
வாழ்க்கை என்பது தொடரோட்டம்… வித்யா’வின் விண் பார்வை

மனிதனைக் காலமும்
காலத்தை மனிதனும்
துரத்திக்கொண்டோடுகிற
தொடரோட்டமாக வாழ்க்கை
மாறிவிட்டதை மறுக்க முடியாது.
நாயும் பேயும் நோயும்
மனிதனைத் துரத்துகிறது
இதற்கிடையில்
மனிதன் அவசர அவசரமாக
அறிவாளியாகிவிட ஆசைப்பட்டு
மணல்மேல்
வீடுகட்டிக்கொண்டிருக்கிறான்
அவனது இதயத்தில்
இலட்சியங்களுக்கு இடமில்லை
இரட்சிப்புக்கும் இடமில்லை
அவனது வாழ்க்கையில் உள்ள
வழக்குகள் விசாரிக்கப்படாமலும்
பாவங்கள் கழுவப்படாமலும் உள்ளது
அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு
அக்கறை இல்லை
உயிருள்ளவரை உலகத்தை
விரும்பியபடியெல்லாம் அனுபவித்தே
ஆகவேண்டும் என்பது அவனுக்குள்
எரிந்துகொண்டிருக்கும்
அணையாவிளக்கைப் போல்
இருக்கிறது.
திரைகடல் ஓடி திரவியம் தேடி
அதன்பின்பு
நாடித்துடிப்பு குறையும்போது
தேவனை நாடி வருகிறான்
அவனது வாழ்க்கையில் அத்தனையுமே
தப்புக்கணக்கு ஆகிவிடுகிறது.
தடுமாறிக்கொண்டே
விடைதெரியாமலேயே
விடியலைத்தேடி
தொடர்ந்து நடைபோடுகிறான்
தவறான பாதையில்
மெதுவாய் போனால் என்ன?
வேகமாய்ப் போனால் என்ன?
நமது பயணம் விசுவாசப் பயணம்
விசுவாசக் கொடியசைத்து
துவக்கி வைத்தவர் இயேசு
(எபிரெயர் 12:1)
நம்மோடுகூட வே வருகிறார்.
நாம் போகும் வழியை
அவர் அறிவார்
அழுக்கடைந்த சமுதாயத்தில்
வேதவசன வெளிச்சத்தில்
ஆரோக்கியமான வசனங்களை
(தீத்து 1:9 / 2:1) பிடித்துக்கொண்டு
ஆர்ப்பாட்டமில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கிறோம்
துர்உபதேசம் என்னும்
நோய் கொண்டவர்கள்
வழியெங்கும் ஓரங்களில்
படுத்துக்கிடந்தாலும்
பாதை மாறாமல் பயணிக்கிறோம்
அறிவுகெட்டாத அன்பை
அறிந்துகொண்ட நமக்கு
அவரது அன்பையும்
(எபேசியர் 3:19)
அபிஷேகத்தையும்
அற்புத வல்லமையையும்
விளங்கிக்கொள்ளாதவர்களை
விளங்கிக்கொள்ளமுடியவில்லை
இதற்காக நேரத்தை வீணடிக்க
விரும்பவில்லை
மேகம்போன்ற சாட்சிகள் நம்மை
சூழ்ந்திருக்கும்போது
சோகம் நிறைந்த முகத்துடன்
சாரமிழந்த உப்பைப்போல்
இருக்கப்போவதில்லை
நம்பிக்கையற்ற
மற்றவர்களைப் போல
துக்கித்து இராமல்
துதித்து சாத்தானை மிதித்து
ஜெயமெடுக்கப்போகிறோம்
(1 தெசலோனிக்கேயர் :4:11)
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள்
திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி,
சீயோனுக்கு (சபைக்கு)
வரப்போகிறார்கள்
நித்திய மகிழ்ச்சி
அவர்கள் தலையின்
மேலிருக்கப்போகிறது
சந்தோஷமும் மகிழ்ச்சியும்
அடைவார்கள்;
கொரோனாவும்
கொள்ளைநோயும் ஓடிப்போம்.
(ஏசாயா 35:10)
தடைகளை நீக்கிப்போடுகிறவர்
நமக்கு முன்னே போகிறார் (மீகா 2:13).
ஜெயங்கொடுக்கிற தேவனை நோக்கி
ஜெயகீதங்கள் பாடிப் பயணமாவோம்
Our God is a King
So we should Sing
வெற்றி நமக்கே.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள், மதுரை 14