புதிய ஏற்பாட்டில் ஆசாரியத்துவ/வாரிசு ஊழியம் இல்லையா?

புதிய ஏற்பாட்டில் ஆசாரியத்துவ/வாரிசு ஊழியம் இல்லையா?

இன்று ஊழியர்கள் தாங்கள் செய்து வந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய தங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்கு கொண்டு வந்தால், அது சரி இல்லை என்றும், அது வேதத்திற்கு புறம்பானது என்று தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து கொண்டு, தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற கண்ணோட்டத்தில், பிறருக்கு புரியும் தன்மை இல்லை என்று பொத்தாம் பொதுவாக எழுதி சத்தியத்தை மாற்றி எழுதுகிற கூட்டம் இன்று பெருகி கொண்டே வருகிறது.

ஏன் இவர்கள் இப்படி கொச்சை படுத்தி எழுத வேண்டும்?

இவர்கள் ஏதாவது காரியங்களில் ஊழிய குடும்பங்களில் உள்ள தீமையான காரியத்தை மட்டும் கண்டு விரக்தியில் இப்படி எழுதி கொண்டு இருக்கலாம். அல்லது ஊழியரோடு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமாக கூட இருக்கலாம். தீமையை பார்த்தவர்கள் நன்மையான காரியத்தை அறிய முற்படும் எண்ணம் கூட இல்லாமல் போய் விட்டது தான் இங்கு சாப கேடு.

தங்களது திறமைகளை ஊழியர்கள் பயன்படுத்த வில்லை, தங்களை பயன்படுத்தவில்லை, எங்களை பயன்படுத்தினால் நாங்கள் பெரிய ஆள் ஆக மாறி விடுவோம் என்று போதகர் பயப்படுகிறார் என்கிற ஒரு விதாண்டாவாத பேச்சு. சபை திறமையை வளர்க்கும் இடம் என்று தவறாக புரிந்து கொண்டதினால் வந்த வினை. சபை அழைக்கப் பட்டவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களின் கூட்டம் என்பதை மறந்து விட்டார்கள்.

ஊழியர்களின் வளர்ச்சி, மரியாதை பெறும் நிலை, பெறும் ஆசீர்வாதங்கள் போன்றவற்றின் மேல் கண் வைத்து பொறாமை எருச்சல் அடைந்து வசைபாடும் கூட்டத்தினர்.

நோகாமல் தங்கள் அதிகாரம், பணம் புகழ் கொண்டு சபையை அபகரிக்க திட்டம் போட்டு, தாங்கள் விசுவாசியாக ஆராதிக்கும் சபையிலே போதகராக முற்பட்டு, சொந்த போதகரை குறை சொல்லி, அவமானப்படுத்தி பின்னர் தோற்று போனவர்களின் கதறல் தான் இந்த வாரிசு ஊழியம் என்று.

அப்படி என்றால் இந்த காலத்தில் இந்த ஊழியம் கர்த்தரால் அங்கீகரிக்க படுகிறதா? வேதத்தின் அடிப்படையில் தியானிப்போம்.

A. புதிய ஏற்பாட்டு வாரிசு ஊழியம் அழைப்பு மற்றும் தெரிந்து கொள்ளுதலின் அடிபடையில் வருவது.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சீடர்களை தெரிந்து கொண்டு அவர்களை நண்பர்களாக, சகோதரர்களாக கருதி பின் நாட்களில் தமது ஆவிக்குரிய வாரிசுகளாக அறிவித்து அதிகாரம் கொடுத்து போனார். ஆனால் இயேசு கிறிஸ்து பரமீறி போன பிற்பாடு இயேசு கிறிஸ்துவின் தாயும் சகோதரர்களும் அந்த மேல் வீட்டரையில் பரிசுத்த ஆவியானவருக்கு காத்து இருந்த கூட்டத்தில் இருந்தனர் என்று அறியப்படுகிறது. பின்னர் இயேசு கிறிஸ்துவின் குடும்பத்தில் பிறந்த சொந்த சகோதரன் யாக்கோபு எருசலேம் சபையின் பிஷப் ஆக செயல் பட்டு இருக்கிறார். பிலிப்பிவின் குமாரத்திகள் அனைவரும் தீர்க்கதரிசிகள் என்று அறியப்படுகின்றனர். பவுல் திமோத்தியு, தீத்து போன்றவர்களை தனது ஊழிய வாரிசாக ஏற்படுத்தி இருக்கின்றார். எனவே ஒரு போதகருக்கு பின்னர் ஊழியம் செய்ய தனக்கு பின், தனது ஊழியத்தை நிறைவேற்ற அழைப்பின் அடிப்படையிலோ, சொந்த மகனையே அல்லது அவரால் அழைப்பை உறுதி செய்து உருவாக்க பட்ட ஒருவரை ஊழிய ஒழுங்குகள் அடிப்படையில் நியமிப்பது எந்த விதத்திலும் தவறு அல்ல. ஆனால் ஒரு விசுவாசி தீடிரென்று தனது திறமை, வரத்தின் அடிப்படையில் உணர்ச்சிவசபட்டு தான் இருக்கும் சபையிலே சபை போதகாராக இருக்க தான் அழைக்க பட்டு இருக்கிறார் என்றால் அது அபத்தம் ஆனது. அப்படி அழைப்பு உண்டு என்று சொல்கிறவர்கள் மாம்சத்தோடு போராடுவதில்லை, மாறாக தங்கள் அழைப்பு நிறைவேற பொறுமையோடு இருந்து தேவ சித்தத்தை நிறைவேற்றுவார்கள். ஒருவர் தேவ சித்தத்தில் பொறுமையோடு இருந்தால் அவரை யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

B. புதிய ஏற்பாட்டில் வாரிசு ஊழியம் அதிக நீதியின், கிருபையின் அடிப்படையில் வருவது.

பழைய ஏற்பாட்டில் ஒரு கோத்திரம் மட்டும் தங்கள் வரிசையின்படி ஆசரித்துவ ஊழியம் செய்தார்கள். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் சீடர்களாக மாறி சிதறி இருந்த அனைவரையும் முழு குடும்பங்களாக, முழு நேர ஊழியங்கள் செய்ய, பேதுரு, நீங்கள் தான் இராஜரீக ஆசாரியர்கள் என்று சொல்லி பல கண்டங்களில் சிதறி கிடந்த சீசர்களை ஊக்கப்படுத்தி குடும்பம் குடும்பமாக கிறிஸ்துவின் புண்ணியங்களை அறிவிக்க அதாவது ஊழியம் செய்ய அழைக்கிறார். அப்படி என்றால் புதிய ஏற்பாட்டில், இரச்சிப்பின் அழைப்பை பெற்ற அனைவரும் குடும்பம் குடும்பமாக முழு நேர ஊழியர்களாக அதாவது தெரிந்து கொள்ளுதலில் வளர்ந்து, அவரது புண்ணியங்களை பிலிப்பின் குடும்பத்தை போன்று ஆங்காங்கு மிஷனரிகள் போல போய் அறிவிக்க வேண்டும் என்பது தான் தேவ சித்தம். ஆனால் நாம் இன்று முழு நேர ஊழியத்தை செய்ய விருப்பம் இன்றி ஒரு சாதாரண விசுவாசியாக ஒரே சபையில் பத்து முப்பது வருடம் இருந்து கொண்டு நாங்கள் தான் எல்லாம் என்று இரண்டு எஜமாங்களுக்கு ஊழியம் செய்ய முற்பட்டு இறுதியில் தோற்று போய் விடுகிறோம். ஒரு விசுவாசி, விசுவாசி என்கிற நிலையில் இருந்து சீசன் என்கிற நிலைக்கு வந்து முழு நேர அழைப்பில் வர வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அதிக நீதியை நிறைவேற்ற போதக குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் தொடர்ந்து ஊழியத்தில் தாங்கள் பெற்ற அழைப்பில் பாடு பட முயர்ச்சித்தால் உடனே அப்படி இப்படி என்று கதை கட்டி அவமானம் செய்து விடுகின்றனர். வேலைக்காரர்கள் எழும்ப ஜெபிக்க வேண்டிய நாம் ஊழியத்திற்கு வருகிறவர்களை கூட பழி சொல்லி துரத்தி விடுகிறோம்.

C. புதிய ஏற்பாட்டு வாரிசு ஊழியம் அதிக கனத்திற்கு உரியது.

இயேசு கிறிஸ்து சொன்னார் ஒருவன் என்னை கனம் பண்ணினால், பிதாவானவர் அவனை கனம் பண்ணுவார். மல்கியாவின் புஸ்தகத்தில் தகப்பன் தனக்கு ஊழியம் செய்யும் மகனை கடாட்ச்சிப்பது போல கர்த்தர் தமக்கு ஊழியம் செய்பவரை கடாட்ச்சிப்பேன் என்று சொல்கிறார். அதே ஊழியத்தை ஏற்படுத்த தான் எலியாவின் ஆவியை கொண்ட யோவான் ஸ்னாபகன் தகப்பனின் ஆவியையும் பிள்ளைகளின் ஆவியையும் திரும்ப சேர்க்கிற ஊழியத்தை செய்தார். அப்படி என்றால் தகப்பனும் பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து தொடர் ஊழியத்தை செய்ய வேண்டியது தேவ சித்தம். பிதாவின் சித்தத்தை குமாரனாகிய இயேசு கிறிஸ்து செய்தது போல, சொந்த ஊழிய குடும்பத்தில் ஒருவர் ஊழியம் செய்ய விருப்பம் கொண்டாலே அது தேவ சித்தம். ஏனெனில் தேவ சித்தத்தின் படி கர்த்தர் அவனவனுக்கு விருப்பத்தை கொடுக்கிரார் என்று வசனம் நமக்கு போதிக்கிறது. ஏலி, மற்றும் சாமுவேல் வீட்டு சங்கதிகள் அன்றி, ஊழிய பிள்ளைகள் ஊழியத்தை செய்ய விருப்பம் கொள்ள வேண்டும். அதற்காக ஜெபிக்க வேண்டும். விருப்பத்தை கொடுக்கிறவர் கர்த்தரே. அந்த விருப்பத்தை கெடுக்க யார் என்ன செய்தாலும், அதை கர்த்தர் பார்த்து கொள்வார். இன்று போதகர், போதகர் மனைவி மற்றும் பிள்ளைகள் ஊழியத்தில் இருந்தால் குற்றம், குற்றம் என்று குற்றம் கண்டு பிடித்து, அவதூறு செய்து, அவர்களை விகர்பமாக பார்த்து, ஏளனமாக பார்த்து, விமர்சனங்கள் செய்வதால் அநேக ஊழிய பிள்ளைகள் ஊழியத்தேயே வெறுத்து விடுகின்றனர். ஏன்? ஊழியர்களே தாங்கள் அடைந்த அவமானம், பாடுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிள்ளைகள் ஊழியம் செய்வதை தடுத்து விடுகிறார்கள். பிள்ளைகளை தடுக்காதீர்கள்! விசுவாசிகளே உங்கள் போதகர்களின் பிள்ளைகள் ஊழியத்தில் வராமல் இருப்பதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருக்காதீர்கள். மாறாக அவர்களை ஊக்கப்படுத்தி ஊழிய விருப்பம் கொள்ள வையுங்கள்.உங்கள் பிள்ளைகளுக்கு அதினால் நன்மை வந்து சேரும்.

D. புதிய ஏற்பாட்டு வாரிசு ஊழியம் பிரதிபலனுக்கு அடித்த விசயம்.

ஒருவன் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தால் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பிரதிபலன் கிடைக்கும் என்று எழுத பட்டுள்ளது. அப்படி என்றால் பிள்ளைகளின் அப்பம் பிள்ளைகளுக்கு தான். ஊழியத்திலும் அது சாத்தியம் தான். தலை முறை தலை முறையாக பலன் கொடுக்கும் தேவன் ஊழியர்களின் பிள்ளைகளை மட்டும் ஊழியத்தில் இருந்து துரத்தி விடுவாரோ? பிரபல எழுப்புதல் பிரசங்கியார் எட்வர்ட் யோனத்தான் (1703-1758) அவர்கள் குடும்பம் தொடர்ச்சியாக ஊழியத்தில் இருந்து செயல் பட்டதினால் தலை முறை தலைமுறையாக அவரது குடும்பத்தில் ஊழியர்களுக்கும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் கல்விமான்களுக்கும் குறைவில்லை என்று அவரது குடும்ப வருசையை 2017 இல் ஆராச்சி செய்த Dr ஜெர்மி M Kimble குறிப்பிடுகிறார். ஒருவர் ஊழியத்தில் பட்ட பாடுகள், அவமானங்கள், பரியாசங்கள், நிந்தைகள், பிரயாசங்கள் ஒருபோதும் வீண் போகாது. தலை முறை தலை முறையாக கர்த்தர் அந்த பிரயாசத்தின் பலனை இம்மையிலும் மறுமையிலும் அறுவடை செய்ய வைப்பார்.

எனவே இனியாவது ஊழியத்தில் பாடு அனுபவித்து கிறிஸ்துவில் பாடுபட்டு ஊழியம் செய்த ஒரு ஊழியரின் பிள்ளைகள் அனைவருமோ அல்லது மகனோ, மகளோ, அல்லது மருமகனோ ஊழியத்தில் வந்தால் உற்சாகம் செய்யுங்கள், திடபடுத்துங்கள், கைகொடுங்கள், விருப்பத்தை அங்கீகாரம் செய்யுங்கள். அதை விட்டு அபிசேகம் இல்லாதவன், கிருபை இல்லாதவன், பண கொழுப்பு, சின்ன பையன், ஒன்றும் தெரியாது, என்று மட்டம் தட்டி ஊழியத்தை விட்டு விரட்டி தள்ளி விடாதிருங்கள். இயேசு கிறிஸ்து 12 பேரை அழைத்து இருந்தாலும் அவர்களை உருவாக்கின விதத்தை மற்றும் Timothy Titus போன்றவர்கள் உருவான விதத்தையும் வேதம் புரட்டி படியுங்கள். இயேசு கிறிஸ்து சமுதாயத்தில் தோற்று போனவர்களை எடுத்து தான் உருவாக்கி தகுதி படுத்தினார். உங்கள் போதகற்களால் நன்மை பெற்று விட்டு அவர்கள் பிள்ளைகள் என்று வரும் போது மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையில் பார்ப்பதை விட்டு விட்டு உங்கள் போதகர் பிள்ளைகளை ஊழியத்தில் ஊக்குவியுங்கள் ஏனெனில் இன்னும் வேலையாட்கள் தேவை! அறுவடை மிகுதி!

ஒருவரை மட்டம் தட்டி, அற்பமாக பேசி, அவதூறு செய்து, நீங்கள் பாடுபடாத இடத்தில் உங்களை சார்ந்த ஒருவரை ஏற்படுத்த உங்கள் போதகரையே காட்டி கொடுத்து, போராட்டம் செய்து, உங்கள் போதகரின் பிள்ளைகளின் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் அற்பமாக எண்ணி உங்களுக்கு ஏன் நீங்கள் கெடுதல் செய்ய வேண்டும்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

செலின்