுகளாக
கூனியாய் இருந்த
அந்த அம்மாவை
அடிமைபடுத்திவைத்திருந்த
அந்த பலவீனப்படுத்தும்
ஆவியை இயேசு
அன்றைய தினம் துரத்தி
ஆபிரகாமின்
குமாரத்தியான
அவளை
விடுதலையாக்கினார்
இந்த விடுதலைக்குப்
பெயர், சுதந்திரம்
(லூக்கா 13:12,13)
அவள் தலையை
பதினெட்டு
ஆண்டுகளுக்குப் பின்
இயேசு
நிமிர்த்திவிட்டார்
உனது கூனியான நிலவரம்
இன்னும் கலவரமாய்
இருக்கிறதா? அல்லது
தலை நிமிர்த்தப்பட்டுள்ளதா?
உன்னை விடுவிக்க
உன் தலையை உயர்த்த
உன்னை சுதந்திரவாளியாக்க
இயேசுவால் முடியும்
இதுபோல
இன்னும் ஏராளமான
மக்கள் விடுதலைக் காற்றை
சுவாசித்ததைப் பற்றி
சுதந்திரமடைந்ததைப் பற்றி
பரிசுத்த வேதாகமம்
பக்கங்கள்தோறும்
பறைசாற்றுகிறதை
பார்த்த ஞாபகம்
உங்களுக்கு உண்டா?
கர்த்தர் உங்கள்
சுதந்திரமாகட்டும்
அவரே உங்கள்
பாத்திரத்தின்
பங்காகட்டும்
உங்கள் சுதந்திரத்தை
அவரே காப்பாற்றட்டும்
நேர்த்தியான இடங்களில்
உங்களுக்கு பங்குகள்
கிடைக்கட்டும்!
(தயவுசெய்து இதைப்
பங்குச் சந்தையோடு
சம்பந்தப்படுத்திவிடாதீர்கள்)
சிறப்பான சுதந்திரம்
உங்களுக்கு
உண்டாகட்டும்
வந்தே மாதரம்
என்று
சொல்லவைத்தவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்.

இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
91-77080 73718