பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (எபே. 4:27).

நீங்கள் பிசாசுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்க வேண்டாம். கொஞ்சம் இடம் கொடுத்தாலும், நாளடைவில் முழு இடத்தையும் அவன் கைப்பற்றி விடுவான்.

ஒரு பாலைவனத்தில் ஒட்டகத்தின்மேல் பிரயாணம் செய்த ஒரு வழிப்போக்கன் இரவு குளிராயிருந்தபடியினால் ஒரு சிறிய கூடாரம் ஒன்றை அமைத்து உள்ளே படுத்துக்கொண்டான். இரவில் ஒட்டகம் மெதுவாக அவனை நோக்கிப் பார்த்து, “எனக்கும் அந்தக் கூடாரத்திற்குள் கொஞ்சம் இடம் கொடுக்கக் கூடாதா? குளிரில் நடுங்கித் தவிக்கிறேனே?” என்று கேட்டது. அதற்கு அவன், “உன் சரீரம் முழுவதிலும் கடவுள் ரோமத்தை வைத்து சிருஷ்டித்திருக்கிறாரே! ஆகவே உனக்கு குளிராது, உனக்கு இடம் இல்லை” என்றான்.

அதற்கு ஒட்டகம், “உடல் முழுவதிலும் ரோமம் இருந்தாலும், என் மூக்கில் ரோமம் இல்லாததால் எனக்குக் குளிருகிறது. ஆகவே இந்த மூக்கு மாத்திரம் கூடாரத்திற்குள் வருவதற்கு இடம் கொடு” என்று கேட்டது. அந்த வழிப்போக்கன் இரக்கம் கொண்டு மூக்குக்கு மட்டும் இடம் கொடுத்தான். கொஞ்சம் நேரமானது ஒட்டகம் தன் தலை முழுவதையும் உள்ளே நீட்டிவிட்டு சொன்னது: “மூக்கும் தலையும் இணைபிரியாதது. ஆகவே தலை உள்ளே வந்துவிட்டது. நான் என்ன செய்வேன்?” அந்த வழிப்போக்கனும், மனதிரங்கி பொறுத்துக் கொண்டான். கொஞ்சநேரத்தில் ஒட்டகம் தன் கழுத்தையும் உள்ளே நீட்டிவிட்டது. அதற்குப் பிறகு முன் கால் இரண்டையும் உள்ளே கொண்டு வந்தது. சிறிது சிறிதாக முழு ஒட்டகமும் கூடாரத்திற்குள் பிரவேசித்து, இறுதியில் வழிப்போக்கனை காலால் உதைத்து வெளியே தள்ளி விட்டது. கொஞ்சம் இடம் கொடுத்ததின் விளைவாக அவன் முழுவதுமாக வெளியேற வேண்டியதாயிற்று.

ஆகவேதான் வேதம் உங்களை எச்சரிக்கிறது. இஸ்ரவேல் ராஜாவாகிய சவுல், பொறாமை ஆவியாகிய சாத்தானுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தான். அதை தொடர்ந்து எரிச்சலின் ஆவி அவனுக்குள் வந்தது. முடிவில் அவன் தேவபிரசன்னத்தை இழந்து, தன் ராஜ்யபாரத்தை இழந்து பின்மாற்றக்காரனாய் மரித்தான்.

அனனியா, சப்பீராளைப் பாருங்கள். அவர்கள் தங்கள் ஆஸ்தியை விற்று அப்போஸ்தலர் பாதத்தில் கொண்டு வந்து வைக்கும் வேளையில் கொஞ்சத்தை தங்களுக்கு எடுத்துக்கொண்டால் என்ன என்று எண்ணி பிசாசுக்கு இடம் கொடுத்தார்கள். அதனால் அந்த பணத்தை வஞ்சித்தார்கள். இவ்வளவுக்குத்தான் விற்றோம் என்று பொய் சொன்னார்கள். முடிவிலே தங்களுடைய ஜீவனை நஷ்டப்படுத்தி விட்டார்கள்.

ஒரு நாள் பேதுரு தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்காமல், மனுஷனுக்கு ஏற்றவைகளைச் சிந்தித்தபோது சாத்தானுக்கு இடம் கொடுத்தான். கிறிஸ்துவையே கடிந்துகொள்ள ஆரம்பித்தான். அந்த சூழ்நிலையை கர்த்தர் முளையிலே கிள்ளி எறிய சித்தமானார். ‘எனக்குப் பின்னாக போ சாத்தானே’ என்று கடிந்துகொண்டு சத்துருவை விரட்டினார் (மத். 16:23).

தேவபிள்ளைகளே, மனுஷனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் கிறிஸ்துவுக்கு ஏற்றவைகளையே நீங்கள் சிந்திக்கும்போது தேவ சிந்தை உங்களைப் பரிசுத்தமாய்ப் பாதுகாத்துக்கொள்ளும். பிசாசுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.

நினைவிற்கு:- “மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்” (ரோமர் 8:8,9).