
ஜெபத்தில்
அவன் ஒரு புலிதான்
நிஜத்திலும்
அவன் ஒரு புலிதான்
இயற்கையை
தன் இஷ்டப்படி
இசையப் பண்ணியவன்
“இந்த வருஷங்களிலே
பனியும் மழையும்,
பெய்யாது” என்று
ஆணையாகச்
சவால் விட்ட
காட்டுப் புலி!
இராஜாவாகிய
ஆகாபின் இதயத்தை
இடம் மாறித்
துடிக்க வைத்தவன்
இரதத்தின் வேகத்தை
முறியடித்து
ஆகாய விமானம்போல
ஆகாபுக்கு முந்தி ஓடியவன்
வார்த்தையினால்
வானத்தைப் பூட்டி சாவியை
வைத்துக்கொண்டவன்
மூன்றரை
ஆண்டுகளுக்குப் பின்
பஞ்சம்
தலைவிரித்தாடியபோது
கருத்தாய் ஜெபித்து
கார்மேகங்களை
திரளாய் பெருகப்பண்ணி
பெருமழையை
பெய்யப்பண்ணியவன்
இந்த எலியா!
Yah,
எலியா
ஓர் புலிதான்!
கர்த்தருக்கு முன்பாக
அசையாமல் நின்று
ஏழு அற்புதங்களை
அரங்கேற்றியவன்
நாட்டின்
பொருளாதாரத்தையே
நடுங்க வைத்தவன்
பலியை இந்த
ஜெபப் புலி
தண்ணீரால் நனைத்து
கர்த்தருக்கு காரியத்தை
கடினமாக்கியது
ஆனாலும்
ஈரமான விறகுகளின்மேல்
அக்கினி இறங்கியது
பலியை பட்சித்தது
கர்த்தரே தெய்வம்
என்பவர்களின்
கரகோஷம்
விண்னைப் பிளந்தது
இன்றைய தேவை
கர்த்தருக்கு முன்பாக நிற்கிற
எலியாக்களே!
(1 இராஜாக்கள் 17:1)
கர்மேல் பர்வதத்தை
கதறப் பண்ணும்
எலியாக்களே!
(1 இராஜாக்கள் 18:38)
திஸ்பி என்றால்
மனந்திரும்பச் செய்பவர்
என்று பொருள்
இஸ்ரவேல் ஜாதியில்
எலியா ஒரு விசித்திரமான
பக்தியுள்ளவன்
தேவனுடைய
பிரசன்னத்திலேயே
வாழ்ந்தவன்
தேவ சமூகத்தில் நின்று
தேசத்தின் அருவருப்புகளுக்காக
நொந்து, வெந்து வேதனைப்பட்டு
ஒரு புயலாக உருவாகி
அரியணையை அசைக்கும்படி
திடீரென்று ஆகாப் ராஜாவின்
முன் தோன்றியவன்
தைரியமாக அரசருக்கு எதிராக
தீர்க்கதரிசனம் உரைத்த
உள்ளூர் புலி
(1 இராஜாக்கள் 18:18)
தனது காலத்திற்குப் பின்
தனது பணியைத் தொடர
தேவன் கூறிய நபரைத்
தெரிந்தெடுத்து
ஊழியத்திற்காகப்
பழக்குவித்த
பண்பாட்டுப் புலி
தன்னைவிட
தான் அபிஷேகித்த
சாப்பாத்தின் குமாரன் எலிசா,
அதிகமாக
அற்புத ஊழியம்
செய்யப்போவதை அறிந்தும்
அலட்டிக்கொள்ளாத
அமைதி புலி
உயிரோடு பரலோகத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட
இரண்டாவது நபர் எலியா.
முதலாவது நபர் ஏனோக்கு.
இவன் தேவனோடு நடந்து, நடந்து
அப்படியே கடந்து போனவன்
ஏனோ?
ஏனோக்கு
மறுரூப மலைக்கு
மோசேயோடு வரவில்லை!
மறுரூப மலைக்கு
மோசேயோடு இறங்கிவந்து
இயேசுவோடு
எலியா பேசியதை
மத்தேயு பதிவுசெய்து
வைத்துள்ளார்
(மத்தேயு 17 : 3)
மாற்கு இதை
மார்க் பண்ணி
வைத்துள்ளார்
(மாற்கு 9:4)
எலியா நம்மைப் போல
பாடுள்ள மனிதன்தான்
அவனைப் போல ஜெபிக்கும்
மனிதனாய் நாமில்லையே!
என்ற ஏக்கம்
நமக்கில்லையே!
எலியா கேட்டது
பரலோகக்குரல்
கண்டது பரம தரிசனம்
ருசித்தது தேவ வல்லமையை
எடைபோட்டது எதிரியை
துணைகொண்டது தேவனை
கர்த்தரின் நாள் வருமுன்னே
எலியா தீர்க்கதரிசியை
அனுப்புவேனென்று
மல்கியா மூலம் தீர்க்கதரிசனம்
உரைக்கப்பட்டுள்ளது
(மல்கியா 4:5)
எலியாவைப் போல
புலியாக எழும்பி
இந்த புவியில்
ஜெபித்து
காட்டுவோம்!
ஜெயித்தும்
காட்டுவோம்!

கர்த்தரின் எழுத்தாணி
இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
நல்லாசான் (மலேசியா)
If you are touched by this poetic article, please send me a word;
[email protected] / 91-77080 73718 (WhatsApp)