மிஷன் காளி ! மிஷன் காலி !!

மிஷன் காளி ! மிஷன் காலி !!

இது எங்கள் சபைகளை உணர்வூட்டவும், உயிரூட்டவும் உந்தியெழுப்பவும் நாங்கள் எங்களுக்குள்ளே பதிவு செய்துகொள்ளும் ஒரு பதிவு..]

“சபையே அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்..” (எரே 6:18) மிஷன் காளியாம் !

மிஷனரி ஸ்தாபனங்களின் ஆணிவேரைப் பிடுங்கும் மிஷன் காளியாம் !
மிஷினரி நடமாட்ட அடியாழம் வரை அடியாட்களால் உருவக்குத்துவாளாம் !

சபையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் படைகளாம் !
ஊழியர்களின் அசைவுகளைப் படம்பிடிக்கும் ஊடகங்களாம் ! கிறிஸ்தவர்களை வீடுவீடாய்க் குறிவைப்பார்களாம் ! அண்டை அயலகத்தார் யாரும் எப்போதும் புகார் தரலாமாம் !

அமைச்சகம் ஒன்று நேரடியாய் இதற்கென்றே இயங்குமாம் !
உள்ளே இதுபோன்று இன்னும் ஏராளமாம் !
காளிக்காகக் களமிறக்கப்பட்டோர் கணக்கில்லையாம் !
கிறிஸ்தவனின் நாடி நரம்பை ஒடுக்கியெடுப்பார்களாம் !

கம்யூனிச ரஷ்யாவில் நடந்தது இதுவே !
பாசிச ஜெர்மனியில் நடந்ததுவும் இதுவே !
வளைகுடா நாடுகளில் நடப்பதுவும் இதுவே !
வாசலில் வந்து நிற்பதுவும் இதுவே !
இனியாவது விழிப்பாயா என் சபையே ?

இப்படித்தான் கிளம்பினான் பார்வோன் என்றொருவன் ! “அவர்கள் பெருகாதபடி உபாயம் பண்ணி ஒடுக்கு !” என்றான்..
“தொடருவேன்..பிடிப்பேன்..
கொள்ளையாடிப் பங்கிடுவேன்..
பட்டயத்தை உருவுவேன்.. சங்கரித்து என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்..”என்று ரதமேறி வந்தான்..
இரவோடிரவாய் ஈயம் போல் ஆழியின் ஆழங்களில் ஆழ்ந்து அழிந்தான்…(யாத்15 : 9)

இன்னொருவன் வந்தான்..
அம்மெத்தாத்தாவின் மகனாம்..
ஆமான் என்று பெயராம்..
“நமது நாடுகளில் ஒருவித ஜனம் பரம்பிப் பரவுகிறது..
அவர்களை இப்படியே விட்டிருப்பது ராஜாவுக்கு நியாயமன்று” என்று கொன்று குவிக்க நாள் குறித்தான் – தூக்குமரம் நாட்டினான்..
“நீ என்ன என் ஜனத்துக்கு நாள் குறிப்பது ?” என்று அவன் குறித்த நாளிலே அவனையே தூக்கிப் போட்டார் -அவன் நிறுத்திய மரத்திலேயே !

அசீரியன் என்றொருவன் அகங்காரமாய் வந்தான் !
சனகெரிப் என்ற பெயரோடும் படையோடும் !
“தன் மலம் தின்று, தன் நீரைத், தானே குடிப்போரே !
இப்போதும் கட்டளையின்றி அழிக்க வந்தேனோ ?
உன்னை அழித்துப் போட உன் கர்த்தரே என்னை அனுப்பினாரென்று..”
சொல்லாத சொல் சொல்லி சுற்றி வளைத்தான்..
ஒரே இரவு – ஒரே தூதன் – ஒரு இலட்சத்து எண்பத்தி ஐயாயிரம் – படையே காலி !
தன் துறட்டை அவன் மூக்கிலும் வாயிலும் போடுவித்து..
தான் வந்த வழியே இழுத்துக்கொண்டு போகப்பட்டு..
அவன் தன் பட்டத்துக் குமாரரின் பட்டயத்தாலேயே மடிவிக்கப்பட்டு..
அவன் தன் தேவர்களுக்கு முன்னால் படையலாய்ப் படைக்கப்பட்டான் அந்த அசீரியன் !

ரோமப் பேரரசின் ஏரோது என்றொருவன் எழும்பினான்..
கிறிஸ்தவர்களைக் கொல்லுவது இவனுக்கு இனிப்பிலும் இனிப்பாம்!
யாக்கோபைக் கொன்ற கையோடு பேதுருவையும் பிடித்தான் !
தனி ஒருவனுக்கு அஞ்சி பதினாறு பேரைக் காவலுக்கு வைத்தான் ! ஒரே ராத்திரி – ஒரே தூதன் – பேதுரு ரிலீஸ் !
இவன் பேசினால் மனுஷ சத்தமல்ல – தேவ சத்தமாம் !
அடித்தான் தூதன் – புழுத்துச் செத்தான் – இந்தக் காற்பங்கு தேசாதிபதி !

இப்படித்தான் “மிஷன் காலனாய்க்” களமிறங்கினான் சவுல் என்றொருவன் !
விசுவாசிகளின் வீடு வீடாய்ப்ப் புகுந்தான் !
சபையைப் பாழாக்கித் திரிந்தான்..
கல்லெறிந்து கொன்று நின்றான் !
என்ன பெருமை! என்ன மமதை! என்ன கர்வம்! என்ன காட்டம் ! வானத்திலிருந்து ஔியொன்று வெட்ட..
வெட்டி வெட்டி இழுத்தான்.. கண்ணிரண்டும் பறிபோனவனாய் !
“சவுலே சவுலே ! முள்ளில் உதைப்பது உனக்குக் கடினமாம்..” என்ற சத்தம் கேட்டுத்..
தட்டுத் தடவி எழுந்தான்..
தன்னையே தந்தான் !

இது கிறிஸ்துவின் சபையா ?
ராஜ படையா ?
யாரைப் பின்தொடர்ந்தாய் ?
யாரை நிந்தித்துத் தூஷித்தாய் ?
யாருக்கு விரோதமாய்க் கொந்தளித்தாய் ?
யாருக்கு நாள் குறித்தாய் ?
யார் மேலே கை போடுகிறாய் ?

சபை காணாத நீரோக்களா ?
அவள் பார்க்காத போப்புக்களா ?
ஹிட்லர் ஆடாத ஆட்டமா ?
லெனினும் ஸ்டாலினும் கொஞ்சமா ?
மாசேதுங்கும், இடி அமீனும், சதாம் உசேனும் எங்கே ?

பரத்திலிருந்து உனக்குக் கொடுக்கப்பட்டாலொழிய
என் மேல் உனக்கு அதிகாரம் ஏதுமில்லை !
இது அசையாக் கன்மலையாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட அநாதி சபையல்லோ ? பாதாளத்தின் வீச்சலைகள் மோதியடிக்கலாம்.. ஆனால் அவைகள் இதை மேற்கொள்ளா !

மோசே ஒருவன் கோலெடுத்தான்.. இஸ்ரவேல் கரை கடந்தது !
எஸ்தர் ஒருவள் எழும்பி நின்றாள்..
காரியம் மாறுதலாய் முடிந்தது !
எசேக்கியாவோடு ஏசாயாவும் துணிந்து நின்றான்..
அசீரியப்படை செத்து ஒழிந்தது !

பேதுருவை சபை தாங்கி நின்றது !
ஏரோது புழுபுழுத்துச் செத்தான் !
ஸ்தேவான் விதையாய் மடிந்தான்..
சவுல் பவுலாய் எழுந்தான் !

மோசே ஒருவன் இருந்ததாலே..
எஸ்தர் என்றவள் எழுந்ததாலே..
எசேக்கியா தேவசமூகம் சென்றதாலே..
சபை திறப்பில் நின்றதாலே..
இவை யாவும் நடந்ததன்றோ ?

தேவஜனமே !
கொரோனாவின் காலம்.. கிருபையின் காலம்..
கோவிட் கடந்தது.. வருடமும் முடிந்தது..
அறுப்புக்காலம் சென்றது.. கோடைகாலமும் முடிந்தது..

இதோ ! சீரிய ராஜா மறுபடியும் வந்தான் !
“மிஷன் காளி” என்ற மறுரூபத்தில் வந்தான் !

இப்போதும் நீ செய்யப் போகிறதை சிந்தித்துக் கொள் !
இக்காலத்தில் மௌனமாயிருந்தால் தப்பிக் கொள்வாயோ ? அமரிக்கையாய் இருந்தால் அழிந்து போகாயோ ?

எழுந்து இராத்திரியிலே முதற்சாமத்திலே கூப்பிடு !
ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு !
இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விட்டு ! ஓய்ந்திராதே !

அவர்கள் கைக்குத் தப்பும்படி அல்ல..
ஓடி ஒளிந்து ஒதுங்கும்படி அல்ல.. பயந்து நடுங்கிப் பதுங்கும்படி அல்ல..

ஆதி அப்போஸ்தலரின் ஜெபமே நமது ஜெபமாகட்டும் !

“இப்போதும் கர்த்தாவே ! அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உமது பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும்..”
(அப் 4:29, 30, 33)

அது மேலறையோ சிறையறையோ
நாம் கூடுமிடம் அசையட்டும் ! அதிரட்டும் !
மிகுந்த பலமாய் சாட்சி தரும் யாவர் மீதும் பூரண கிருபை உண்டாகியிருக்கட்டும் !

“இஸ்ரவேலே நீ பாக்கியவான் ! கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே!
உனக்கு ஒப்பானவன் யார் ?
அவரே உனக்கு சகாயஞ்செய்யும் கேடகமும் மகிமை பொருந்திய பட்டயமுமல்லோ !
உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள் ! அவர்கள் மேடுகளை நீ மிதிப்பாய் !
(உபா 33:29)

ஆனாலும்.. சபையே ! சிங்கம் போலும், கிழச்சிங்கம் போலும் மடங்கிப் படுத்திருக்கும் உன்னை எழுப்புகிறவன் யார் ?

காண்டாமிருகத்துக்கொத்த பெலன் கொண்டு, உன் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களை உன் அம்பு கொண்டு எய்யும் வல்லமை கொண்டவளே !
(ஆதி 49:9 /எண் 23:24/ 24:8,9)

துஷ்டசிங்கம் போலும் பாலசிங்கம் போலும் எழுந்து நிமிர்ந்து நில் !

மிஷன் “காளி”
மிஷன் “காலி” ஆகட்டும் !