இந்தியாவின் ஜெப அப்போஸ்தலன்

இந்தியாவின் ஜெப அப்போஸ்தலன்

யாவராலும் அண்ணன் என்று அழைக்கப்பட்டவர் தான் பேட்ரிக் ஜோஸ்வா ஐயா அவர்கள். LIC நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். பல விருதுகளை பெற்றவர்.

மேன்மையான செல்வாக்கு அதிகரித்த நிலையில் தேவன் அவரிடம் “மரித்த பின் பணம் கொடுக்கும் கம்பேனிக்கு ஊழியம் செய்ய போகிறாயா? அல்லது வாழ்வு கொடுக்கும் எனக்கு ஊழியம் செய்ய போகிறாயா? என்று கேட்க, தேவ அழைப்பிற்கு கீழ்படிந்து தன் உயர் மேன்மைகளை உதறி விட்டு, தேவனுக்காக ஊழியம் செய்வதை விட உயர்வான வேலை உலகில் இல்லை என்பதை அறிந்து தன் வாழ்நாள் முழுவதும் தேவ சத்தம் கேட்டு சித்தம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒருங்கிணைப்பு இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்து வாழ்நாள் முழுவதும், இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து சபைகள் தோறும், பட்டணங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் ஜெப அலையை வீச செய்தவர். இவர் ஒரு ஜெப அப்போஸ்தலன் என்றால் மிகையாகாது.

மேலும் உலக அளவில் பிரபலமான “நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு” (FMBP) என்று அழைக்கப்படும் மிஷனெரி இயக்கத்தில் 22 வருட காலம் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய மாநில தேர்தல்கள் வரும் போது சிறப்பு ஜெபக்குறிப்புகளை ஆயத்தம் செய்து ஸ்தாபன வேறுபாடுகள் பாராது அனைத்து திருச்சபைகளுக்கும் அனுப்பி தேவ சித்தம் நிறைவேற காரணமாக இருந்தவர்.

வெள்ளைச்சட்டையும் காவி நிற பேண்ட் தான் இவரது அடையாளம். வயது முதிர்ந்த நிலையிலும் நேர் முழங்காலில் நின்று ஜெபிப்பது பழக்கம். எளிமை, தாழ்மை, தன்னடக்கம், ஜெபம், பொறுமை, வேத தியானம், ஆத்தும தரிசனம் இவைகள் தான் இவரது அனுதின வாழ்வின் யதார்த்தமான நிலை.

கர்த்தர் அவர்களுக்கு இம்மண்ணுலகினில் நியமித்திருந்த ஓட்டத்தை வெற்றியோடு முடித்து நீதியின் கிரீடத்தைப் பெற்று விண்ணகத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள்….!

“சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன”. ஏசாயா 52:7

நாமும் இந்த சுவிசேஷகனுடைய அழகான பாதச்சுவடுகளை பின்பற்றி நடப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் அன்பின் அடையாளம்…!

அன்பு சகோதரனுக்காக அவர் வாழ்க்கைக்காக தேவன் அவர் மூலமாய் செய்த கிரியைகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். அவர் நமக்கெல்லாம் கூறிய நல் வார்த்தைகளும் அவருடைய ஆழமான அனுபவங்களும் கண் முன்பாகவே இருக்கிறது. அவர் வாழ்வில் கற்றுக்கொண்ட நல்ல பாடங்கள் நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம். தேவனுக்காய் இறுதிவரை சவால்களை சந்தித்து முன்னேறிச் செல்வோம்.