தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபு

ஆதியாகமம் 31 ம் அதிகாரம்.

யாக்கோபு ஒரு தந்திரசாலி. தகப்பனிடம் பொய் சொல்லி, ஏமாற்றி, சகோதரனை வஞ்சித்து ஆசீர்வாதத்தை பெறுகிறான். ஆனால் இந்த யாக்கோபை கர்த்தர் ஆசீர்வதித்ததற்கு சில காரியங்களை தியானிப்போம்.

1. யாக்கோபு வனாந்திரத்திலே 20 வருடங்களாய் ஆடுகளை மேய்க்கிறான். வனாந்திரம் என்பது வறட்சியான இடம். பகலிலே வெயிலும், இரவிலே குளிரும் என்னை பட்சித்தது. நித்திரை என் கண்களுக்கு தூரமாயிருந்தது. இவ்விதமாய் பாடுபட்டேன் என்கிறான். ஆதியாகமம் 31:40
ஆம், ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிற நாம் பாடுபட்டு, தியாகத்துடன் ஆடுகளை மேய்க்கிறோமா? என்னிடம் ஆடு இல்லையே! நான் மேய்ப்பன் அல்லவே, என் பாஸ்டர் தானே மேய்ப்பர் என சிந்திக்கிறோமா? இல்லை. கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய வனாந்திரமாகிய இந்த உலக வாழ்க்கையிலும் தந்திருக்கிற கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், பெற்றோர், மாமனார், மாமியார், ஏன் குடும்பத்தினர் அனைவருமே கர்த்தர் நம் கரத்தில் தந்த ஆடுகளே. நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் யாவரும், நம் வீட்டிற்கு வரும் யாவரும் ஆடுகளே. யாக்கோபை போல பாடுகளை சகித்து இந்த ஆடுகளை மேய்க்கிறோமா? அதற்காக ஜெபிக்கிறோமா?

2. இந்த ஆடுகளை மேயவிட்டு, கிணறண்டை நடத்தி, கல்லை புரட்டி தண்ணீர் கொடுக்கிறான். கல்லை புரட்டுவது கடினம் தான். இன்று நாமும் கிறிஸ்துவாகிய, வசனமாகிய ஜீவதண்ணீரண்டை பிரயாசப்பட்டு ஆடுகளை நடத்த வேண்டும்.

3. நான் உன்னோடிருப்பேன் என்ற கர்த்தரின் வாக்குதத்தத்தோடு, பொருத்தனையோடு ஆடுகளை மேய்த்ததால் ஒரு ஆடுகளும் சினையழியவில்லை. ஆம், யாக்கோபை போல நாமும் ஜெபத்தோடு, தரிசனத்தோடு, பொருத்தனையோடு ஆடுகளை, நம் ஆத்துமாக்களை , பின்மாறிவிடாத படி வழிநடத்த வேண்டும்.

4. ஓநாய்கள் பீறாதபடி ஆடுகளுக்காக அவன் உத்தரவாதம் பண்ணினான்.ஆதி 31:39. நாமும் நம் ஆடுகளாகிய ஆத்துமாக்களை, சத்துருவாகிய, ஓநாயாகிய பிசாசு பீறிவிடாதபடி உத்தரவாத ஜெபத்தால், உபவாசத்தால் காவல் பண்ண வேண்டும்.

5.ஆடுகளை தேவ தரிசனத்தோடு பலுகி பெருக செய்தான். மரக்கொப்பை வெட்டி, பட்டையை உரித்து, ஆடுகள் கண்களுக்கு எதிரே போட்டு தண்ணீர் கொடுத்தான். இந்த பட்டை உரிக்கப்பட்ட கொப்பு, நமக்காக யாவும் உரிக்கப்பட்ட, தியாகமாய் துறந்த கிறிஸ்துவே. ஆம், நாமும் வசனமாகிய ஜீவதண்ணீரை கிறிஸ்துவாகிய பட்டை உரிக்கப்பட்ட கொப்பை நோக்கி கொடுக்கும் போது ஆத்துமாக்கள், ஆடுகள் பலுகி பெருகும்.

6. மட்டுமல்ல, தேவனே லாபானுடைய ஆடுகளை எடுத்து, தரிசனத்தில் ஆலோசனை கொடுத்து யாக்கோபிற்கு கொடுத்தார். ஆதி31:7-9. ஏனெனில் லாபான் யாக்கோபை வஞ்சித்து 10 முறை அவன் சம்பளத்தை மாற்றினான். நாமும் பிறரை வஞ்சிக்காத படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்த்தர் நம்மை எவ்வளவு கவனிக்கிறார் பாருங்கள்.

7. கோலும் கையுமாக சென்ற யாக்கோபு 2 பரிவாரங்களோடு, திரளான ஆடுகளோடு தன் தகப்பன் தேசத்திற்கு, கர்த்தருடைய ஆசீர்வாதத்தோடு செல்கிறான்.ஆம், நாமும் கூட தனிமையாக, வெறுமையாக இந்த வனாந்திர உலகில் வந்தோம். ஆனால், நாம் நம்முடைய பரம தேசமாகிய பரலோகத்திற்கு, பரம பிதாவண்டைக்கு செல்லும் போது, வெறுங்கையோடு செல்லாதபடி, திரளான ஆத்துமாக்களோடு சென்று, உன்னதத்தின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு திருஷ்டாந்தமாக எழுதப்பட்ட இந்த யாக்கோபின் ஆசீர்வாதத்தை இதை வாசிக்கிற அனவரும் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம். யாக்கோபை போல எங்களையும் ஆசீர்வதியும். ஆமேன். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn.