
சிறு தியானம்
“ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள்” (ஆதி 16:2)
ஆபிரகாமை நோக்கி, ஆகாரைக் குறித்து சாராள் சொன்ன வார்த்தைதான் இது. நமது வாழ்க்கையோ, ஊழியமோ மனிதர்களால் கட்டப்படும் அல்லது உயர்த்தப்படும் என்று நாம் எதிர்பார்த்தால், அது தேவ சித்தத்திற்கு எதிரானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஒருவேளை தேவனுடைய சித்தத்திற்கு மாறாக, மனிதர்களை சார்ந்துக் கொண்டு நாம் செய்கின்ற காரியங்கள் ஜெயம் பெற்றதுபோல காணப்பட்டாலும், முடிவிலே வேதனைகளே நம்மை உருவ குத்திக் கொண்டிருக்கும் என்பதே நிச்சயம்.
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” (சங் 127:1)
சாராளின் தவறான முடிவுகளால் அவள் சந்தித்தவைகள்???
1.குடும்பத்தில் பிரச்சனை.. (ஆதி 16:5)
ஆகாரால் தன் வீடு கட்டப்படும் என்று எண்ணினாள் சாராள். ஆனால் இப்போதோ
வீடு பிளவுபடும் சூழ்நிலை.
“அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்” (ஆதி 16:5)
தேவ சித்தத்திற்கு எதிராக ஆதாமும் ஏவாளும் செயல்பட்டபோது, “என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” என்று சென்ன அதே ஆதாம், “தேவரீர் தந்த ஸ்தீரி” என சொல்லும் நிலை வரவில்லையோ? (ஆதி 2:23,3:12)
தேவனை சார்ந்துக் கொள்ளாமல், சாராள் ஆகாரையும், ஏவாள் சர்ப்பத்தையும் சார்ந்துக் கொண்டதினால் குடும்பத்தில் பிரச்சனைகள். கர்த்தரும் கர்த்தருடைய வார்த்தையும் நமது வாழ்வில் முதலிடம் பெறட்டும்.
2.சுபாவத்திலே பிரச்சனை. (ஆதி 16:5,6)
ஆபிரகாமோடு சண்டை பண்ணுகிறவளாகவும், ஆகாரைக் கடினமாய் நடத்துகிறவளாகவும் மாறிப்போனாள் இந்த சாராள். “சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்” (ஆதி 16:6 வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைச் செடியாக நிற்க வேண்டிய இந்த சாராள், காயப்படுத்தும் முட்செடியாக நிற்கிறாள்.
சாராள் தான் சார்ந்துக் கொண்டவைகளினால், தன் சுபாவத்தை இழந்து நிற்கிறாள். நேசரை சார்ந்துக் கொண்டால், நாம் முள்ளுகளுக்குள்ளே இருந்தாலும், லீலி புஷ்பமாக விளங்கிடுவோம். (உன் 2:2)
காயப்படுத்தியே பழக்கப்பட்டவனையும், காயங்களை ஆற்றுகிறவனாக மாற்றும் வல்லமையை உடையது, கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷம்.(அப் 16:33) ஆனால் ஈட்டியை ஏந்திக் கொண்டு, தாவீதை கொலை செய்யத் துடிக்கும் சவுல்களே இன்றைக்கு அதிகமாய் பெருகி வருகின்றார்கள். (1சாமு 18:11)
3.உலகத்திற்கும் பிரச்சனை. (ஆதி 16:12)
ஆபிரகாம் சாராள் வழியாக பூமியை ஆசீர்வதிக்கும் சந்ததியை தர வேண்டும் என்பதே தேவ நோக்கம். ஆனால் சாராளின் அவசரமானது, இந்நாள் வரைக்கும் உலகத்தில் வேதனையை தந்துள்ளது. “அவன் துஷ்ட மனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்” (ஆதி 16:12) உலகத்திற்கு நாமே வெளிச்சம். (மத் 5:14)
உலகத்திற்கு நாமே இயேசுவுக்கு சாட்சிகள். (அப் 1:8) உலகத்தை நாமே இயேசுவுக்காக கலக்க வேண்டியவர்கள். (அப் 17:6) சாரமுள்ள உப்பாயிருப்போம். உலகை ஆசீர்வதிப்போம். (மத் 5:13) தேவ நோக்கத்தைப் புரிந்துக் கொண்டு, தேவனை சார்ந்துக் கொண்டால், நம் வழியாக பூமி ஆசீர்வதிக்கப்படும்..
“சாராள் சற்று தடுமாறினாலும்,
சாராளுக்கு வாக்குத் தந்த தேவன் மாறிப்போகவில்லை,
சாராளை மறந்தும் போகவில்லை”
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் பிள்ளை பெற்றாள். (எபி 11:11)
Pastor. Reegan Gomez
பாஸ்டர். ரீகன் கோமஸ்