மெய்ஞ்ஞானபுரம், Meignanapuram, Tuticorin District, Tamil nadu,India

1830 வருடம் நெடுவிளை கிராமத்தில் கோவில் பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது ஜெர்மனியை சேர்ந்த கனம் C.T.E. ரேனியஸ் (1790-1838) மிஷனரி மருந்துவ உதவி செய்து உயிரை காப்பாற்றினார். இதனை அறிந்த மற்றவர்களும் ரேனியஸ் ஐயரின் சுவிசேஷகத்தால் பாவ, சாப, கட்டுகளிலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் விடுவிக்கப்பட்டு, நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டவர்களாய் மொத்த கிராமமும் இரட்சிக்கபட்டு கிறிஸ்தவ கிராமமாக மாறியது. இதனால் ரேனியஸ் ஐயர் நெடுவிளை கிராமத்தின் பெயரை மெஞ்ஞானபுரம் என்று மாற்றினார், மெஞ்ஞானபுரம் என்றால் “Place of True Wisdom” “உண்மையான ஞானத்தின் இடம்” என்று பொருள்படும்.

மெஞ்ஞானபுரத்தின் தந்தை கனம் ஜாண் தாமஸ் (1808-1870 ) அவர்கள் மெஞ்ஞானபுரத்திற்கு 1837 ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் நாள் இங்கிலாந்தில் ( வேல்ஸ் ) இருந்து நற்செய்திபணி அறிவிக்க வந்து சேர்ந்தார். ஜாண் தாமஸ் அவர்களின் மனைவி மேரி டேவிசும் கணவனும் மனைவியாக மெஞ்ஞானபுரத்தின் சுற்று வட்டாரங்களில் பல கிராமங்களுக்கு நடந்துசென்றே நற்செய்தி பணியை செய்தார்கள். மெஞ்ஞானபுரத்தில் ஜான் தாமஸ் அவரது மனைவியும் ஆண் மற்றும் பெண் பாட சாலையையும் ஏற்படுத்தினர்.1841 இல் எலியட் டக்ஸ்போர்ட் பெண்கள் பள்ளியும், 1844 இல்,ஆண்களுக்கான உறைவிடப் பள்ளியும் நிறுவினர். இக்கல்வி கூடத்தில் பயின்ற மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினர்

கனம் ஜாண் தாமஸ் அவர்கள் , அநேகர் கிறிஸ்தவர்களாக மாறியதால் ஆண்டவரை ஆராதிப்பதற்கு ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாதமையால் புதிய ஆலயம் கட்ட 1844 ம் ஆண்டு ஜுன் மாதம் 20 ம் நாள் அஸ்திபாரம் போட்டு 1847 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு கனம் ஜான் தாமஸ் ஐயர்வர்களால் தூய பவுலின் ஆலயம் பிரதிஷ்டை செய்யபட்டது. ஆலயத்தின் உபயோகத்திற்காக பெரிய ஆலய மணி இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலமாய் கொண்டு வரபட்டு ஆலயத்தில் பொருத்தபட்டது. இந்த ஆலயத்தின் மணியோசை இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும் திறன் கொண்டதாய் இருந்தது.இவ்வாலயம் 192 அடி உயர கோபுரத்தை உடையதால் இதற்கு “ONE RUPEE CHURCH” “ஒரு ரூபாய் தேவாலயம்” என்ற பெயரும் உண்டு ஏனெனில் முற்காலத்தில் ஒரு ரூபாய் மதிப்பு 192 பைசாவாக இருந்தது.

33 ஆண்டுகளாக ஓயாமல் உழைத்து, மெஞ்ஞானபுரத்திற்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தன் வாழ்க்கையை அர்பணித்த ஜாண் தாமஸ் ஐயர் அவர்கள் தன்னுடைய 62 ம் வயதில் 1870 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ம் நாள் பிற்பகல் 3 மணிக்கு கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். மெஞ்ஞானபுரத்து திருச்சபை மக்கள் ஜாண் தாமஸ் அவர்களின் நற்செய்தி பணியை நினைவுகூர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய அசன பண்டிகை நடத்துகின்றார்கள். இதில் அதை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிகமான பொது ஜனங்கள் ஐக்கிய பந்தியில் கலந்து கொண்டு வருகின்றார்கள்.

இன்று மெஞ்ஞானபுரம் மக்கள் கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு காரணம் இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, மெஞ்ஞானபுரத்திற்கு வந்து, சுவிசேஷம் , சமுதாய நற்பணி , கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றை அளித்த மேலை நாட்டு மிஷனரிகள் என்றால் மிகையாகாது.