கர்த்தருக்குள் புதுவாழ்வு: ஏவாளின் கண்களின் இச்சையினால் ஏற்பட்ட தீமையைப் பற்றி பார்ப்போமா?
தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்து, ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கும் படியாகவும் வைத்தார். அவர்கள் ‘தோட்டத்திலுள்ள நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்’ என்று கட்டளையிட்டார். (ஆதி:2:17).
சாத்தானாகிய சர்ப்பம் ஏவாளிடம்: சகல விருட்சத்தின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஏவாள் அதற்கு பதிலாக, ‘தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைப் புசிக்கவும் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்’ என்றாள். சர்ப்பம்: ‘நீங்கள் அதை சாப்பிட்டால் சாக மாட்டீர்கள்; உங்கள் கண்கள் திறக்கப் பட்டு நன்மை தீமை அறிந்து நீங்கள் தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றது’. ஏவாள் அந்த கனி புசிப்புக்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும் புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள் அவனும் புசித்தான். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தி இலைகளைத் தைத்து அரைக் கச்சையாக்கி உடுத்திக் கொண்டார்கள்.

பகலில் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகின்ற கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, ‘நீ எங்கே இருக்கிறாய்?’ என்று கேட்டதற்கு, ஆதாம்: தான் நிர்வாணியாயிருப்பதால் ஒளித்துக் கொண்டதை சொன்ன போது, ‘நான் விலக்கின கனியைப் புசித்தாயோ’ என்று கர்த்தர் கேட்டதற்கு, நீர் எனக்கு கொடுத்த பெண் எனக்குக் கொடுத்தாள்; நான் புசித்தேன் என்றான். ஏவாள்: ‘சர்ப்பம் என்னை வஞ்சித்தது’ என்றாள். தேவன் மூவரையும் சபித்தார். பூமி சபிக்கப்பட்டது. இருவரும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். (ஆதி.3ஆம் அதிகாரம்).

பிரியமானவர்களே, கண்களின் இச்சையில் விழுந்து போகாமல் காக்கப்பட வாஞ்சியுங்கள். ஜெபியுங்கள். கர்த்தர் உதவி செய்வார். ஆமென்.