
நேபுகாத்தின்… நேச்சர்!
பாஸ்டர் S. விக்டர் ஜெயபால்

மனிதனின் சுபாவங்களைப் பற்றிக் கூறும்போது, ‘இது அவனது இயற்கை குணம் அல்லது அவனது நேச்சர் … கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லுவார்கள். இந்த சுபாவம் அவனோடு ஓட்டிப் பிறந்தது. மாற்றிக்கொள்ள முடியாத சுபாவம் என்பதற்கு, NATURE என்ற வார்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
இலகுவில் மாற்றிக்கொள்ள இயலாத குணம் இருக்குமானால், அதற்கு இயற்கையை வலுவாய் இழுத்து அதன்மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது மனிதனின் மாறாத இயல்பாக மாறிவிட்டது. வளரும்போதும், வளர்ந்த பின்னும் கூடவே வளர்ந்துவரும் சுபாவங்களும் சூழ்நிலையைப் பொறுத்து அவற்றோடு ஒட்டி கொள்கின்றன. நல்ல சுபாவங்களாக இருந்தால் நாடு போற்றும். நாமும் போற்றுவோம். தீய குணங்களாக இருந்தால் இவற்றை மாற்றுவது யார்?
போர்க்குணம் படைத்த தெய்வம்!
கி.மு.625-ல் பாபிலோனிய ராஜா ஒருவன் இருந்தான். அவன் பெயர் நேபுகாத்நேச்சார். அந்த ராஜ பரம்பரைக்கான குலதெய்வத்தின் பெயரைச் சுமந்து கொண்டிருந்தான். நேபோ என்றால் நேச்சர் NATURE (குணம்) என்று அர்த்தமாம். போர்க் குணம் படைத்த தெய்வம் என்று அதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டாம். ராணுவப் பாசறைகளே அவன் விரும்பித் தங்கும் வீடு என்று சொன்னால் அது மிகையாகாது. அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்கு பைத்தியமும் இருக்கிறது என்று பெயருக்கு விளக்கம் கொடுத்த அபிகாயிலை உங்களுக்கு தெரியுமா? (1 சாமுவேல் 25:25). அது போல பெயருக்கேற்றபடி நேபுகாத்நேச்சார் வாழ்ந்திருக்கிறான்.
அவனுடைய போர்க்குணம், மாறாத ஒன்றாக மாறிப்போயிருந்தது. தொடக்க காலத்தில் அவன் செய்த போர் எல்லாம் வெற்றியாய் இருந்தது. எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றியைக் குவித்து, வெற்றிக் கொடியேற்றிக் கொண்டிருந்தான்.
நேபுகாத்நேச்சார் மிகவும் சாமர்த்தியசாலி. ராஜதந்திரமே அவனது ராஜரீக மந்திரம். மிகவும் திறமை படைத்தவன். அதே வேளையில், மிகவும் தந்திரமாய் செயல்படுபவன். கடும் கோபக்காரன். மகா பெருமைக்காரன். அவனோடு ஒட்டிக்கொண்டு பிறந்த குணத்திற்குப் பெயர் என்ன தெரியுமா? அதாவது அவன் நேச்சர் (NATURE) என்ன தெரியுமா? அகந்தை! கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக்குடி என்பார்களே. கந்தையைக் கசக்கிக் கட்டிவிடலாம். ஆனால் அகந்தையை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் அகந்தை என்பது கசக்கி மறுபடியும் கட்டுவதற்கு அது ஒரு கச்சை அல்ல! (அ) கந்தையை பரிசுத்த ஆவியானவர் தமது அக்கினியால் சுட்டெரிக்க விட்டுக்கொடுக்கவேண்டும்
“அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது…” (தானியேல் 5:20) என்று வாசிக்கிறோம். “BUT WHEN HIS HERT WAS LIFTED UP AND HIS MIND AND SPIRIT WERE HARDENED..’‘ (DANIEL 5:20). இஸ்ரவேல் ஜனம் தேவனால் அழைக்கப்பட்டு மேன்மையைப் பெற்றுக்கொண்ட ஜனம். அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து, சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் ஆண்டவர் அவர்களுக்குத் தந்தார். ஆனால் அவர்களுடைய பழைய சுபாவத்தால், அப்போதைக்கப்போது HARRICANE புயலாய் எழும்பி அவர்களை ஆண்டருடைய வழிகளிலிருந்து பின்வாங்கச் செய்தன.
கர்த்தருக்கு முற்றிலுமாய் தங்களை ஒப்புக்கொடுக்காததால் ஒரு காலக் கட்டத்தில் இந்த போர்க்குணம் கொண்ட அரசனிடம் ஆண்டவர் அவர்களை ஒப்புக்கொடுத்தார். அவன் தந்த நெருக்கத்தினிமித்தம் தாங்கள் விடுவிக்கப் படும்படியாய், ஆண்டவரைத் தேடவும், தேவன் மேல் வைராக்கியம் வைக்கவும் அவரையே ஆராதிக்கவும் எழும்பினார்கள். நெருப்புக்கு விலங்குபோட விரும்பியவன்!அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்தான் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுமாவார். இவர்கள் நேபுகாத்தின் நேச்சர்- ஐ எதிர்த்துச் சவாலாக விளங்கினார்கள். காரணம், நேபுகாத்தின் இயற்கை குணத்திற்கு சிறிதளவும் அவர்கள் ஒத்துப் போகவில்லை. இந்த மூன்று வாலிபரின், ஆவியின் நெருப்பு ஏழு மடங்கு அக்கினிச் சூளையைவிடப் பெரியது என்பதை நேபுகாத்நேச்சார் ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை.
நெருப்புக்கு விலங்குபோட விரும்பியவன் நேபுகாத்நேச்சார். அது முடியுமா? அவனது மதிப்பீடுகள் மாறிப்போயின. கர்த்தரின் குறுக்கீடு அவனை அடியோடு சாய்த்துவிட்டது.
மாட்டுக்கு யார் குடை பிடிப்பது?
நேபுகாத்நேச்சாரின் குணம் மிருக குணமாக இருந்ததால் ஆண்டவர் அவனது இயற்கை குணம் மாற, அவனை இயற்கைக்கே அனுப்பிவைத்தார். அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. ராஜாவுக்கு குடை பிடுத்து, கூஜா தூக்கியவெனெல்லாம் காணோம். மாட்டுக்கு யார் குடை பிடிப்பது? அவன் மாடுகளை போல புல்லை மேய்ந்தான். அவன் சுபாவத்தினாலேயே அவனைத் தண்டித்த ஆண்டவர்,அவனது இயற்கை சுபாவத்தை மாற்ற விரும்பினார்.
மனித மனம் மாறுவதைத் தேவ மனம் விரும்புகிறது. அழித்துப் போடுவதை விட அவனை மாற்றிப்போட்டு, மறுபடியும் அரியணையில் ஏற்றிப் பார்க்க நினைத்த தேவனின் இதயத்தை நேபுகாத்நேச்சார் புரிந்துகொண்டான். எப்போது? அவன் தன் கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்த போது!
MINI PRAISE AND WORSHIP!
மண்ணின் பாவ சுபாவம் மாற விண்ணை நோக்கினான். கண் திறக்கப்பட்ட பிலேயாமைப் போல உன்னதமான தேவனைப் புகழ்ந்து பாடினான் . அதை முழு உலகிற்கும் பறைசாற்றினான்.
உன்னதமானவரை ஸ்தோத்தரித்தான். என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுதின்னான். இதுதான் அவன் ஏறெடுத்து MINI PRAISE AND WORSHIP.
கடைசியாக, அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதியும் வைத்திருக்கிறான் (தானியேல் 4:34-37).
ஒரே வரியில் இன்றைய உலகிற்கு அன்றைக்கே சுவிசேஷம் சொன்னவன் நேபுகாத் நேச்சார். உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது என்று நேபுகாத்நேச்சார் சொல்லுகிறான் (தானியேல் 4:2)
உங்களுக்கு நன்மையாய்த் தெரிவது எது ? மனிதனின் அகந்தை, அதிகாரம், ஆணவம், மேட்டிமை, இறுமாப்பு, இவைகள் நீறுபூத்த நெருப்பாக உள்ளத்துள் உறைந்து கிடக்கின்றன. எந்த மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. பாவ மனிதனின் இயற்கைக் குணம் இது. இவற்றையும் எடுத்து தூர்வாரி ஏறியக் கூடியவர் ஒருவர் உண்டு. அவரையே நோக்கிப் பாருங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தமே பாவ மனிதனின் பயங்கர சுபாவத்தைப் போக்கி, நம்மை கழுவிச் சுத்திகரிக்க முடியும். உன் பாவமுள்ள இயற்கை சுபாவம் மாறும்!
ஒரு நேபுகாத்தினுடைய நேச்சர் மாறும்போது உன் NATURE மாறாதா?
(தொகுத்து வழங்குபவர்: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ், ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14)